ஐ.நா-வுக்கு எதிராகச் சீறும் மியான்மர் அரசு... ரோஹிங்கியா மக்கள் கண்ணீர் துடைக்கப்படுமா?!



Sponsored



மியான்மர் நாட்டில் வாழ்ந்து வரும் பல சிறுபான்மை இனங்களுள் ரோஹிங்கியா மக்களும் அடங்குவர். மியான்மர் நாட்டின் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையில் ரோஹிங்கியா மக்கள்தான் பெரும்பான்மையாக இடம்பிடித்துள்ளனர். அந்நாட்டின் ரக்கைன் மாநிலத்தின் வட பகுதியில் அதிகளவில் இவர்கள் வாழ்த்து வருகின்றனர். ஆனாலும், இவர்கள் 'வங்கதேசத்திலிருந்து அத்துமீறிக் குடியேறியவர்கள்' என அரசால் முத்திரை குத்தப்பட்டு குடியுரிமை மறுக்கப்பட்டவர்கள். உலகிலேயே அதிகத் துன்பத்துக்கு ஆளாகும் சிறுபான்மை இனமாக இருந்து வருகின்றனர். 1982-ம் ஆண்டு முதல் மியான்மர் அரசாங்கத்தால் இவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது. 

ரோஹிங்கியா மக்களுக்கு ஆதரவாகப் போராடுவதற்காக மியான்மர் அரசுக்கு எதிராக உருவான அர்சா இயக்கம், ஆகஸ்ட் 2017-ம் ஆண்டில் நிகழ்த்திய தாக்குதலில் 24 காவல்துறையினர் உட்பட 71 பேர் பலியானார்கள். இதையடுத்து மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கிய மக்கள் மீது நடத்திய உடனடித் தாக்குதலில் 730 குழந்தைகள் உட்பட 6,700 ரோஹிங்கியா மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வெளியான குற்றச்சாட்டுகளுக்கு, பதிலளிக்கும் வகையில் மியான்மர் ராணுவம் ஓர் உள்விசாரணை அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பு ஜோடித்ததை வைத்து நவம்பர் 2017-ம் ஆண்டிலேயே மறுப்பும் தெரிவித்தது. அக்காலகட்டத்தில் எந்தவொரு பத்திரிகைகளையும் அவர்கள் செய்தி சேகரிக்கவும், வெளியிடவும் அனுமதிக்கவில்லை. இவ்வளவு ஏன்... ஐ.நா.,வின் உண்மைக் கண்டறியும் குழுவையும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

Sponsored


'அம்னெஸ்டி இன்டர்நெஷனல்' போன்ற அமைப்புகள் அப்போதிலிருந்தே ரோஹிங்கியா மக்கள் மீது தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு மியான்மர் அரசு உயரதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தின. இந்த நிலையில், நூற்றுக்கணக்கான வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்திய மியான்மர் மீது கடுமையானக் கண்டனங்களை வைத்துள்ளது. கடந்த 12 மாதங்களில் ரோஹிங்கிய மக்கள் மீது ராணுவம் கட்டவிழ்த்து விட்ட வன்முறையில் கிட்டத்தட்ட 7 லட்சம் ரோஹிங்கிய மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்கிறது ஐ.நா அறிக்கை. மேலும், ஆறு மூத்த ராணுவ அதிகாரிகளைக் குறிப்பிட்டுள்ள ஐ.நா. 'அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளது. அது மட்டுமின்றி 'ரோஹிங்கியா மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கச் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்' என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியை கடுமையாக விமர்சித்துள்ளது. 

Sponsored


``இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம். மியான்மர் அரசாங்கம் 'வன்முறையில் ஈடுபட்ட போராளிகளை மட்டும்தான் தாக்கினோம்' என்று சொல்வது அபத்தம். ஏனெனில், அறிக்கை தெள்ளத்தெளிவாக 'ரோஹிங்கியா மக்கள் மீது கொலை, பாலியல் வன்முறை போன்ற அருவருக்கத்தக்க நடவடிக்கைகளை ராணுவம் நிகழ்த்தியிருக்கிறது' என்று கூறுகிறது. மியான்மர் ராணுவம் என்ன சொன்னாலும் அது கூட்டு பாலியல் வன்முறையையும், குழந்தைகளைக் கொல்வதையும், கிராமங்களைக் கொளுத்துவதையும் நியாயப்படுத்தவே முடியாது. ஐ.நா.-வின் உண்மைக் கண்டறியும் குழுவுக்கு மியான்மரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டாலும், நேரில் பார்த்த சாட்சிகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள், காணொளிகள், புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டே ரோஹிங்கியா மக்கள் மீதான ராணுவ வன்முறையை அறிக்கையில் நிறுவுகிறோம்" என்று காட்டமாக கூறியிருக்கிறது ஐ,நா சபை.  

``மியான்மரின் உயரதிகாரிகள் விசாரணைக்குட்பட வேண்டும்" என்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை மறுத்துள்ளது மியான்மர் அரசாங்கம். அரசாங்கப் பிரதிநிதி ஸா ஹ்டே கூறுகையில் ``மனித உரிமை ஆணையம் கொண்டு வந்த எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் ஏற்கவில்லை. மனித உரிமை மீறல்களுக்கு இடம் கொடுப்பவர்கள் நாங்கள் இல்லை. நாங்கள் ஐ.நா-வின் உண்மைக் கண்டறியும் குழுவை அனுமதிக்கவே இல்லை. அதனால்தான் நாங்கள் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானங்களை ஏற்க மறுக்கிறோம். எங்கள் நாட்டில் சுதந்திரமாகச் செயல்படும் விசாரணைக் குழு இருக்கிறது. அவர்கள் ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகள் எங்கள் மீது வைத்த அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு தக்கப் பதிலடி கொடுப்பார்கள்" என்று கூறியிருக்கிறார். மேலும், ஐ.நா சபை, ஆங் சான் சூகியை பதவி விலகுமாறு கூறி கடுமையாக விமர்சித்துள்ளது.

ஐ.நாவின் அழுத்தம் ரோஹிங்கிய மக்களுக்கு விடிவை ஏற்படுத்துமா?



Trending Articles

Sponsored