சிறைக்கம்பிகளுக்குள் கடிதங்களாலான ஒரு வாழ்க்கை... மண்டேலா என்னும் விடிவெள்ளி! #Mandela100



Sponsored



நெல்சன் மண்டேலா, சிறையில் இருந்த காலகட்டம் அது. 1969-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி, மூத்த மகன் டெம்பி இறந்துபோகிறார். மண்டேலாவுக்கு, தகவல் சொல்லப்படுகிறது. சிறைத்துறை அதிகாரிகளிடத்தில் பரோலுக்கு விண்ணப்பித்துவிட்டு அமைதியாகக் காத்திருந்தார். மகனின் முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று உள்மனம் ஏங்குகிறது! சிறை நிர்வாகமோ பரோலில் விட மறுத்துவிட்டது. `உங்களுக்கு பரோல் அளிக்கப்படவில்லை' என்ற தகவல்கூட அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. `பரோல் கிடைத்துவிடும், மகனின் முகத்தைப் பார்த்துவிடலாம்' என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த மண்டேலாவின் கண்களில் நீர் தளும்புகிறது. மகன் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக, சில நாள் கழித்து அவருக்கு வந்த கடிதம் சொன்னது. 

சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு எப்படிப் பொழுதுபோகும்? நெல்சன் மண்டேலாவுக்கு, தனிமைச் சிறை. ஆனாலும், தினசரி மாலை 3:30 மணிக்குத் தன் செல்லின் கதவை அடைத்துவிடுவார். அடுத்த நாள் காலை 5:30 மணிக்குத்தான் மீண்டும் வெளியே தென்படுவார்.

Sponsored


`சீக்கிரமே அறைக்கதவை அடைத்துவிடுகிறீர்களே, என்ன செய்கிறீர்கள்?' என்று அவரிடம் சக கைதிகள் கேட்டால், `கடிதம் எழுதுவதற்கும் படிப்பதற்குமே எனக்கு நேரம் போதவில்லை' என்று பதில் கிடைக்கும். 27 ஆண்டுகள் சிறையில் இருந்த மண்டேலாவை, உயிர்ப்புடன் வைத்திருந்தது கடிதங்கள் மட்டுமே. ஒவ்வொரு விஷயத்துக்கும் கடிதம் எழுதும் வழக்கம் மண்டேலாவிடம் இருந்தது. மண்டேலா சிறையில் இருந்தபோதுதான் அவரின் தாயாரும் இறந்தார். பரோலில் சென்று தாயாருக்கு ஒரு மகனாக இறுதிக்காரியங்களைச் செய்தார். தாயாரை இழந்த சோகத்துடன் சிறை திரும்பிய மண்டேலா செய்த முதல் வேலை... தாயாரின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்ற பலருக்கும் நன்றிக் கடிதம் எழுதியதுதான். 

Sponsored


நெல்சன் மண்டேலாவுக்கு வின்னியுடனான மணவாழ்க்கையில் ஸெனானி, ஷின்ட்ஷி என இரு பெண் குழந்தைகள் உண்டு. 1962-ம் ஆண்டு மண்டேலா சிறைக்குச் செல்லும்போது, ஸெனானிக்கு மூன்று வயது. ஷின்ட்ஷி கைக்குழந்தை. இந்தக் குழந்தைகள் 16 வயதாகும் வரை தந்தையைச் சந்திக்க ஒருமுறைகூட அனுமதி கிடைக்கவில்லை. குடும்பத்தாருடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ள மட்டுமே மண்டேலாவுக்கு அனுமதி உண்டு. கடிதம் என்கிற ரிமோட் கன்ட்ரோல் வழியாகவே இரு பெண் குழந்தைகளுக்கு, மண்டேலாவால் நல்ல தந்தையாக இருக்க முடிந்தது. அவரின் அன்புமிக்க, பாசமிக்க வரிகளை வின்னி மகள்களுக்குப் படித்துக்காட்டும்போது,  குழந்தைகள் `அப்பா எப்போம்மா எங்களைப் பார்க்க வருவார்?' என்று கேட்பார்கள். வின்னியிடம் இந்தக் கேள்விக்கு பதிலே இல்லை. 

