ரோஹிங்யா விவகாரத்தில் ராய்ட்டர் செய்தியாளர்களைக் கண்டித்த மியான்மர்... இருவருக்குச் சிறை!



மியான்மரில் ரோஹிங்யா மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து செய்தி வெளியிட்ட ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இரு செய்தியாளர்களுக்கு, 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மியான்மரில், புத்த மதத்தினரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இங்கு உள்ள ரக்கைன் மாகாணத்தில் 70 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களை, மியான்மர் அரசு இரண்டாம் தர குடிகளாகவே நடத்துகிறது. மேற்கு வங்கத்திலிருந்து தங்கள் நாட்டுக்குள் புகுந்துள்ளதாக இவர்களை மியான்மர் அரசு கருதுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ரக்கைன் மாகாணத்தில் புத்த மக்களுக்கும் ரோஹிங்யா மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதையடுத்து ரோஹிங்யா மக்கள் மீது மியான்மர் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. ரக்கைன் மாகாணத்தில் வசித்த ரோஹிங்யா மக்கள், உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு உயிர் தப்பினால் போதுமென அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

Sponsored


வன்முறைச் சமயத்தில் ரக்கைன் மாகாணத்தில் உள்ள இன்தின் என்கிற ரோஹிங்யா கிராமத்தில் இளைஞர்கள் சிலர் கடும் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து, யாங்கூன் (ரங்கூன்) நகரத்தில் பணிபுரிந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வா லுன் (Wa Lone) - 32, கியாவ் சோ ஓ (Kyaw Soe Oo) - 28 ஆகியோர் புலனாய்வுச் செய்தியாக வெளியிட்டனர். செய்தியாளர்கள் மீது ஆத்திரம்கொண்ட மியான்மர் அரசு, அவர்களைக் குறிவைத்தது. `உங்களுடன் டின்னர் சாப்பிட்டுக்கொண்டே ஒரு விஷயத்தை டிஸ்கஸ் செய்ய வேண்டும்' என யாங்கூன் நகர போலீஸ் அவர்களை வரவழைத்து கைதுசெய்து சிறையில் அடைத்தது. கடந்த டிசம்பர் முதல் செய்தியாளர்கள் இருவரும் சிறைவாசம் அனுபவித்துவருகின்றனர்.

Sponsored


Sponsored


உள்நாட்டு விஷயங்களை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்றதாக இவர்கள் மீது யாங்கூன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. யாங்கூன் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், `இரு செய்தியாளர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை' என இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நீதிபதி யீ லெவின், ``இரு செய்தியாளர்களும் உள்நோக்கத்துடன் அரசின் செயல்பாட்டுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்'' என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இரு செய்தியாளர்களின் குடும்பத்தினரும் நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் கண்ணீர்விட்டு அழுதனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தத் தண்டனைக்காகச் செய்தியாளர்கள் பயப்படவில்லை. சிறைக்குள் அடைப்பதற்கு முன் கியாவ் சோ ஓ, ``அரசாங்கம் எங்களைப் பிடித்து சிறையில் தள்ளிவிடலாம். மக்களின் கண்களை மூடிவிட முடியாது. காதுகளையும் அடைத்துவிட முடியாது'' என்று ஆவேசத்துடன் தெரிவித்தார். வா லூன், ``தீர்ப்பை எதிர்த்து உறுதியுடனும் தைரியத்துடனும் போராடுவோம். நான் எந்தத் தவறும் இழைக்கவில்லை. எனக்கு ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கையுள்ளது'' என்றார்.

தங்கள் செய்தியாளர்களுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதால் ராய்ட்டர்ஸ் நிறுவனம் அதிர்ந்துபோயுள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எடிட்டர் இன் சீஃப் ஸ்டீபன் ஜெ.ஆல்டர், ``உலகச் செய்தியாளர்களுக்கு இன்று துக்கதினம். செய்தி நிறுவனங்களைப் பயமுறுத்தவே இத்தகைய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார். 

ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தி என்ன?

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இன்தின் கிராமத்தில் 10 ரோஹிங்யா முஸ்லிம் மக்களை ராணுவ வீரர்கள் பிடித்துக்கொண்டு வந்தனர். செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணிக்குள் இவர்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். ராணுவம் அந்தப் பத்து பேரையும் `தீவிரவாதிகள்' என்று சொல்கிறது. இன்தின் கிராமத்தில் வசித்த ரோஹிங்யா மக்கள் 200 பேர், மியான்மர் ராணுவத்துக்குப் பயந்து கிராமத்தைவிட்டு வெளியேறி கடற்கரைப் பகுதியில் பதுங்கியிருந்தனர். அவர்களைக் கண்டுபிடித்த ராணுவம், அதிலிருந்து 10 பேரை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி அழைத்துச் சென்றுள்ளது. இன்தின் கிராமத்தைச் சேர்ந்த புத்த மக்களும் ராணுவத்துடன் சேர்ந்துகொண்டு ரோஹிங்யா மக்களைச் சித்ரவதை செய்துகொன்றுள்ளனர். `ரோஹிங்யா மக்களின் ஆடு-மாடுகளையும் பறித்து, ராணுவ வீரர்கள் விற்பனை செய்கின்றனர். ரோஹிங்யா மக்களின் சொத்துகளையும் சேதப்படுத்துகின்றனர்' என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

உள்ளூரைச் சேர்ந்த ரக்கைன் புத்த மக்கள், பஞ்சாயத்துத் தலைவர், மியான்மர் ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களின் பேட்டியுடன் இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மூன்று புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. புகைப்படத்தில் ரோஹிங்யா மக்கள் முட்டிப் போட்டவாறு அமர்ந்துள்ளனர். அவர்களுக்குப் பின்னால் சிலர் துப்பாக்கியுடன் நிற்கின்றனர். ரோஹிங்யா மக்கள் கொன்று குவிக்கப்பட்ட புகைப்படமும் அதனுடன் வெளியிடப்பட்டு இருந்தது.



Trending Articles

Sponsored