வரும் 18-ம் தேதி பதவியேற்கிறார் இம்ரான் கான்: பெரும்பான்மை கிடைக்குமா?



Sponsored



பாகிஸ்தான் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், முதல்முறையாக அந்நாட்டின் நாடாளுமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் (331 பேர்) இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்தக் கூட்டத்தொடரை நடத்துவதற்கு அந்நாட்டு அதிபர் மம்மூன் ஹூசேன் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

பாகிஸ்தான் சட்டப்படி, நாடாளுமன்ற சபாநாயகராக தற்போது இருக்கும் அயாஸ் சாதிக், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்றதன் மூலம், பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரம் 15-வது நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டு விடும்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் (ஜூலை) 25-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) 116 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க உள்ளார்.

Sponsored


மேலும் சிந்து, கைபர் பக்துவ்வா, பலுசிஸ்தான் மாகாணங்களின் சட்டசபைக் கூட்டத்தொடரும் இன்று நடைபெற்றது. மாகாண உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். எனினும், பஞ்சாப் மாகாண சட்டசபையை அதன் ஆளுநர், வரும் புதன்கிழமையன்று கூட்டியுள்ளார்.

Sponsored


மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சிக்கு 116 இடங்களே கிடைத்துள்ள நிலையில், சுயேச்சை உறுப்பினர்கள், சிறிய கட்சிகளின் ஆதரவும் சேர்ந்துள்ளதால், இம்ரான் கானுக்கு ஆதரவு தெரிவிப்போரின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக, தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டது. அதே சமயம், நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமானால் 172 எம்.பி-க்களின் ஆதரவு தேவை. தற்போதுள்ள 158 பேர் தவிர, மேலும் சிலர், கடைசி நேரத்தில் இம்ரான் கானுக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று தெரிகிறது.பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக பி.டி.ஐ கட்சித் தலைவரான இம்ரான் கான், வரும் 18-ம் தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.

மொத்தம் 342 பேரைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முதல்கட்டமாக 331 பேருக்கு பதவி விலகும் சபாநாயகரான அயாஸ் சாதிக், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாகப் பதவியேற்ற உறுப்பினர்கள், வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வின்போது, பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.டி.ஐ. கட்சியின் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரிஃப், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ-சர்தாரி, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் வரும் 15-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் என்று அயாஸ் சாதிக் அறிவித்தார். 

இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சி சார்பில் சபாநாயகர் தேர்தலில் ஆசாத் கய்ஸார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சையத் குர்ஷித் ஷா நிறுத்தப்பட்டுள்ளார். இம்ரான் கானைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்தில் அவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தார். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அவர் அதற்கான இருக்கையில் அமர்வார்.

இம்ரான் கான் தலைமையில் அமையவிருக்கும் அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுவார்கள் என்ற பட்டியல் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்று பி.டி.ஐ. கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் ஷா மெகமூத் குரேஷி வெளியுறவு அமைச்சராகவும், பர்வேஸ் கட்டாக் உள்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராக ஆசாத் உமரும் நியமிக்கப்படுவார்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பிரதமராக இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்படுவார். பிரதமர் தேர்வை புதிய சபாநாயகரே கண்காணிப்பார். பி.டி.ஐ. கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு இம்ரான் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தேர்ந்தெடுக்கப்பட்டதும் வரும் 18-ம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஷாபாஸ் ஷெரீப் நிறுத்தப்பட்டுள்ளார். என்றாலும், இம்ரான் கானுக்கு 158 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால், அவர் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவது உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி, முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் ஆகிய மூன்று கட்சிகளும் இம்ரான் கட்சிக்கு எதிராக கைகோத்துள்ளன. என்றாலும் இம்ரான் கானுக்கு வேறு சில சிறிய கட்சிகளின் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் வெற்றிபெறுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 



Trending Articles

Sponsored