cartoon

பாலைவனத்தை வளமாக்க 1,000 கி.மீ நீர் சுரங்கப்பாதை அமைக்கும் சீனா... பிரம்மபுத்திராவுக்கு பாதிப்பா?!


உலகைப் படைத்தது இறைவன்; அதில் வேலியைப் போட்டவன் மனிதன். அனைத்து வளங்களும் மனிதனுக்கு சமமாக கிடைக்க வேண்டும் என்பதே இயற்கையின் அடிப்படை. ஆனால், சிந்தனையில் சீழ் பிடித்ததன் காரணமாக தேக்கி வைக்கவும் பதுக்கவும் கற்றுக்கொண்டான் மனிதன். `வலியன வாழும்' என்று பிறர் நாட்டின் வளங்களை அபகரிக்கவும் கற்றுக்கொண்டான். 

பிரம்மபுத்திரா. திபெத்தில் உற்பத்தியாகும் இந்த நதி, இந்தியாவின் வழியாகப் பாய்ந்து ஓடி வங்கதேசத்துக்குள் செல்கிறது. இந்த நதி திபெத்தில் ட்ஸாங்போ (Tsango) என்றும் இந்தியாவில் லோஹித் அல்லது பிரம்மபுத்திரா என்றும் வங்காளதேசத்தில் ஜமுனா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா.

பிரம்மபுத்திராவிலிருந்து நீரை திசை மாற்றும் திட்டத்தில் இப்போது இறங்கியுள்ளது சீனா. இது, இரண்டு ஆசிய அண்டை நாடுகளுக்கும் பதற்றத்தை உண்டாக்கும் திட்டம். சீனப் பொறியாளர்கள் திபெத்திலிருந்து தரிசு நிலமான சின்ஜியாங் (Xinjiang) வரை செல்வதற்கு ஆயிரம் கிலோமீட்டர் சுரங்கப்பாதையை உருவாக்க சோதனை செய்துவருகின்றனர். இந்தத் திட்டம் தெற்கு திபெத்தில் உள்ள யார்லுங் சங்போ ஆற்றிலிருந்து தண்ணீரை திசைத் திருப்பி, இந்தியாவின் பிரம்மபுத்திராவிலிருந்து சின்ஜியாங்கில் உள்ள டக்ளமகான் பாலைவனத்தில் நுழைகிறது. 

"உலகின் மிக உயர்ந்த பீடபூமியிலிருந்து நீர்வீழ்ச்சிகளால் இணைக்கப்படும் இந்தச் சுரங்கப்பாதை சின்ஜியாங்கை கலிபோர்னியாவைப் போல மாற்றும்" என்று சீனா அறிவித்தது. 

சின்ஜியாங் சீனாவின் மிகப்பெரிய மாகாணம். வறண்ட புல்வெளிகள் நிறைந்த உயிர்கள் வசிக்காத பாலைவனம்.  திபெத் - சின்ஜியாங் செயலாக்கத் திட்டத்தின் மூலம் சீனாவின் யுன்னான் பகுதியில் 600 கிலோமீட்டர் சுரங்கப்பாதை அமைக்க சாத்தியம் உள்ளதா என முதலில் சோதிக்கப்பட்டது. 

"மத்திய யுனானிலிருந்து நீரை திசைத் திருப்பும் திட்டம் ஒரு செயல் விளக்கத் திட்டமாகும்" என்று ஜாங் குவான்சிங் என்பவர் கூறினார். இவர் Chinese Academy of Sciences 'Institute of Rock and Soil mechanics -ல் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். சீனாவின் பல நீர் சுரங்கப்பாதைகள் அமைக்கும் திட்டத்தில் குவான்சிங் முக்கியப் பங்கு வகித்தார் என்று கூறப்படுகிறது.  

“நாங்கள் ஒரு சரியான தீர்வைப் பெற முடிந்தால் திபெத்திலிருந்து சின்ஜியாங்குக்கு நீரைப் பெறுவதற்கு எதிராக உள்ள பொறியியல் தடைகளை அகற்ற உதவும்" என்றும் குவான்சிங் கூறியுள்ளார்.  

கடந்த சில ஆண்டுகளில் சீனா ஆபூர்வமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளது. இதில் சில கட்டமைப்புகளை திபெத்திலும்  நடைமுறைப்படுத்தியுள்ளது. திபெத்தில் ஒரு ரயில் பாதையை உருவாக்கக்கூடும் என யாரும் நினைத்ததில்லை. ஆனால், சீன அரசாங்கம் இதைச் செய்து காட்டியுள்ளது. எனவே, சீனா சுரங்கப்பாதை கட்டியெழுப்புவதுகுறித்து எந்த  சந்தேகமும் இருக்கக்கூடாது என  (Lobsang Yangsto)  லாப நோக்கமற்ற கூட்டணியில் ஆராய்ச்சி கூட்டாளியாகப் பணிபுரியும் லாப்சங் யாங்க்ஸ்கோ என்பவர் கூறினார். 

திபெத் பூகம்பம் ஏற்படும் பகுதி. அதனால் இந்தத் திட்டம் ஒரு பெரிய இயற்கை பேரழிவுக்கும் வழிவகுக்கலாம் என்றும் எச்சரிக்கைகள் கிளம்பியுள்ளன.

தற்போது இந்தியா, சீனா மற்றும்  பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே எந்த ஒரு நீர் ஒப்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றிற்கான முக்கிய நீர் ஆதாரமாக பிரம்மபுத்திரா விளங்குகிறது. கடந்த காலங்களில் இந்தியா, சீன அரசாங்கம் யார்லங் ட்ஸாங்போவில் அணைகள் (Yarlung Tsangpo) கட்டப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுப்பியது. 

இந்தத் திட்டம்குறித்து இந்தியா ஒரு வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் இல்லையெனில்,  இந்தத் திட்டம் இந்தியாவுக்கும் வங்காள தேசத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.