Miscellaneous

காணாமல்போன ஏரி, யானைக்கு மருத்துவம் பார்த்த முன்னோர்... மரபு நடைப்பயணத்தில் கிடைத்த அரிய தகவல்கள்!

ம்நாட்டில் புராதனச் சிறப்பு மிக்க ஆலயங்களுக்குக் குறைவேயில்லை. மிகப் பழைமையான அத்தகைய கோயில்கள், வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமில்லாமல், கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்க்கும் கேந்திரங்களாகவும் திகழ்ந்தன. அவை பற்றிய வரலாற்று ரகசியங்கள், மற்றும் கலைப் பொக்கிஷங்களைத் தேடி அறிந்துகொள்வதில் ஏற்படும் ஆர்வம் அலாதியானது. அப்படி ஆர்வம் கொண்டிருப்பவர்களுடன் நாம் செல்லும்போது பல அரிய வரலாற்றுத் தகவல்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், கோயில்களில் காணப்பட்டும் கல்வெட்டுகளைப் படித்து அதன் விவரங்களைத் தெரிந்துகொள்வது, சிற்பங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை, அதை எப்படி அடையாளம் காண்பது, திருக்கோயில்களுடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகள் போன்றவை பற்றி அறிந்துகொள்ளவும், பள்ளிக் குழந்தைகளுக்கும், மக்களுக்கும் விளக்கவும், 'மரபு நடைப் பயணம்' மேற்கொண்டிருக்கின்றனர் சோழர் வரலாற்று ஆய்வுச் சங்கத்தினர்.

இந்த அமைப்பினர் விழுப்புரம் மாவட்டத்தில் மரபுநடைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிந்து, நாமும் அவர்களுடன் பயணித்தோம்.

விழுப்புரம் மற்றும் புதுவையில் அமைந்திருக்கும் கோயில்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், மற்றவர்களுக்கு விளக்கவும் கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கை ராகவன், புலவர்.வெங்கடேசன் ஆகியோர் வந்திருந்தார்கள்.

திருவாண்டார் - பஞ்சநாதீஸ்வரர் கோயில் சிற்பங்கள்

முதலில் புதுவையிலிருந்து சுமார் 24 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் மதகடிப்பட்டு திருகுண்டாங்குழிக் கோயிலுக்குச் சென்றோம். முழுவதும் கருங்கற்களால் ஆன இந்தக் கோயில் முதலாம் ராஜராஜன் காலத்தில் எழுப்பப்பட்டது. முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோர் அளித்த நிவந்தம் பற்றி பல கல்வெட்டுகள் கோயிலில் காணப்படுகின்றன. 'இராஜராஜர் எடுப்பித்த திருக்கற்றளி திருகுண்டாங்குழி மகாதேவர்...' என்று தொடங்கும் கல்வெட்டு, ராஜராஜ சோழன் கட்டிய கோயில் என்பதற்குச் சான்றாக இருக்கிறது. கல்வெட்டு ஆய்வாளர்கள் கல்வெட்டுகளை வாசித்ததுடன், மற்றவர்களுக்கும் வாசித்தும் காட்டியதுடன் கோயில் கட்டுமானம் பற்றியும் விளக்கினார்கள்.

அடுத்ததாகச் சென்றது திருவாண்டார்கோயில் திருபஞ்சநாதீஸ்வரர் கோயில். முதலாம் பராந்தகன் காலத்தில் எழுப்பப்பட்ட கோயில் இது என்கிறார்கள். கோஷ்டத்தில் காணப்படும் சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் இருந்தன. கோஷ்டங்களில் காணப்பட்ட சிற்பங்களான லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், பிச்சாண்டவர் சிற்பங்களைப் பற்றியும், அவற்றை எப்படி அடையாளம் காண்பது என்பது பற்றியும் ஆய்வாளர்கள் விளக்க, பார்வையாளர்கள் அனைவரும் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்.

தொடர்ந்து தற்போது திருப்புவனை என்று அழைக்கப்படும் ஊரில் அமைந்திருக்கும் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். முற்காலத்தில் அந்த ஊருக்கு வீரநாராயண விண்ணகரம் என்று இருந்ததாக ஒரு கல்வெட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. தோதாத்ரிநாதர் கோயில் என்றும் அழைக்கப்படும் அந்தக் கோயில் பராந்தகர் மனைவியின் பெயரில், 'திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்களம்' என்று அழைக்கப்படுகிறது. ராமாயண நிகழ்ச்சிகள், கண்ணனின் லீலைகள், ஜேஷ்டாதேவி என்னும் மூத்ததேவியின் சிற்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கினார்கள்.

தேவை ஏற்பட்ட வேளையில் யானைகளைப் பயன்படுத்திய மக்கள், அதற்கு உடல் நிலை குன்றிய காலங்களில் மருத்துவம் பார்த்த சிற்பம் ஒன்று, இங்குக் காணக் கிடைக்கும் அதிசய சிற்பங்களுள் ஒன்று. சோழர்கள் சைவத்தைப் பின்பற்றினாலும் அவர்கள் வைணவத்தையும் போற்றினார்கள் என்பதற்குச் சான்றாக இந்தத் திருக்கோயில் விளங்கிக் கொண்டிருக்கிறது.

அங்கிருந்து எண்ணாயிரம் சிங்கபெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கோயிலில் 340 மாணவர்கள் படித்த ஒரு வேதக் கல்லூரி இருந்ததற்கான சான்றினை விளக்கியபோது, நமக்கு அந்தக் காலத்தில் சிறப்புடன் திகழ்ந்த கல்லூரி ஒன்றில் நிற்கும் பிரமிப்பே ஏற்பட்டது.