ராபன் தீவு சிறையில் மண்டேலா இருந்த சமயம். மகள் ஷின்ட்ஷிக்கு 18-வது வயது பிறந்தது. ஷின்ட்ஷி இளையவள் என்பதால், அவர் மீது  அதீதப் பாசம்.  ஷின்ட்ஷி  டிசம்பர் மாதத்தில் பிறந்தவர். எனவே, உறையின் மீது கிறிஸ்துமஸ் வாழ்த்துடன் மண்டேலா பிறந்த நாள் வாழ்த்துக் கடிதத்தை எழுதியிருந்தார். சிறை நிர்வாகத்தினர் கடிதத்தை ஷின்ட்ஷிக்கு அனுப்பவில்லை. கடிதம் போடப்பட்ட பெட்டியில் அப்படியே கிடந்தது. கடிதம் அப்படியே கிடந்ததைப் பார்த்த இளகிய மனம் படைத்த சிறை அதிகாரி ஒருவர், இந்த விஷயத்தை ஷின்ட்ஷிவிடம் கூறியிருக்கிறார்.

இப்படி, கடிதங்கள் வழியாகவே மண்டேலா சிறைக்குள் வாழ்ந்தார். 

மண்டேலாவுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், `ஒருநாள் நான் விடுவிக்கப்படுவேன்' என்ற நம்பிக்கையிருப்பதாக மகள் ஷின்ட்ஷிக்கு எழுதியுள்ள கடிதத்தில் உறுதிபடக் கூறியுள்ளார். `நான் வீட்டில் இல்லாததால் வெறுமையை உணர்வதாக எழுதியிருந்தாய். எப்போது வீட்டுக்கு வருவீர்கள் என்றும் கேட்டாய். என் டார்லிங்களுக்காக ஒருநாள் நான் வீட்டுக்கு வருவேன். அந்த ஒயிட்  ஜட்ஜ், `மீதி நாள்கள் உனக்குச் சிறைதான்!' என்று கூறினார். ஆனால், நான் ஒருநாள் வீட்டுக்கு வருவேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. உன்னுடன் மகிழ்ச்சிகரமாக என் மீதி நாள்களைக் கழிப்பேன்' என்று வாக்குறுதி அளித்திருந்தார். அவரின் வாக்குறுதியும் நம்பிக்கையும் பொய்க்கவில்லை. 

தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் பெரும்பான்மையினர். வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆட்சி அதிகாரத்தில் வெள்ளையர்களே கோலோச்சினர். 1918-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பிறந்த மண்டேலா, தன் 21-வது வயதிலிருந்து கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடினார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அறவழிப்போர் நடத்தி எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மண்டேலாவை, வெள்ளையர் அரசு கைதுசெய்தது. 

தென் ஆப்பிரிக்காவின் அப்போதைய தலைவரான போந்தா, அவரை விடுவிக்க விரும்பவில்லை. ஆனால், விடுவிக்கக்கோரி உலகம் முழுக்கப் போராட்டங்கள் நடந்தன. `மன்னிப்பு கேட்டால் விடுதலை!' என்று போந்தா அரசு கூறியது. மண்டேலா மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை. அதிபராக இருந்த போந்தா மாறி புதிய அதிபராக பிரெட்ரிக் வில்லியம் டி க்ளார்க் பதவியேற்றார். இவர்தான் மண்டேலாவை விடுவிப்பதாக அறிவித்தார். சொன்னதுபோல் 1990-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி அவரை விடுவித்தார். விடுதலையானபோது அவருக்கு வயது 71. பிற்காலத்தில் தென் ஆப்பிரிக்க அதிபராக அமர்ந்த மண்டேலா, மகள் ஷின்ட்ஷிக்கு `ஒருநாள் வீடு திரும்புவேன்... உன்னுடன் மகிழ்ச்சிகரமாக வாழ்வேன்' என்று கூறிய வார்த்தைகள் உண்மையானவை. 

நெல்சன் மண்டேலா என்ற கறுப்பின மக்களின் விடிவெள்ளிக்கு, இன்று 100வது பிறந்த நாள்! 



Trending Articles

Sponsored