வேட்டைக்காரர்களால் தாயை இழந்து தவிக்கும் குட்டி காண்டாமிருகம் `ஆர்தர்’!Sponsoredஇறந்து கிடக்கும் தாய் காண்டாமிருகத்துக்கு அருகில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடும் குட்டி காண்டாமிருகத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தென்னாப்பிரிக்காவின் க்ருகெர் தேசிய பூங்காவில் (Kruger National Park) தாய் காண்டாமிருகமும் அதனுடைய குட்டியும் வேட்டைக்காரர்களால் தாக்கப்பட்டுக் கிடப்பதை வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்து மீட்டனர். ஆனால், அதற்குள்ளாகவே தாய் காண்டாமிருகம் உயிரிழந்துவிட்டது. தாய் காண்டாமிருகத்தின் இரு கொம்புகளும் வேட்டைக்காரர்களால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் அரிதான வெள்ளைக் காண்டாமிருகங்கள். தாய் காண்டாமிருகத்தின் அருகில் முதுகு, கால்கள் என உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்து கிடந்துள்ளது அந்தக் குட்டி காண்டாமிருகம். கொம்புகளுக்காகத் தாய் காண்டாமிருகத்தை வேட்டையாடியவர்கள், பிறந்து ஒரு மாதம் மட்டுமே ஆன குட்டி காண்டாமிருகத்துக்குக் கொம்புகள் வளராததால் கொல்லாமல் விட்டுச் சென்றுள்ளனர்.

Sponsored


அந்தக் குட்டியை மீட்ட வனத்துறை அதிகாரிகள் காண்டாமிருகங்களைப் பாதுகாக்கும் அமைப்பிடம் ஒப்படைத்தனர். குட்டி காண்டாமிருகத்துக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அதைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்கின்றனர். ஓரளவுக்கு சரியாகியிருக்கும் குட்டி காண்டாமிருகத்துக்கு ஆர்தர் (Arthur) எனப் பெயரிட்டுள்ளனர். ஆர்தர், தன் தாயை மறக்காமல் இன்னும் ஒலியெழுப்பி வருகிறது. அதைக் கேட்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது என்கின்றனர். ஆர்தரை இன்னும் முழுவதுமாகக் குணப்படுத்த நிதி உதவிக் கேட்டு வருகின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த சவுத் லேக்ஸ் சஃபாரி ஸூ (South Lakes Safari Zoo) ஆர்தருக்காக நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆர்தரின் சிகிச்சைக்காக 1600 யூரோவை மாதம் மாதம் தருவதாக உறுதி அளித்துள்ளது சஃபாரி ஸூ. மேலும், இதற்கென தனியாக `ஆர்தர் ஆர்மி’ என்ற குழுவையும் தொடங்கி சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டும் பணிகளையும் தொடங்கி இருக்கின்றனர். 

Sponsored


கடந்த மே மாதம் 20-ம் தேதி தாய் காண்டாமிருகம் வேட்டையாடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு, குட்டி ஆர்தருக்கு நிதி திரட்டுவதற்காக அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது மீண்டும் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. காண்டாமிருகத்தின் கொம்புக்காகக் கொடூரமாக வேட்டையாடப்படுவது அதிகமாக நிகழ்ந்து வருகிறது. அதைத் தடுக்க தென்னாப்பிரிக்க அரசு முடிந்த முயற்சிகளை எடுக்க வேண்டும்.

Photos: SWNSTrending Articles

Sponsored