உலகின் முதல் `டெஸ்ட் ட்யூப்' சிங்கக் குட்டிகள் எப்படி இருக்கின்றன?



"உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் அழிவினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. அதனால் அவற்றைக் காக்க வேண்டும்" என ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலியலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து தங்கள் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வந்தனர். அதன் பலனாக ஒரு வாரத்துக்கு முன்னர் முதல்முறையாகச் செயற்கை கருவுறுதல் மூலம் இரண்டு சிங்கக்குட்டிகள் பிறந்திருக்கின்றன. இந்த ஆராய்ச்சியானது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைக் காக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Sponsored


தென் ஆப்பிரிக்காவில் உள்ள உக்டுலு கேம் ரிசர்வ் மற்றும் கன்சர்வேஷன் மையத்தில் (Ukutulu Game Reserve and Conservation Centre) செயற்கைக் கருவுறுதல் ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து பெரிய வகை பூனைகளுக்குச் செயற்கைக் கருவூட்டல் சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதன் ஆரம்பகட்டமாக ஓர் ஆண் சிங்கத்தின் விந்துவை எடுத்து பெண் சிங்கத்தினுள் செலுத்தினர். மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண் சிங்கமானது இரண்டு ஆரோக்கியமான குட்டிகளைப் பெற்றெடுத்திருக்கிறது. புதிதாகப் பிறந்த இரண்டு குட்டிகள், ஆரோக்கியமாகத் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன. 

Sponsored


விக்டர் மற்றும் இசபெல் என்ற இரண்டு பெண் சிங்கக்குட்டிகள் டெஸ்ட்யூப் முறையில் பிறந்திருக்கின்றன. இந்தச் சாதனையானது உலக அறிவியல் வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இத்தொழில்நுட்பம் மூலம், அழிவின் விளிம்பில் இருக்கும் புலி மற்றும் பனிச்சிறுத்தை போன்ற பெரிய பூனை வகைகளைக் காக்க முடியும் என்று அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Sponsored


"மனிதர்களின் தற்போதைய நடவடிக்கைகள் விலங்குகளை அதிகமாகப் பாதித்திருக்கிறது. அதனால் விலங்குகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அழிவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அதிலும் பெரிய வகை பூனை இனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் காக்க ஒரே வழி செயற்கைக் கருவுறுதல்தான் என்று முடிவு செய்தோம்.  சிங்கத்தின் மீது செயற்கைக் கருவூட்டல் நடத்தலாம் என்று முடிவு செய்து அதற்கான வழிவகைகளையும், சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்தோம்.  அதன்படியே தற்போது வெற்றி காணப்பட்டுள்ளது" என்கிறார், பிரிட்டோரியா மம்மல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஆண்ட்ரே கன்ச்வின்ட்.

இத்திட்டத்தின் முக்கிய ஆராய்ச்சியாளர் டாக்டர் இசபெல் கல்லியல்டா பேசும்போது, ``இப்போது கிடைத்துள்ள வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தபடியாக பெருமளவில் பெரிய பூனை வகைகளில் இதை நடத்தவிருக்கிறோம். சிங்கங்களுக்குச் செயற்கைக் கருவூட்டல் செய்வது இப்போதுதான் முதன்முறையாக நடந்திருக்கிறது. இந்தப் புள்ளியிலிருந்து எங்களின் பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். விலங்குகளில் செயற்கைக் கருவூட்டல் ஆராய்ச்சியை மேற்கொள்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. முதற்கட்டமாக அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய பெரிய பூனைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்" என்கிறார். 

செயற்கைக் கருவூட்டல் மூலம் பிறந்த குட்டிக்கு ஆராய்ச்சியாளர் இசபெல்லின் பெயரையே சூட்டியிருக்கிறார்கள். இப்போது அந்த இரண்டு குட்டிகளையும் தாய் சிங்கம் அன்புடன் பராமரித்து வருகிறது. பெண் சிங்கமும், அதன் குட்டிகளும் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்களின் கண்காணிப்பில் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சியைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆசியக் காடுகளில் 4,000க்கும் குறைவான புலிகள், மத்திய ஆசியாவின் மலைகளில் 7,000க்கும் குறைவான பனிச்சிறுத்தைகள், ஆப்பிரிக்காவில் 18,000 சிங்கங்கள் எனக் குறைவான எண்ணிக்கையில் சில முக்கிய மிருக இனங்கள் தவிக்கின்றன. ஸ்பெயினில் இருக்கும் சுமார் 300 வகையான காட்டுப் பூனை இனங்களில், சில இனங்கள் அழியும் தருவாயில் இருக்கின்றன. இவற்றின் இனப்பெருக்கத்துக்கு வழிவகை செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது, இந்த ஆராய்ச்சி.



Trending Articles

Sponsored