ராஜேந்திர சோழரால் எடுப்பிக்கப்பட்ட எசாலம் அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கற்றளி. பல முக்கியமான செப்பேடுகளும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்ட இடம் இது. இன்றளவும் பல வரலாற்று ஆதாரங்களுக்கு அடிப்படையாக எசாலம் செப்பேடுகள் திகழ்கின்றன.

அங்கிருந்து எண்ணாயிரம் பிரம்மதேசத்தில் அமைந்திருக்கும் பாடலீசுவரர் கோயிலுக்குச் சென்றோம். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் கலைநயத்துடனும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இருந்த அதிரூப சுந்தர துவாரபாலர்கள் சிற்பத்தைப் பற்றி விளக்கினார்கள். இங்குக் காணப்படும் ஏராளமான கல்வெட்டுகளை படித்துக் காட்டியும், அதனை எப்படிப் படிப்பது என்ற பயிற்சியும் அனைவருக்கும் அளிக்கப்பட்டன. சிதையும் நிலைக்குச் சென்ற இந்தத் திருக்கோயில், தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் புதுப்பிக்கும் வேலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அடுத்து அதே ஊரிலிருந்த பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். மிகப்பெரிய வளாகத்தைக் கொண்ட கோயில் அது. அந்தக் காலத்தில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு பெயர் பெற்ற தலமாக விளங்கிய கோயில், இன்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியாகக் காணப்படுகிறது. சோழன் மனைவியான வானவன் மாதேவி பெயரில் ஒரு பெரிய ஏரி இருந்தது பற்றி அந்தக் கோயிலிலிருந்த ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

காலையில் தொடங்கிய பயணம் மாலையில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த குமரவேல் மற்றும் சோழர் வரலாற்று ஆய்வுச் சங்க நிர்வாகியான வல்லத்தரசு ஆகியோரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''உங்களது சங்கத்தின் நோக்கம் என்ன? ஆர்வலர்கள் அனைவரையும் எப்படி ஒருங்கிணைக் கிறீர்கள்?''

''ஒவ்வொரு கோயிலிலும் வரலாற்றுப் புதையல்கள் ஏராளமாக மறைந்திருக்கின்றன. வெறுமனே கோயிலுக்குச் சென்றோம், இறைவனை வழிபட்டு வந்தோம் எனும் நிலை மாறி, கோயிலுக்குச் செல்லும் அனைவரும் கோயிலிலுள்ள சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளில் பொதிந்திருக்கும் செய்திகள் பற்றி அறிந்துகொன்டு விவாதிக்க வேண்டும். சிற்பங்களைப் பார்த்ததுமே அவர்கள் இந்தச் சிற்பம் இந்தக் காலத்துக்கு உரியது என்று கண்டுபிடிக்கும் அளவுக்குத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளை அனைவரும் படித்து, வெளிவராத வரலாற்றுச் செய்திகள் அனைத்தையும் அவர்கள் அறிந்துகொள்ளச் செய்யவேண்டும். கோயில், கோயில் சார்ந்த வரலாறு தொடர்பான விழிப்பு உணர்வை அனைவருக்கும் உருவாக்க வேண்டும். அதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் கோயில்கள் மற்றும் சிதைந்து போன கோயில்கள் பலவற்றையும் மறு கட்டுமானம் செய்ய முடியும் என்பது எங்களது நம்பிக்கை. இருக்கும் கோயில்களையும் காக்க முடியும். ஒத்த கருத்துடைய வரலாற்று ஆர்வலர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சமூக வலைத்தளம் மூலம்தான்''.

''மரபு நடை எதற்காக முன்னெடுக்கப்படுகிறது, அதன் அவசியம் என்ன?''

''நமது மரபு, வரலாற்றுச் சிறப்பு, கோயில்களைப் பற்றிய பெருமை, நம் தொன்மை ஆகியவற்றைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் மரபு நடை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. கோயில்களுக்கு வருபவர்கள் இறைவனை வணங்கிவிட்டுச் செல்வதோடு சரி. அப்படி வருபவர்களிடம் அந்தக் கோயில்களின் பின்னணியில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்''

''கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகளை சாதாரண மனிதர்களால் படிக்க முடியும் என்று கருதுகிறீர்களா?''

ஏன் இயலாது? கல்வெட்டுகளில் காணப்படும் மொழி ஒன்றும் அந்நிய மொழி இல்லையே, அதுவும் நம் தமிழ் மொழிதானே. பல நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதால் அதன் எழுத்துருவம் சற்று மாறுபட்டிருக்கும். எழுத்துகளுக்குப் புள்ளி வைக்கப்பட்டிருக்காது. எழுத்துகளிடையே இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளைப் புரிந்துகொண்டால், அனைவராலும் கல்வெட்டுகளை வாசிக்க இயலும்''

மரபுநடைப் பயணத்துக்குச் செல்வதற்கு முன்பு, கோயில்கள் என்பது வழிபாட்டுத் தலங்கள் மட்டும்தான் என்றே நாம் நினைத்திருந்தோம். ஆனால், அவர்களுடன் சென்றுவிட்டுத் திரும்பியபோது, கோயில்கள் என்பவை பல அரிய தகவல்களையும் வரலாற்று உண்மைகளையும் கல்வெட்டுகள் மூலமும் சிற்பங்கள் மூலமும் நமக்கு உணர்த்தும் களஞ்சியங்களாகவும் திகழ்கின்றன என்ற தெளிவு நமக்கு ஏற்பட்டது.