‘மென்பொருளி‘ல் இருந்து ‘உண்பொருள்‘ நோக்கி!

Vikatan Correspondent
பசுமை

ப த்தாம் வகுப்பு படித்து விட்டாலே மடிப்பு கலையாத சட்டை, பேன்ட் போட்டு... காலரை தூக்கி விட்டுக் கொண்டு ‘கலெக்டர் வேலை பார்க்கறதுக்காகத்தான் நான் பொறந்திருக் கேன்’ என்று ‘வெள்ளைச் சட்டை' வேலைக்காக அலைகிற காலமிது. ஆனால், கம்ப்யூட்டர் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவர், திடீரென எல்லாவற்றையும் உதறிவிட்டு, குடும்பத்தோடு நாடு திரும்பி, பேருந்து போக்குவரத்து கூட இல்லாத குக்கிராமத்தில் நாலுமுழ வேட்டியோடு விவசாயம் பார்த்துக் கொண்டிருக் கிறார் என்றால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியுமா?

பெயரில் ஆத்தூர் இடம்பெற்றிருந்தாலும் அந்த ஊரிலேயே கிடைக்காத 'ஆத்தூர் கிச்சடி சம்பாவை' பொத்தி பாதுகாக்கிறார் பாலாஜி சங்கர் என்று கடந்த இதழில் படித்திருப்பீர்கள். 'அட' போட வைக்கும் அவரின் கதையை அடுத்த இதழில் பார்க்கலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த பாலாஜி சங்கர்தான் ஆச்சர்யத்துக்குரிய மனிதர்.

கோயம்புத்தூர் அருகில் இருக்கும் துடியலூரைச் சேர்ந்த பாலாஜி சங்கரின் குடும்பமே படிப்பாளி குடும்பம்தான். பாலாஜியும் அவரின் அண்ணனும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள். தங்கை எம்.எஸ்.சி. கணிதம். இப்படிப்பட்ட சூழலில் இருந்துதான் விவசாயம் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார் பாலாஜி.

''எல்லோருமே பாதுகாப்பான வேலை... பக்கவான சம்பளம் என்றுதான் காலத்தை நகர்த்துவார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று சொல்லப்படும் விவசாயத்தை எப்படி விரும்பினீர்கள்?'' என்ற கேள்வியோடுதான் அவரைச் சந்தித்தோம். ‘‘விவசாயம்தான் உலகத்திலேயே மிகமிக பாதுகாப்பானது என்று நான் நம்புகிறேன். பல்லாயிரம் வருடங்களாக தன்னை நம்பிய எல்லோருக்கும் சாப்பாடு போட்டு வாழவைத்த இந்த பூமித்தாய், எதிர்கால சந்ததியை மட்டும் காப்பாற்றாமல் விட்டுவிடுவாளா என்ன? எதிர்காலத்துக்கும், போட்ட முதலுக்கும் பயமில்லாத ஒரு பாதுகாப்பு விவசாயத்தில்தான் இருக்கிறது.

பாதுகாப்பான முதலீடுகள் என்று சொல்லப்படுகிற எதில் முதலீடு செய்தாலும் அதிகபட்சம் 12% வட்டி கிடைக்கும். ஆனால், விவசாயத்தில் நிச்சயமாக எந்த தப்பும் இல்லாமல் குறைந்தது 24% கிடைக்கும். 2002-ம் வருடம் நான் விவசாயத்தில் இறங்கியது முதல், இன்று வரைக்கும் இந்த அளவு ஆதாயம் அடைந்து கொண்டு வருகிறேன். அதனால்தான் விவசாயம்தான் பாதுகாப்பானது என்று அழுத்தமாகச் சொல்கிறேன்’’ என்று சொன்ன பாலாஜியை விழிகளால் நாம் வியந்து பார்த்தபடி இருக்க... கம்ப்யூட்டர் மவுஸிலிருந்து விலகி, கழனியில் கை வைத்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

