சில்லறை வர்த்தகம்: அனைத்து கட்சி கூட்டம் தோல்வி

Vikatan Correspondent
Investment / Mutual Fund

புதுடெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்பட்டவில்லை.

இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்கட்சிகளுடன் பேசித் தீர்வு காண்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணப் முகர்ஜி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.

இக்கூட்டத்தில் பிஜேபி மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா, திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுகவின் மைத்ரேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் முடிவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும், மத்தியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுகவும் வலியுறுத்தின.

எனினும், மத்திய அரசின் முடிவில் மாற்றமில்லை என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், எந்த இறுதி முடிவும் எடுக்கப்படாமல் இந்தக் கூட்டம் முடிவடைந்தது.

SCROLL FOR NEXT