இன்னும் 12 ஆண்டுகள்தாம் பாங்காக் நகரத்தின் ஆயுள்... என்ன பிரச்னை?



Sponsored



காலநிலை மாற்றம் தொடர்பான உரையாடல்களுக்கு பாங்காக் தயாராகி வருகிறது. உலகின் மிக முக்கிய நகரமாக அறியப்படும் பாங்காக், ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுடன் பரந்து விரிந்து கிடக்கும் பெருநகரம். இந்த நகரத்தைப் பற்றிய எதிர்கால கணிப்புகள் இன்னும் மோசமாக இருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் பாங்காக் நகரமே மூழ்கிவிடும் அபாயம் உள்ளது என அதிர்ச்சியூட்டுகிறார்கள். . 

அடுத்த ஆண்டு இறுதியில் போலந்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா காலநிலை மாநாட்டுக்கு முன்தயாரிப்பாக தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் செவ்வாய்க்கிழமையிலிருந்து காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது. அவற்றில் காலநிலை மாற்றம் தொடர்பான முக்கிய விஷயங்களை விவாதித்துள்ளனர். மேலும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பது குறித்தும் இதனால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவி செய்வது குறித்தும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதும் முக்கியக் குறிப்புகளாக உரையாடப்பட்டது. 

கடுமையான வெப்பநிலை உயர்வு, வழக்கத்துக்கு மாறான காலநிலை, மிக வலுவான புயல்கள், ஒழுங்கற்ற பருவநிலை, இடைவிடாத கன மழை, கடுமையான வறட்சி, கடுமையான வெள்ளம் போன்றவை சமீப காலங்களில் அதிகமாக ஏற்படுகின்றன. காலநிலை மாற்றமே இதற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும் 2015 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தை அனைத்து அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது. இன்னும் பொறுமையாக பாரிஸ் ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நிறைய ஊர்கள் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் இருக்கிறது. இப்பொழுதே சில தீவு நாடுகளின் கடல் மட்டம் உயர்ந்து மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இப்படிக் காலநிலை மாற்றத்தின் காரணமாக அகதிகள் உருவாகி வருகின்றனர். 

Sponsored


பாங்காக் நகரமானது கடல் மட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்துக்கு ஒரு சதுப்பு நிலத்தில் உருவாக்கப்பட்டது. இதனாலேயே உலகின் கடுமையான நகர்ப்புற பகுதிகளில் ஒன்றாக பாங்காக் அறியப்படுகிறது. இதன் கூடவே தென்கிழக்கு ஆசியாவின் நகரங்களான ஜகர்த்தாவும் மணிலாவும் இணைந்துகொள்கிறது. 

Sponsored


"மிகக் கடுமையான மழைப்பொழிவு மற்றும் வானிலை நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றங்களினால் பாங்காக் நகரத்தில் கிட்டத்தட்ட 40 சதவிகித நகரமானது 2030 தொடக்கத்துக்குள் அழிந்துவிடும்" என உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது. 

தற்போது பாங்காக் நகரம் வருடத்துக்கு ஒன்றிலிருந்து இரண்டு சென்டிமீட்டர் வரை மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் மிகக்கடுமையான வெள்ளம் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது என்கிறது சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ். 

தாய்லாந்து வளைகுடாவுக்கு அருகில் உள்ள கடல்களின் நீர் மட்டம் வருடத்துக்கு நான்கு மில்லி மீட்டர் அளவுக்கு உயருகிறது. உலக அளவில் உள்ள சராசரி கடல்மட்ட உயர்வை விட இது அதிகம். 

கடந்த 2011-ல் பருவகாலத்தில் ஏற்பட்ட வெள்ளம் கடந்த பத்து ஆண்டுகளில் மோசமானது. பாங்காக் நகரத்தின் ஐந்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருந்தது. தாய்லாந்தின் மற்ற பகுதிகள் பாதிக்கப்படவில்லை. அப்போது வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500. 

ஒழுங்காகக் கவனிக்கப்படாத நகரமயமாக்கல் மற்றும் கடற்கரையைச் சரியாகப் புரிந்துகொள்ளாததும்தான் பாங்காக்கின மிக அதிகமான பாதிப்புகளுக்கு காரணம் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் பாங்காக்கின் அசுர வளர்ச்சிக்காக இயற்கையைப் பலி கொடுத்ததும் காரணம் என்கின்றனர். 

காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்கும்விதமாக பாங்காக் அரசு 2600 கிமீ நகரக் கால்வாய்களை உருவாக்கியுள்ளது இதன் மூலம் நகரத்தில் ஏற்படும் வெள்ளம், கடல் நீர் மட்ட உயர்வு போன்றவற்றைச் சமாளித்துவிடலாம் என நம்புகிறது. இந்தக் கால்வாயின் மூலம் தண்ணீரை பம்பிங் செய்வதுதான் திட்டம். ஆனால் அதிக அளவில் கடல்நீர் நகருக்குள் வந்தால் இதனாலும் பலனில்லை. எனவே தாய்லாந்தும், பாங்காக்கும் ஐ,நாவின் காலநிலை மாநாட்டை அதிகம் நம்பியுள்ளனர். வளர்ந்த பணக்கார நாடுகள் பாதிக்கப்படும் நாடுகளுக்கு பொருளாதாரரீதியாக உதவ வேண்டும் என்பதும் பாரிஸ் உடன்படிக்கையை எல்லா நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவர்களின் பெரிய கோரிக்கையாகும்



Trending Articles

Sponsored