cartoon

அதிகாரத்தையும் கையில் எடுங்கள் பெண்களே! - ஃபேஸ்புக் சி.ஓ.ஓ-வின் எழுச்சிக் குரல்

டந்த மூன்று மாதங்களில் ஹாலிவுட் மற்றும் அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வார்த்தை என்றால் அது #Metoo தான். திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல், பணியிடத்தில் பிரச்னை எனப் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை #Metoo ஹேஷ்டேக்கில் கொட்டித் தீர்த்தனர். இதற்கு ஃபேஸ்புக் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க்கும் விதிவிலக்கல்ல. கோல்டன் க்ளோப் மேடையில் விருது வாங்கிய ஓப்ரா வின்ப்ரேயின் உரை பாராட்டி பதிவிட்டுள்ள ஷெரில் சான்ட்பெர்க் “இந்த உரையின் அற்புதமான வரிகளை பாராட்ட வேண்டும் என்றால் எல்லா வரிகளையும் பாராட்ட வேண்டும். இந்த உரை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஹாலிவுட் பெண்களின் குரல் உலகம் முழுக்க ஒலித்திருக்கிறது. தரான புர்கே, ஏய்ஜீன் பூ ஆகியோருடன் கரம் கோத்து போராட வேண்டிய தருணம் இது என்று பதிவிட்டிருந்தார். 

சில வாரங்களுக்கு முன் ஷெரில் சான்ட்பெர்க் தனது பணியிடத்தில் தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை மிக நீண்ட பதிவாக வெளியிட்டிருந்தார். அதில் அவர் விவரித்த சில சம்பவங்கள் நெஞ்சை அதிர வைப்பவையாக இருந்தன. “ஒரு முக்கியமான கலந்துரையாடலின் போது மேஜையின் அடியிலிருந்து ஒரு கை என் கால்களைத் தொட்டது. அந்தச் செயலில் ஈடுபட்ட நபர்  திருமணமான ஆண். அவர் என்னை விடப் பல மடங்கு வயது மூத்தவர். அவர் செய்த காரியம் என்னை உறையவைத்தது. இன்னும் சிலர் என் பணியில் நான் மேன்மேலும் உயர ‘அறிவுரை’ தருவார்கள், ‘பணியில் சிறந்து விளங்குவது எப்படி’ என்பதை என்னுடன் தனியாகப் பகிர்ந்து கொள்வதற்காக அழைப்பு விடுப்பார்கள். இவை அனைத்தும் இரவு நேரத்தில்தான் நிகழும்.

ஒரு முறை கலந்துரையாடலில் ஒரு ஆணுடன் நான் இரவு உணவை உண்ண மறுத்த பின்பு, அவர் நள்ளிரவில் என் அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்தார். அந்த அகால வேளையில் நான் பாதுகாவலரை அழைக்கும் வரை என் அறைக்கதவைத் தொடர்ந்து பலமாகத் தட்டிக்கொண்டிருந்தார்” எனத் தன் வாழ்வின் மோசமான அத்தியாயங்களைப் பதிவுகளாகச் சொல்கிறார்..

“ நான் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட எல்லாச் சூழல்களிலும், என்னிடம் அத்துமீறிய ஆண்கள் என்னை விட அதிகாரம் கொண்ட பதவிகளில் இருந்தனர். அது தற்செயலானது அல்ல. அவர்கள் கைகளில் இருந்த அந்த அதிகாரம்தான் அந்த எல்லையைத் தாண்டி வந்து அவர்களை அத்துமீறத் தூண்டியது". பணியிடங்களில் பெண்களை விட அதிகாரம் உள்ள ஆண்கள், அத்துமீற தங்கள் கைகளில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கக் காரணம் என்று சாண்ட்பெர்க் தெரிவித்திருக்கிறார். இதற்கு ஆதாரமாக அவர் காட்டுவது, பணியில் அவர் உயர உயர, இது போன்ற சம்பவங்கள் அரிதான நிகழ்வாக மாறியது.

ஆனால், எல்லாப் பணியிடங்களிலும் பெண்கள் வேலை பார்ப்பது அவசியம் என்றும் அவற்றுள் பலர் அதிகாரம் உள்ள பதவிகளில் அமரும் தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் அவர் நம்புகிறார்.

“அதிகாரம் பல பெண்களின் கைகளுக்குப் போனால் நாம் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளும் முடிவுபெற்றுவிடும் என்று நான் கூறவில்லை, ஆனாலும் பல நல்ல விஷயங்கள் நடக்கும் என நான் நம்புகிறேன். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், நம் கண்ணுக்கு அகப்படாமல் இருக்கும் பலர் கண்டெடுக்கப்படுவார்கள், அது உண்மையில் சரியான திசையில் நாம் எடுத்து வைக்கும் முக்கியமான அடியாக இருக்கும்” என்றார்.

ஹாலிவுட் மட்டுமன்றி கார்ப்பரேட்களிலும் பெண்களின் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஷெரில் சான்ட்பெர்க்கும் ஒப்ரா கூறியது போல இனி  #Metoo என்ற வார்த்தையே விவாதத்துக்கு உள்ளாகாமல், பெண்களுக்குப் பாதுகாப்பான உலகை உருவாக்குவோம் என்று கூறியிருக்கிறார். அதிகாரம்தான் பெண்களை நோக்கி தவறான செயல்களை அனுமதிக்கிறது என்றால் அந்த அதிகாரத்தையும் பெண்கள் கையில் எடுக்க வேண்டும் என்பதே ஷெரில் சாண்ட்பெர்க்கின் குரல்...