‘‘ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஓய்வு நேரங்களில் நிறைய புத்தகங்கள் படிப்பேன். ராச்சேல் கார்சன் எழுதிய 'சைலன்ட் ஸ்பிரிங்' ( Silent spring ) என்ற ஆங்கில புத்தகத்தில், பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீமைகளைப் பற்றி படித்துவிட்டு, அதிர்ச்சியில் உறைந்து போனேன். அதேபோல, ஷூ மேக்கர் எழுதிய 'ஸ்மால் ஈஸ் பியூட்டிஃபுல்' ( Small is beautiful ) என்ற புத்தகமும் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு, சென்னையில் நடந்த இயற்கை விவசாய கருத்தரங்கு ஓன்றும் என்னை ரொம்பவே யோசிக்க வைத்து விட்டது.

அதன் பிறகு ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 200 விவசாயிகளை சந்தித்துப் பேசினேன். அவர்கள் யாருமே விவசாயம் செய்து லாபமடையவில்லை என்பது என்னை வேதனை கொள்ள வைத்தது. ஏன் இந்த அவலம் என்று, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரை சந்தித்துப் பேசியபோது தான், இயற்கை விவசாயம் செய்தால் எல்லோராலும் லாபம் அடைய முடியும் என்பது புரிந்தது. அத்தோடு மண்ணின் வளத்தையும் காப்பாற்றி எதிர்கால சந்ததிக்கும் அதை ஒப்படைக்க முடியும் என்பதும் தெரிந்தது.

இதைப் பற்றி இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ள 'கிடாத்தலைமேடு' சேதுராமன் என்பவரை சந்தித்தேன். வயல், வீடு, கொல்லை என்றே வாழ்பவர் அவர். அவரிடம் நேரடி அனுபவம் பெற்றேன். இயற்கை விவசாயம் செய்து லாபம் பெற முடியும் என்பதை வார்த்தைகளால் உலகுக்குச் சொல்வதை விட, வாழ்ந்தே சொல்லி விடலாம் என்று முடிவெடுத்து நானே விவசாயத்தில் இறங்கினேன்’’ என்று சொல்லி, தன்னுடைய வயலில் நடக்க ஆரம்பித்தார்.

தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து... நிலத்தின் விலை, நீர்வளம், தொழிலாளர் வளம் என எல்லாம் ஒட்டுமொத்தமாக அமையும் இடமாக தேடியிருக்கிறார். மயிலாடுதுறை அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில் நகரிலிருந்து மேற்கே பத்தாவது கிலோ மீட்டரில் உள்ள மேலாநல்லூர் கிராமத்தைத் தேர்வு செய்திருக்கிறார். (நந்தனாரின் சொந்த ஊர் இதுதான் பார்க்க பெட்டிச் செய்தி) இரண்டு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி விவசாயத்தை ஆரம்பித்தவர், இப்போது பத்து ஏக்கராக வளர்த்திருக்கிறார். முழுக்க இயற்கை விவசாயம்தான். வயலில் விளையும் பொருட்களைக் கொண்டே 'கம்போஸ்ட்' உரம் தயாரித்து வயலுக்கு போடுகிறார். ஏக்கருக்கு 1,500 கிலோ வரை நெல்லில் மகசூல் செய்கிறாராம். பெரும்பாலும் பாரம்பரிய விதைகளையே தேடிபிடித்து பயிர் செய்கிறார். தானே அரிசியாக அரைத்து விற்பனை செய்கிறார். சென்னையில் இருக்கும் இவரின் நண்பர்கள் வீட்டு உலையில் கொதிப்பது... இவருடைய வயலில் விளைந்த அரிசிதான்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகம் முழுக்க விவசாயிகளைத் தேடிப்பிடித்து சந்தேகங்களுக்கு தெளிவு பெற்ற பாலாஜியை நோக்கி, இப்போது விவசாயிகள் தேடி வந்த வண்ணம் இருக்கிறார்கள் தங்களின் சந்தேகங்களை போக்கிக்கொள்ள.

