இன்று கூடுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம்... இம்ரான் கானின் நிலை என்ன?Sponsoredபாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு, கடந்த மாதம் (ஜூலை 25-ம் தேதி) தேர்தல் நடைபெற்றது. அதில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக, தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டது. அதேசமயம், பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் `தெஹ்ரீக் ஏ இன்சாஃப் கட்சி' 116 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இது, சிறிய கட்சிகளுடன் சேர்ந்து அரசு அமைக்க உள்ளது. 

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கள் கலந்துகொள்ளும் முதல் நாடாளுமன்றக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 13-ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான அழைப்பை அந்த நாட்டின் ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் விடுத்            துள்ளார். இன்று புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள். அந்நாட்டின் அரசு சட்டப்படி, முந்தைய அரசில் அவைத் தலைவராக இருந்த அயல் சாதிக், புதிய எம்.பி-க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். 

Sponsored


இதைத் தொடர்ந்து, புதிய அவைத் தலைவர், துணை அவைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். இவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர்களுக்கும் அயல்சாதிக் பதவிப் பிரமாணம் செய்துவைத்து, பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவார். பின்னர்,  தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகிவிடுவார். 

Sponsored


நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் `பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி' 64 இடங்களைக் கைப்பற்றியது. மற்றொரு முன்னாள் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் `பாகிஸ்தான் மக்கள் கட்சி' 43 இடங்களை வென்றது. இந்த இரு கட்சிகளும் தேர்தலுக்குப் பின்னர் கை கோர்த்துள்ளன. இது, இம்ரான் கான் கட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், இம்ரான் கானின் தலைமை நிர்வாகிகளும் முக்கியத் தலைவர்களும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக, 9 பேரின் ஆதரவு இம்ரான் கானுக்குக் கிடைத்துள்ளது. மேலும், முஸ்லிம் அல்லாதோரின் ஆதரவையும் பெற்றுள்ளார். 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு மொத்தம் உள்ள 342 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பி-க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி, 158 பேரின் ஆதரவு இம்ரான் கானுக்கு உள்ளதால், இன்னும் சிலரின் ஆதரவு அவருக்குத் தேவைப்படும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் இம்ரான் கான் பிரதமர் பதவியை ஏற்பதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
 Trending Articles

Sponsored