தியாகம்... பேரன்பு... பெருந்தன்மை... தாய்லாந்து மீட்புப் பணியின் நெகிழ்ச்சித் தருணங்கள்! #ThaiCaveRescueSponsoredமீபத்தில், தாய்லாந்து நாட்டில் நடந்த அந்த அசாதாரணமான மீட்புச் சம்பவம் இந்த உலகத்துக்குப் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. தன்னலமற்ற பேரன்பு, அசாதாரண உழைப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை, மனநிறைவான தியாகம், தாயுள்ளம் என மனிதநேயத்தின் அத்தனை குணங்களையும் இந்த ஒரே ஒரு சம்பவத்தில் உணர்த்தி, தலைநிமிர்ந்து நிற்கின்றனர் தாய்லாந்து மக்கள். 

`தாய்லாந்து நாட்டில் ஒரு சிறிய குகையில் சிக்கிய 13 பேர் மீட்கப்பட்டனர்!' என வெறும் செய்தியாக இதைக் கடந்துவிட முடியாது. ஜூன் 23 முதல் ஜூலை 9 வரை நடந்த இந்த உயிர் போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னால், எத்தனையோ மனிதர்களின் அர்ப்பணிப்பு அடங்கியிருக்கிறது. கால்பந்து பயிற்சியாளரான எகபோல் சந்தாவோங் (Ekapol Chanthawong), 12 குழந்தைகளுடன் சாகசப் பயணமாகச் சென்றபோதுதான் இந்தச் சம்பவம் நடந்தது. 22 நாள்கள் கழித்து மீட்டபோது, 13 பேரில் எகபோல் மிகவும் பலவீனமாக இருந்திருக்கிறார். காரணம், குகையில் சிக்கியிருந்தபோது, மீட்புக் குழுவினரால் கொடுக்கப்பட்ட உணவு மற்றும் ஆக்சிஜனில் தனது பெரும்பாலான பங்கையும் குழந்தைகளுக்கே கொடுத்திருக்கிறார். 25 வயதாகும் இவரின் வாழ்க்கையே துயரங்களை தாண்டி தன்னம்பிக்கை நிறைந்த ஒன்று.

Sponsored


PC: facebook.com/talesofaneducateddebutante

Sponsored


தாய்லாந்து நாட்டில் எகபோல் வளர்ந்த ஒரு சிறிய கிராமத்தைத் தாக்கிய ஒரு கொடிய நோயால், கிராமத்தின் அத்தனை பேரின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கிறது, எகபோலை தவிர. அப்பா, அம்மா, சகோதரர் அனைவரும் இறந்துவிட்டனர். பிறகு, உறவினர் வீட்டில் சில காலம் தங்கினார். எப்போதுமே தனிமை விரும்பியாக இருந்திருக்கிறார். பின்னர், புத்தர் கோயில் ஒன்றில் தியானப் பயிற்சிகளை கற்றுக்கொண்டாராம். பௌத்த துறவியாக சில காலம் இருந்தவர், வட தாய்லாந்தில் தொடங்கப்பட்ட ஒரு  கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளராகச் சேர்ந்தார். ஏழை எளிய மக்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் வாழும் பகுதி அது. 8 மற்றும் 9 வயதுடைய சிறுவர்கள் பலரையும் அணியில் சேர்த்து ஊக்கமளித்துள்ளார். அந்தச் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடவும், கற்றுக்கொடுக்கவும் எகபோலுக்கு மிகவும் பிடிக்கும். 

குகைக்குள் சிக்கியிருந்த நிலையிலும், மீட்புப்பணி குழுவினர் மூலம் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு மிகத் தாழ்மையான மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். `எல்லாச் சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் நான் எழுதிக்கொள்வது... தற்போது குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். இங்கிருக்கும் குழு அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கின்றனர். என்னால் எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு நன்றாகப் பார்த்துக்கொள்வேன் எனச் சத்தியம் செய்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' எனக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

PC: express.co.uk

`இந்தச் சம்பவத்துக்கு நீங்கள் பொறுப்பல்ல. எங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கு மிகவும் நன்றி' எனப் பெற்றோர்களும் பதில் கடிதத்தால் நெகிழச் செய்திருக்கிறார்கள். ஓர் அசம்பாவிதம் நடந்தால், அடுத்தவர்களைக் கைகாட்டி கோபப்படுவது மனித இயல்பு. ஆனால், தங்கள் குழந்தைகள் உயிருடன் திரும்புவார்களா என்கிற அசாதாரண நிலையிலும், பெற்றோர்கள் அளித்த அந்தப் பதில், உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடம். 

12 சிறுவர்களும் மீட்கப்பட்டதும், மருத்துவமனையில் இரண்டு, மூன்று நாள்கள் தனி அறையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால், பெற்றோரைக் கட்டியணைக்க முடியவில்லை. ஆனால், அந்தக் கண்ணாடி அறையிலிருந்து இரு தரப்பினரும் அன்பு முத்தங்களைப் பகிர்ந்துகொண்ட காட்சி உலகம் முழுவதும் ஆனந்தக் கண்ணீரை வரவைத்தது.

இவர்கள் அனைவருமே இந்தச் சம்பவத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால், ஒரு பெண் விவசாயி, தான் வளர்ந்துகொண்டிருந்த நெற்பயிர்களை இந்த விலைமதிக்க முடியாத உயிர்களுக்காகத் தியாகம் செய்திருப்பது தெரியுமா? அந்தக் குகையில் தேங்கியிருந்த வெள்ள நீரை உறிஞ்சி, அருகில் இருந்த நிலத்தில் ஊற்றியிருக்கிறது மீட்புக் குழு. இரண்டு வாரங்கள், பெரிய பம்புகள் வைத்து உறிஞ்சப்பட்ட அந்த 130 மில்லியன் லிட்டர் தண்ணீரும், பெண் விவசாயியான மே புவா சாய்சேன் (Mae Bua Chaicheun) நிலத்தையும் மற்றும் சில விவசாயிகளின் நிலத்தையும் சேதப்படுத்தியிருக்கிறது. 

``நான் சில நாள்கள் முன்புதான் விதைகளை நட்டேன். மீட்புக் குழுவினருக்குச் சமைத்துக் கொடுக்க தன்னார்வலராகச் சென்றிருந்தேன். திரும்பிவந்தபோது, என் நிலம், ஆறாக மாறியிருந்தது. அதனால் என்ன?  நெற்பயிர்களைவிடக் குழந்தைகள்தாம் மிகவும் முக்கியம். பயிர்களை எப்போதும் வேண்டுமானாலும் வளர்த்துக்கொள்ளலாம். குழந்தைகளைத் தவறவிட்டுவிட்டு மற்றொரு முறை வளர்க்க முடியுமா?'' எனப் பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார்.

சுயநலத்துக்காகவும் சுயலாபத்துக்காகவும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், இத்தகைய மனிதநேயர்கள்தாம் இந்த உலகத்தை அன்பு மழையால் வளர்ந்துகொண்டிருக்கின்றனர்.Trending Articles

Sponsored