``மனைவிக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா மிஸ்டர் ட்ரம்ப்!"



Sponsored



மெரிக்க எல்லையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், காலங்கலாமாக அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தவர்கள் அமெரிக்க குடிமகன்கள் அல்ல... அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஆனால், அவர்களின் குழந்தைகள் அமெரிக்க குடிமகன்கள் என்பதால் அவர்களைப் பாதுகாப்பாக அமெரிக்கா வளர்க்கும் என்று ட்ரம்ப் அரசாங்கம் சட்டம் வகுத்தது அனைவரும் அறிந்ததே. 'இமிக்ரன்ட்' என்ற வார்த்தையே தனக்குப் பிடிக்காது என்பதுபோல கறார் மனிதராக இருந்தார் ட்ரம்ப். ஆனால், அவர் சட்டம் எல்லாம் அமெரிக்க மக்களுக்குத்தானா வெள்ளை மாளிகைக்கு இல்லையா என்பதுபோல ஒரு விஷயம் தற்போது நடந்துள்ளது. 

ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்பின் பெற்றோர்கள் விக்டர் மற்றும் அமலிஜா இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாரபூர்வ அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். இவர்கள் செயின் இமிக்ரேஷன் எனும் குடும்ப உறவினர் சார்ந்த குடியுரிமை மூலமாக அமெரிக்க குடிமக்கள் ஆகியுள்ளனர். இந்தக் குடியுரிமை முறையை தான் வெறுப்பதாகவும் இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றுதான் கடந்த நவம்பர் 2017-ல் ட்வீட் போட்டு முழங்கினார் ட்ரம்ப்.

Sponsored


மெலனியாவின் பெற்றோர்கள் IR-5 எனும் குடும்ப விசா மூலம் அமெரிக்கா வந்தவர்கள். இவர்களின் குடியுரிமை மெலனியா சார்ந்தோ அல்லது வேறு ஒரு குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவரை சார்ந்தோ வழங்கப்பட்டிருக்கலாம். ஒரு குடியுரிமை விண்ணப்பம் அமெரிக்காவில் ஒப்புதல் பெற குறைந்தது 11 முதல் 21 மாதங்கள் வரை ஆகும். ஆனால், இவர்கள் அதிபரின் குடும்பத்தினர் என்பதால் ஏற்பாடுகள் விரைவாக முடிக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

Sponsored


ஆனால், குடியுரிமை அலுவலகமோ எல்லாரையும் போலதான் இவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. எந்தவித சிறப்பு ஏற்பாடுகளும் இல்லை என்கிறது. அதேசமயம் அவர்கள் குடியுரிமை அலுவலகத்துக்கு வரும்போது மட்டும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அது அவர்களின் பாதுகாப்பு கருதி மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இவர்கள் குடியுரிமை பெற்றதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், ட்ரம்ப் 'இந்த முறை தேவையில்லை, இதை நான் வெறுக்கிறேன்' என்று மக்களுக்குக் கூறிவிட்டு, பின்பு அதே முறையில் இவர்களுக்கு குடியுரிமை பெற்றிருப்பதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு ஒரு நியாயம், மனைவியின் குடும்பத்துக்கு ஒரு நியாயமா என அமெரிக்கக் குடியுரிமைக்கு ஆதரவாகப் போராடுபவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

''எனக்கு இன்னைக்குப் பிறந்தநாள். ஆனா, யாருமே விஷ் பண்ணல! அப்புறம் ஒருவர்கிட்ட எனக்கு இன்றைக்குப் பிறந்தநாள்னு சொன்னேன். அவர் அமைதியா விஷ் சொல்லிட்டுப் போய்ட்டார், அவ்வளவுதான்! இங்க யாரும் யாருகிட்டயும் அன்பா பேசக் கூடாதாம்'' என்று கதறிய அமெரிக்கக் குழந்தையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சிறு குழந்தைகள் யாரிடமும் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று கூறி, தாயிடமிருந்து பிரித்து அவர்களை வாழவிடும் ட்ரம்ப் தன் மனைவியின் பெற்றோருக்கு வேறுவிதமாக சலுகைகளை வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி தற்போது அமெரிக்காவில் வலுத்துள்ளது. ஒருவேளை அந்தக் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் குடியுரிமை பெற வெள்ளை மாளிகையில் அவர்கள் வாழ வேண்டுமா என்ற கேள்விகளை ட்ரம்ப்பை நோக்கி வைக்கிறனர் போராட்டக்காரர்கள். 

இந்த விஷயத்தில் வெள்ளை மாளிகை எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. மனைவிக்கு வளையும் சட்டம் ஏன் மக்களுக்கு வளைய மறுக்கிறது. என்னங்க ட்ரம்ப் உங்க சட்டம்?



Trending Articles

Sponsored