education

ஆபத்தில் அரசு பள்ளிக் கட்டடம்! இ-சேவை மையத்தில் வகுப்புகள் நடக்கும் அவலம்!

எப்போது விழும் என்ற ஆபத்தில் அரசு பள்ளிக் கட்டடம் உள்ளது. செயல்படாத இ-சேவை மையத்தில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார்கள் ஆசிரியர்கள். இந்த அவலத்தையும் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வேதனையுடன் கூறினர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் உள்ள காடன்குளம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் கட்டடங்களில் ஒன்று 1964-ம் ஆண்டிலும், மற்றொன்று 1994-ம் ஆண்டிலும் கட்டப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், பள்ளி செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே கட்டடத்தின் பூச்சு பெயர்ந்து விழத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, மர நிழலில் வகுப்புகளை நடத்திவந்த ஆசிரியர்கள், தற்போது மின்சார வசதியற்ற இன்னும் பணியைத் தொடங்காத அரசு இ-சேவை மையத்தில் வைத்து வகுப்புகளை நடத்திவருகிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர் முருகேசனிடம் பேசியபோது, “பள்ளிக் கட்டடத்தின் பூச்சு இடிந்துவிழுந்தவுடன் வட்டார வளர்ச்சி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு, கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் அபாயகரமான நிலையில் இருப்பதாக அறிவுறுத்தினோம். பள்ளியை ஆய்வு மட்டும் செய்துவிட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்தப் பிரச்னையைக் கிடப்பில் போட்டுவிட்டனர். இந்த வருட பள்ளி ஆண்டுவிழாவில், சிறப்பு அழைப்பாளராக வந்த நாங்குநேரி எம்.எல்.ஏ., வசந்தகுமாரிடம் இதுபற்றி எடுத்துரைத்தோம். அவர், அந்த மனுவை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப, அதுவும் முடங்கிப்போனது. அரசு இ-சேவை மையம் செயல்படத் தொடங்கும்போது, மீண்டும் மரநிழலில் வகுப்புகளை நடத்தவேண்டிய சூழல் ஏற்படும். பள்ளிக் கட்டடம் இடிந்துவிழத் தொடங்கியபோது, பல மாணவர்கள் பள்ளியைவிட்டு நிற்கத் தொடங்கினர். அதைத் தடுக்க, ஆங்கிலவழி வகுப்புகளை இந்த ஆண்டு முதல் தொடங்கி இருக்கிறோம். முறையான பள்ளிக் கட்டடம் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகிறோம்” என்றார் கவலையுடன்.


பெற்றோர்களிடம் கேட்டபோது, “இடிந்துவிழும் அபாயகரமான நிலையில் இருக்கும் கட்டடத்துக்கு பிள்ளைகளை எப்படி அனுப்ப முடியும்?  மழைக்காலத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி, ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால் யார் பொறுப்பு ஏற்பார்கள். இந்த அபாயக் கட்டடத்தை ஆய்வுசெய்த பொறியாளர், வேண்டுமென்றே கட்டடத்தைக் குறைசொல்வதாக எங்கள்மீது குற்றம் சாட்டுகிறார். நல்ல நிலையிலா இந்தக் கட்டடம் இருக்கிறது. இரண்டாவது கட்டடம் கான்கிரீட் தளம் இறங்கிப்போகும் அளவு சிதிலம் அடைந்திருக்கிறது. எங்கள் ஊரில் தண்ணீர், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் முறையாகச் செய்துகொடுக்கப்படவில்லை. இதைக்கூட எப்படியோ சமாளித்துவிடுகிறோம். ஆனால், எங்கள் பிள்ளைகளின் படிப்பு முக்கியம். அதற்காக வகுப்புகள் செயல்பட புதிய கட்டடம் ஒன்றைக் கட்டித் தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்து அலுத்துப் போய் கலெக்டரிடமும் மனு கொடுத்திருக்கிறோம். காசு கொடுத்து தனியார் பள்ளியில் படிக்கவைக்க வழி இல்லாமல்தான், தொடர்ந்து அரசு பள்ளிக்கே எங்கள் பிள்ளைகளை அனுப்பிவருகிறோம். இ-சேவை மையம் செயல்படத் தொடங்கினால், தற்போது வகுப்புகள் நடக்கும் தற்காலிக இடமும் பறிபோகும். சத்துணவுக்கூடம் கட்டுவதற்காக ஒரு கட்டடம் பாதியளவு எழுப்பப்பட்டு, இடையில் கைவிடப்பட்டது. பல திட்டங்களுக்கு எவ்வளவோ நிதி ஒதுக்கும் அரசு, எங்கள் பள்ளிக் கட்டடத்துக்கும் ஏதாவது ஒரு தீர்வை நிச்சயம் கொடுக்க வேண்டும். இன்னும் பள்ளிக் கட்டடம் கட்டாமல் இழுத்தடிக்கும் பட்சத்தில், மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பாமல் போராட இருக்கிறோம்” என்றார்கள் ஆவேசத்துடன்.

"அடிப்படை உரிமையான கல்வியை உறுதிசெய்வது அரசின் கடமையாகும். பள்ளி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் வகையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கி, அதற்கான பணிகளை முடுக்கிவிடுவதே இந்தப் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக அமையும்" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.