12 வயதில் தாய்மை, நிறவெறி கொடுமை... சோகம் நிறைந்த வாழ்வில் இசையரசியாக நின்ற அரேதா ஃப்ராங்கிளின்!Sponsored``பெண்களான நமக்குள் சக்தி இருக்கிறது. நம்மிடம் பல திறமைகள் இருக்கின்றன. பெண்களுக்கு மரியாதை வேண்டும். ஆனால், நம் சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்தாம் மிகவும் மரியாதை குறைவாக நடத்தப்படுகின்றனர்” 

2016-ம் ஆண்டு, ஒரு சர்வதேசப் பத்திரிகை பேட்டியில் இப்படிக் கூறியிருக்கிறார், `ஆன்மாவின் அரசி’ என்று அரை நூற்றாண்டுகளாகப் போற்றப்பட்ட பிரபல பாப் இசைப் பாடகி அரேதா ஃப்ராங்கிளின். அவர் கடந்த வியாழக் கிழமை அன்று உடல்நலக் குறைவால் தன்னுடைய 76-வது வயதில் மரணமடைந்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள், அரேதாவுடனான தங்களின் நினைவுகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Sponsored


PC: newyorker.com

Sponsored


1960-களில், கடவுளைப் பற்றியும் காதலைப் பற்றியுமே பாடல்கள் வெளிவந்துகொண்டிருக்கையில், ஃப்ராங்கிளினின் அழுத்தமான குரலில், மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் பற்றி ஒலித்த பாடல்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில், பிரபல பாப் பாடகர் ஒட்ஸ் ரெட்டிங் பாடிய `ரெஸ்பெக்ட்' (Respect) ஆல்பத்தின் பாடல் வரிகளை சில மாற்றங்கள் செய்து, இவர் பாடிய பாடல், பெண்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலரும் அந்தப் பாடலை, பெண்ணியத்தின் கீதமாகவே கருதினர். இவரின் பாடல்களில் பெண்ணியம் இருக்கும்; சமூக அக்கறை இருக்கும்; நிறவெறிக்கு எதிரான குரல் இருக்கும்; சமத்துவம் இருக்கும். இத்தகைய புரட்சி கருத்துகளைப் பாடுவதற்கு, அவரின் சொந்த வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களும் முக்கியக் காரணம். ஆரம்ப காலகட்டத்தில், பாட வாய்ப்பு கேட்டு சென்றபோது, அவர் மீது வீசப்பட்ட நிறவெறி கருத்துகளும் சந்தித்த அவமானங்களும் ஏராளம்.

அமெரிக்காவின் மெம்ஃபிஸ் (Memphis) என்ற இடத்தில் 1942 மார்ச் 25-ம் தேதி பிறந்த அரேதா, பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரி. எதிர்பாராவிதமாக குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு 12 வயதிலேயே தாய்மை அடைந்தார். ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். அதன் பின்னரும் பள்ளிக்குத் தொடர்ந்து சென்றார். இவரின் அப்பா தேவாலய போதகராக இருக்கும்போதே, அவருடன் அரேதாவும் பாடத் தொடங்கினார். இயல்பிலேயே அரேதாவுக்கு நல்ல குரல்வளம். அதனால், பள்ளிப் படிப்பை விடுத்து, பாடகியாக வாய்ப்பு தேடத் தொடங்கினார்.

1956-ம் ஆண்டு, சாங்ஸ் ஆஃப் ஃபைய்த் (Songs of Faith) என்ற கடவுள் வாழ்த்து பாடல்களை, தன் முதல் ஆல்பமாக வெளியிட்டார். அப்போது அவருக்கு வயது 14. டெட் ஒயிட் (Ted White) என்பவரை 1961-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கணவரின் கொடுமைகளால், கசப்பான மண வாழ்க்கையை எட்டு ஆண்டுகளில் முடித்துக்கொண்டார் அரேதா. அந்த வாழ்க்கை தந்த அனுபவங்களை, அவரின் பல பாடல்களுக்கான அடிப்படையாக உருவாக்கினார். இவர் பாடிய ரெஸ்பெக்ட் (Respect) ஆல்பம் மிகவும் பிரபலமானது. இரண்டு கிராமி விருதுகளைப் பெற்றுத் தந்தது அந்தப் பாடல். அனைவரும் `குயின் ஆஃப் தி சோல் (Queen of the Soul) அதாவது, ஆன்மாவின் அரசி என்று அன்போடு அழைத்தனர். 

1977-ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஜிம்மி கர்டேர் பதவியேற்றுக்கொண்டபோது, அந்த விழாவை தன் இசை மழையால் நனையவைத்தார். மேலும் இரண்டு அதிபர் பதவியேற்கும் விழாவில் பாடிய பெருமையும் இவரையே சேரும். 1993-ம் ஆண்டு, பில் கிளின்டன் பதிவியேற்பதற்கு இரண்டு நாள் முன்பு நடந்த விழாவில் பாடியிருக்கிறார். 2009-ம் ஆண்டு, பராக் ஒபாமா பதவியேற்பில் இவர் பாடிய பாடலும் அணிந்திருந்த அழகான தொப்பியும் உலகையே கவர்ந்தது.

அதேநேரம், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து சோகங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்துக்கொண்டிருந்தார் அரேதா. முதல் கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கி 10 வருடங்கள் கழித்து, க்ளேன் டர்மேன் (Gylnn Turman) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 1984-ம் ஆண்டுடன் முறிந்தது. ஆனால், தன் நான்கு குழந்தைகளையும் பொறுப்புடன் வளர்த்தார் அரேதா. குழந்தைகளைப் பற்றிக் கூறும்போது, ``இசை, குழந்தை என மனம் இரண்டு இடத்திலும் இருக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது என் குடும்பம்தான் எனக்குப் பெரிதும் உதவியது. ஆனால், அவர்கள் வளர்ந்தவுடன் சுதந்திரமாக இருக்க நினைப்பார்கள். அப்போது நாம் அதை அனுமதிக்க வேண்டும். இது மிகவும் இயல்பான விஷயம்தான். ஆனால், அவ்வளவு எளிதான காரியமல்ல” என்றார்.

PC: pagesix.com

தன் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தார் அரேதா. 2011-ம் ஆண்டில், உடல் எடையை மிகவும் முயற்சி செய்து குறைத்தார். இதுபற்றி ஊடகங்களின் கேள்விக்கு நகைச்சுவையுடன் பதில் அளித்துவிட்டு நகர்ந்துவிடுவார். ஒருமுறை அவரின் உடல் எடை பற்றி நிருபர் ஒருவர் கேட்க, ``யாருக்குத்தான் எடையைப் பற்றிய கவலை இல்லை. உடலின் கனத்தைப் பற்றி கவலையில்லை எனில், பலருக்குத் தலைக்கனம் பற்றின கவலை உண்டு!" என்று நக்கலாகக் கூறியிருக்கிறார்.

இப்படித்தான் மரணம் வரையிலும், தன்னைப் பாதித்த புற்றுநோய் பற்றி எங்கும் வெளிப்படையாகப் பேசியதில்லை. அவர் பேசியவை, பாடியவை அனைத்தும் சமூகத்தைப் பற்றி... சமத்துவத்தைப் பற்றி மட்டுமே!Trending Articles

Sponsored