கிரீன்லாந்தில் உடைந்த 6 கிலோமீட்டர் நீளப் பனிப்பாறை.. விளைவுகள் என்ன ?Sponsoredஉலகம் முழுவதும் வெப்பமயமாதலினால் ஏற்படக்கூடிய விளைவுகள் தீவிரமாகத் தொடங்கியிருக்கின்றன. இவ்வளவு காலமும் எதிர்காலத்தில் நடக்கக்கூடும் எனக் கருதப்பட்டு வந்தவை எல்லாம் தற்பொழுது ஒவ்வொன்றாக நிகழத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது பனிப்பாறைகளில் ஏற்படும் பாதிப்பு. உலகம் முழுவதும் பனிப் படர்ந்து காணப்படும் பகுதிகளில் அதன் அடர்த்தி அதிவேகமாகக் குறையத் தொடங்கியிருக்கிறது.

விரைவாக உருகும் பனிப்பாறைகள்

Sponsored


Image Credit- NASA

Sponsored


கடந்த வருடம் அன்டார்டிகாவில் இது வரை இல்லாத அளவுக்கு ட்ரில்லியன் டன்னுக்கும் அதிகமாக எடை கொண்டிருந்த பனிப்பாறை ஒன்று மிகப்பெரிய பனிப்படலத்திலிருந்து உடைந்து பிரிந்தது. அந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது அதைப் போல மற்றொரு பனிப்பாறை பெரிய அளவில் உடைந்திருக்கிறது. ஆனால், இந்த முறை சம்பவம் நடந்தது கிரீன்லாந்தில். வடக்கு  அட்லான்டிக் மற்றும் ஆர்டிக் கடல் பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் அமைந்திருக்கும் மிகப் பெரிய தீவு நாடு கிரீன்லாந்து. உலகத்தில் குறைவான மக்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மக்கள்தான் குறைவே தவிர அங்கே பனிப் படர்ந்திருக்கும் பரப்பளவு அதிகம். அன்டார்டிகாவுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் பனிப்படலம் காணப்படுவது கிரீன்லாந்தில்தான். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் டைனமிக்ஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் கிரீன்லாந்தில் தங்கி கடல் நீர் மட்ட உயர்வு தொடர்பான ஆய்வை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படி அந்த ஆய்வுக் குழுவினரில் ஒருவரான டெனிஸ் ஹாலந்து ( Denise Holland) என்பவரின் மனைவி இந்தப் புதிய பனிப்பாறை உடைவைப் படம் பிடித்திருக்கிறார்.

கடந்த மாதம் 22-ம் தேதி ஹெல்ஹீம் என்ற இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. மலைகளுக்கு இடையே பரந்து விரிந்து கிடக்கும் பனிப்படலத்தில் ஒரு பெரிய பகுதி உடைந்து பிரிவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இதன் பரப்பளவு 6 கிலோமீட்டர் நீளம் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் விளைவை உலகம் முழுவதும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

பனிப்பாறைகள் உடைவது, மலைகளில் படர்ந்திருக்கும் பனி உருகுவது, அதன் அடர்த்தி குறைவது என அனைத்துமே உலக வெப்பமயமாதலின் விளைவுதான் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது அதிகரித்திருக்கிறது. கிரீன்லாந்தில் இதன் விளைவுகள் எப்படி இருக்கிறது என்றால் உடைந்த பிறகு கடலில் மிதக்கத் தொடங்கும் மிகப்பெரிய பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கரைக்கு அருகே வந்து விடுகின்றன.

அப்படி 300 அடி நீளப் பனிப்பாறை ஒன்று கிரீன்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இன்னர்சூட் (Innaarsuit) என்ற கிராமத்தின் கடற்கரையின் அருகே வந்து மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இது போன்று கரையின் அருகே ஒதுங்கும் பனிப்பாறைகளால் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாது. திடீரென அதன் பெரும்பகுதி உடைந்து விழும்போது பெரிய அளவில் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கரைக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு இவ்வளவு பெரிய பனிப்பாறையை தாங்கள் பார்த்ததே கிடையாது என்று கிராமத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். அந்தப் பனிப்பாறை வேறு எங்காவது நகர்ந்து செல்வதற்கு காத்திருக்கிறார்கள். கிரீன்லாந்து ஒரு வழியாக இதைச் சமாளித்துவிடும் என்றாலும் கூட இதன் விளைவு உலகம் முழுவதும் வேறு விதமாக எதிரொலிக்கும். இப்படி வேகமாகப்  பனிப்படலங்கள் உருகி வருவதன் காரணமாக கடல் நீர் மட்டம் உயரக்கூடும். எதிர்காலத்தில் அப்படி ஒன்று நிகழும் போது கடல் ஓரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படலாம் அப்பொழுதுதான் இந்தப் பிரச்னையின் தீவிரம் என்னவென்பதை உலகம் உணரும்.  Trending Articles

Sponsored