`அவரைப் பார்த்துதான் வளர்ந்தேன்'‍ - கிராண்ட்ஸ்லாம் நாயகன் ஃபெடரரை வீழ்த்திய ஆஸி வீரர் நெகிழ்ச்சிSponsored2018 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் எதிர்பாராத திருப்பமாக, போட்டியிலிருந்து ரோஜர் ஃபெடரர் வெளியேறியுள்ளார்.


 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. செர்பியன் வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் நடால், ஸ்விஸ் வீரர் ஃபெடரர், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஆகிய நான்கு நட்சத்திர வீரர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த கிராண்ட்ஸ்லாம் தொடரில் களமிறங்கினர். 

உலகின் இரண்டாவது முன்னணி வீரரான ஃபெடரர் காலிறுதிக்குத் தகுதிபெறும் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்லிமேனிடம் மோதினார். 29 வயதாகும் ஜான் மில்லிமேன் உலகின் முன்னணி வீரர்கள் பட்டியலில் 55-வது இடத்தில் இருப்பவர். ஃபெடரருக்கு இவர் டஃப் கொடுக்க மாட்டார் என ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், அசரடிக்கும் ஆட்டத்தால் ஃபெடரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிவிட்டார் மில்லிமேன்.  6-3, 5-7, 6-7, 6-7 என்ற செட் கணக்கில் பெடரர் எதிர்பாரா தோல்வியை தழுவியுள்ளார்.  ஃபெடரின் டென்னிஸ் வரலாற்றில், இன்றைய ஆட்டம் ஒரு கறுப்பு புள்ளிதான். 

Sponsored 

Sponsored


ஒட்டுமொத்த அரங்கத்தையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மில்லிமேன் ஆட்டம் முடிந்ததும் பேட்டியளித்தார். ‘இந்த வெற்றியை என்னால் நம்பவே முடியவில்லை. ஃபெடரர் என் ஹீரோ. அவரைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். இன்று அவரின் மோசமான நாள் என்றே சொல்வேன்’ என்றார்.

ஃபெடரர் பேசுகையில் ‘இன்று போல் என்றுமே நான் வெப்பத்தை உணர்ந்ததில்லை. என் உடல் வியர்த்துக்கொண்டே இருந்தது. ஆட்டம் முழுவதும் என் உடலில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. என்னால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை’ என்றார். 

ஃபெடரர் இதுவரை 14 முறை யு.எஸ் ஓபனில் விளையாடியிருக்கிறார். காலிறுதிக்கு முன்னரே வெளியேறியது இது இரண்டாவது முறை. ஃபெடரர்  20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். இன்றைய ஆட்டம் முடிந்ததும் சோர்வான முகத்துடன் அரங்கிலிருந்து விடைபெற்ற ஃபெடரரை ரசிகர்கள் கனத்த இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். 

`ஆஸ்திரேலியாவுக்கு புதிய ஹீரோ  கிடைத்துவிட்டார்’ என்று அந்நாட்டு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். Trending Articles

Sponsored