‘‘நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் பாதுகாப்பான உணவைத் தருகிறோம் என்கிறபோது ஏற்படுகிற திருப்தி, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் போது கூட கிடைக்கவில்லை. இப்பவும் நான் விவசாயிகளுக்கு என்ன சொல்கிறேன் என்றால், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அதைவைத்து ஒரு குடும்பம் நிம்மதியாக நன்றாக வாழ முடியும். இயற்கை விவசாய முறையில் செலவில்லாம விவசாயம் செய்யவேண்டும்... அவ்வளவுதான். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி தொழில் நுட்பம் தேவைப்படாது. எல்லா மண்ணிலும் எல்லா பயிரும் பண்ண முடியும். எல்லாவற்றையும் மண்ணே பார்த்துக் கொள்ளும்’’ என்று சொல்லும் பாலாஜி, தன் மனைவி காயத்ரியை நினைத்துதான் நெகிழ்ந்து போகிறார்.

''சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் பெரிய நகரத்தில வாழ்ந்தவர். மாதம் மாதம் ஒன்றரை லட்ச ரூபாயை செலவழித்து குடும்பம் நடத்தியவர். இப்போது என்னுடன் இந்தச் சின்ன கிராமத்தில் சின்ன வீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவில் குடும்பத்தை நடத்துகிறார். அவங்க மட்டும் ஒத்துழைப்பு கொடுக்காமல் போயிருந்தால், ஏதோ ஒரு நாட்டில் எந்திரத்தனமாக வேலை பார்த்துக் கொண்டு, செயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்திருப்பேன்.

பொய்யில்லாத ஒரு வாழ்க்கை, கட்டுப்பாடில்லாத ஒரு சுதந்திரம், ஆரோக்யமான உடல்நலம், எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல அடித்தளம் என என்னால் வாழ முடிவதற்கு முக்கிய காரணமே காயத்ரிதான்'' என்று சொன்ன பாலாஜி,

''திட்டமிட்டு காரியங்களை செய்ய ஆரம்பித்து விட்டால், கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வேலைவாய்ப்புக்கு செல்லும் தற்போதைய நிலை மாறும். கிராமத்தில் அவ்வளவு வேலை வாய்ப்பு ஏற்படும். என்னை போல் வெளிநாட்டுக்கு சென்ற பலரும் தாய் நாட்டுக்கு திரும்புவார்கள். இன்னும் சொல்லப் போனால், மற்ற நாட்டவர்க்கு நாம் வேலைக்காக விசா கொடுக்கலாம். அதற்கு அரசும் விவசாயிகளும்தான் மனது வைக்க வேண்டும்’’ என்று சொல்லி விடை கொடுத்தார்.

எதையுமே நம்ப முடியாத நிலையில், நம்மை நாமே கிள்ளிப்பார்த்துக் கொண்டுதான் அங்கிருந்து கிளம்பினோம்.

பாலாஜி, தற்போது வைத்திருக்கும் நிலத்தில் சில பகுதிகள் அந்தக் காலத்தில் நந்தனாரின் முதலாளிக்குச் சொந்தமானவையாம். பாலாஜியின் நிலத்துக்குப் பக்கத்தில் 'பத்துக் கட்டு' என்ற பெயருடன் கூடிய நிலப் பகுதி பரமநாதன் பிள்ளை என்பவரிடம் உள்ளது. இதுவும் நந்தனாரின் முதலாளிக்குச் சொந்தமாக இருந்ததாம்.

சிதம்பரம் கோயிலுக்குப் போகவேண்டும் என்று நந்தனார் சொன்னபோது, 'பத்துக் கட்டு நாத்தையும் நட்டுட்டு போ' என்று முதலாளி உத்தரவிட, நொந்து போய்விடுவார் நந்தனார். பத்துக் கட்டு நாற்றுகளை கிட்டத்தட்ட ஒரு ஏக்கரில் நடவு செய்ய முடியும். நந்தனாரின் வாட்டத்தைப் போக்க, பூத கணங்களை விட்டு இரவோடு இரவாக இறைவனே நடவு செய்தார் என்பது புராணம். அதனாலேயே 'பத்துக் கட்டு' என்ற பெயரில் இன்றும் அந்தப் பகுதி அழைக்கப்படுகிறதாம்.

 
SCROLL FOR NEXT