international

ட்ரூடேவுக்கு `புஷ்-புல்’... மெர்கலுக்கு `நோ’... மோடிக்கு `ஹக்’ - கைகொடுப்பதில் ட்ரம்ப்புக்கு உள்ள சிக்கல்!

யாராவது இரண்டு பேர் சந்தித்தால் கைகொடுத்து வணக்கம் சொல்வது வழக்கமான விஷயம். கல்லூரி கேம்பஸ் இன்டெர்வியூவின்போது கைகொடுக்கும்போது சரியாகக் கைகொடுக்க வேண்டும், இல்லையென்றால் நம் மீது நல்ல மதிப்பு வராது என்றெல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஒரு விஷயம்தான் அமெரிக்க அதிபருக்கு சிக்கல் தருகிறது. ``கை குலுக்குவது அநாகரிகமான செயல். அதனால் நோய்கள் பரவும்" என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். ட்ரம்புக்கு நோய்கள்மீது அதிகம் பயம் உண்டு, எனவே, அவரை 'Germaphobe' என்று குறிப்பிட்டு பத்திரிகைகள் எழுதி வந்தன. ஆனால் ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பின்பு, உலகத் தலைவர்கள் பலரைச் சந்தித்து கைகுலுக்கியுள்ளார். அந்தக் கைகுலுக்கள் அனைத்துமே வினோதமானவை. நேற்று, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை சந்தித்தபோது வெறும் 3 விநாடிகள் மட்டுமே புதினுடன் கைகுலுக்கினார். இது போன்று அவர் கைகொடுத்து வைரலான தருணங்கள்.

ஜெர்மன் நாட்டின் அதிபர் (Chancellor) ஏஞ்சலா மெர்கல் (Angela Merkel), அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மேற்கொண்ட சந்திப்பின்போது "கைகுலுக்கிக் கொள்ளலாம்" என்று ஏஞ்சலா கேட்டபோது, பக்கத்தில் அமர்ந்திருந்தும் தனக்கு அது கேட்காததுபோல எதுவும் பேசாமலிருந்தார் ட்ரம்ப்.

போலாந்து நாட்டு அதிபர் (Andrzej Duda) டூடாவைச் சந்தித்து கைகுலுக்கிய பின்னர், அவரின் மனைவிக்கு (Agata Kornhauser-Duda) கைகொடுக்க முற்பட்டார் ட்ரம்ப். ஆனால், அவரோ ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்புக்கு கைகொடுத்தார். ட்ரம்ப் சிரித்து அந்தத் தருணத்தை சமாளித்தது இணையத்தில் வைரலானது.

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, ட்ரம்ப் அவருக்கு கைகொடுக்க, பின்னர் அப்படியே கட்டித் தழுவிக் கொண்டனர். பிறகு மீண்டும் மோடி ட்ரம்பின் கையைப் பிடித்துக்கொண்டார்.

ட்ரம்ப் மிக நீண்ட நேரம் கை கொடுத்தது பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரானுக்குதான் (Macron). பேசியவாரே மேக்ரானின் கையைப் பிடித்து குலுக்கிய ட்ரம்ப் அவரின் கைகளைத் தட்டிக் கொடுத்தார். பின்பு மீண்டும் கைகளைக் குலுக்கினார். அருகில் நின்றுகொண்டிருந்த மேக்ரானின் மனைவியின் கையையும் தன் இடது கையால் பற்றிக்கொண்ட ட்ரம்ப் 30 விநாடிகளுக்கு பின் கைகொடுத்தார். மற்றொரு முறை மேக்ரானைச் சந்தித்தபோது அவரின் கன்னத்தில் முத்தமிட்டு கைகுலுக்கியதும் குறிப்பிடத்தக்கது.

கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடேவைச் சந்தித்தபோது 'புஷ் & புல்' முறையைக் கையாண்டார் ட்ரம்ப். வலது கையால் கைகுலுக்கிய ட்ரம்ப் தனது இடது கையைக் கொண்டு ட்ரூடேவின் தோளை இருக்கமாகப் பிடித்துக்கொண்டார். பின் ட்ரூடேவும் ட்ரம்ப் தோள்பட்டையைப் பிடித்துக் கைகுலுக்கினார்.

ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற சில நாள்களிலேயே ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஸின்சோ அபே (Shinzo Abe) உடன் சந்திப்பு மேற்கொண்டர். அப்போது தான் அமர்ந்திருந்த இருக்கையின் நுனிப் பகுதிக்கு வந்து ஜப்பான் பிரதமரின் கைகளைப் பிடித்து கேமராக்களுக்கு போஸ் கொடுத்தபடி இரு முறை ஜப்பான் பிரதமரின் கைகளை இழுத்துக் குலுக்கிக் கொண்டது பார்ப்பவர் அனைவருக்கும் விநோதமாகத் தெரிந்தது.

ட்ரம்ப் பதவியேற்ற பின்பு, முதன்முதலில் கைகுலுக்கிய உலகத் தலைவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாதான். கைகுலுக்கியபோது ஒபாமா ட்ரம்பைப் பார்த்துக் கைகுலுக்கினார். ஆனால், ட்ரம்ப்போ ஒபாமாவின் கண்களைப் பார்க்காமல் கீழே குனிந்துகொண்டு கைகுலுக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தென் கிழக்கு நாடுகள் மாநாட்டில், ட்ரம்ப் தென் கிழக்கு நாட்டுத் தலைவர்களுடன் கைகுலுக்கிய ஸ்டைல் வித்தியாசமானது. அனைத்து தலைவர்களும் அவர்களின் இரு பக்கத்தில் நிற்கும் தலைவர்களிடம் தங்களின் இரு கைகளையும் கொடுத்துக் குலுக்கிக் கொண்டனர். அப்போது நடுவில் நின்றுகொண்டிருந்தார் ட்ரம்ப். வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் பிரதமர்கள் ட்ரம்ப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தனர். வியட்நாம் பிரதமரின் கையை எளிதாகப் பிடித்துக்கொண்ட ட்ரம்ப், பிலிப்பைன்ஸ் நாட்டு பிரதமரின் கையைப் பிடிக்க சற்று சிரமப்பட்டார்.

உலகத் தலைப்புச் செய்தியான ட்ரம்ப் - கிம் சந்திப்பின்போது, கிம்மை பார்த்தவுடனே தன் கையை நீட்டிக்கொண்டே வந்த ட்ரம்ப், 13 விநாடிகள் நலம் விசாரித்தபடியே கை குலுக்கினார்.

ட்ரம்ப் மிகக் குறைவான நேரம் கைகுலுக்கியது ரஷ்ய அதிபர் புதினுடன்தான். நேற்றுச் சந்தித்துக்கொண்ட இருவரும் வெறும் மூன்றே விநாடிகள்தான் கைகுலுக்கிக் கொண்டனர். ரஷ்ய அதிபர் புதினைப் பார்த்து ட்ரம்ப் கண் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.