வெளிநாட்டவர்களுக்கு கத்தாரின் ஆச்சர்ய சலுகைகள்! திடீர் முடிவுக்கு என்ன காரணம்?Sponsoredகத்தாரில் உள்ள வெளிநாட்டவர்கள், இனி நிரந்தர குடியுரிமை பெற முடியும். அரபு நாடுகளில் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் நடைமுறை இல்லை. ஆனால், இதை கத்தார் அரசு தகர்த்துள்ளது. வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கத்தார் அரசு முன்வந்துள்ளது.  


 

வளைகுடா நாடுகளில் அதிக அளவிலான வெளிநாட்டவர் வசிக்கின்றனர். ஆனாலும் அங்கு நிரந்தர குடியுரிமை பெறுவது மிக மிகக் கடினம். கடந்த ஆண்டு ,கத்தார் அமைச்சரவை வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் முன்மொழிவுக்கு அனுமதியளித்தது. கடந்த ஆண்டு அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதாவின்படி, கத்தார் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாட்டவரின் குழந்தைகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கத்தாரில் உள்ள நிறுவனங்களில் சிறப்பாகப் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கும், கத்தாரில் வசிக்க நிரந்தர அனுமதி வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  ஆனால், இந்த மசோதாவுக்கு உள்நாட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, ஒரு சில நிபந்தனைகளின் கீழ்  வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கத்தார் அரசு முடிவுசெய்துள்ளது.  

Sponsored 

Sponsored


கத்தாரின் மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானி இன்று வெளியிட்ட  ஆணையில், ஓர் ஆண்டுக்கு 100 வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின்படி,  நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்கள், கத்தாரின் அனைத்து நலத்திட்டங்களையும் அனுபவிக்கலாம். குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, சுகாதார வசதி, சொத்து வாங்கும் உரிமை என அனைத்துக்குமே அவர்கள் தகுதிபெறுவார்கள். மேலும், நிரந்தர குடியுரிமை கோரும் வெளிநாட்டவர்கள், 20 ஆண்டுகள் கத்தாரில் குடியிருந்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் போதுமான வருமானம் பெற வேண்டும். 

கத்தாரின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? கடந்த ஆண்டு கத்தார் ஒரு நெருக்கடியான சூழலைச் சந்தித்தது. சவுதி, ஐக்கிய அரபு  அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கத்தார் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டின.  கத்தார்மீது  பல்வேறு தடைகளை விதித்தன. இந்த நெருக்கடியான சூழலில், வெளிநாட்டவர்கள் பலர் கத்தாரை விட்டு வெளியேறினர். இது, மேலும் நெருக்கடியை அதிகரித்தது. இதனால், கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு  சில வசதிகளைச் செய்து தர கத்தார் அரசு முடிவு செய்தது. பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. இந்த நிரந்தர குடியுரிமைக் கொள்கையும்  அதன் நீட்சிதான். கத்தாரில் உள்ள 2.7 மில்லியன் மக்கள்தொகையில் 90 சதவிகிதத்தினர் வெளிநாட்டவர்கள்தான். எனவே, இந்த நிரந்தர குடியுரிமை வழங்கும் சட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. Trending Articles

Sponsored