Literature

இலக்கியவாதிகளின் நினைவேந்தல்... ஸ்டாலினை அழவைத்த பா.விஜய்!

``எங்கள் செயல் தலைவரே, இதயம் கனக்கக் கூறுகிறேன்... உறவு கூட்டி அழைப்பதற்கு நிறைய பேர் உள்ளனர். ஆனால், உடலைப்போலக் காப்பதற்கு உங்களைவிட்டால் யார் இருக்கிறார்கள். இனி கலைஞரின் எழுத்து நீங்கள், கலைஞரின் ஆற்றல் நீங்கள், கலைஞரின் அரசியல் நீங்கள், இனி கலைஞர் நீங்கள்'' என்று பா.விஜய் உணர்ச்சிகரமாகப் பேசப் பேச, கேட்டுக்கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் கண்களில் நீர் தளும்பிவிட்டது. 

கலைஞரின் மறைவுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை, ஐந்து மாநகரங்களில் தி.மு.க நடத்திவருகிறது. திருச்சியில் ஊடகவியலாளர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இலக்கிய ஆளுமைகளின் சார்பாக மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.

இலக்கியவாதிகள் சா.கந்தசாமி, கலாப்ரியா, வாஸந்தி, எஸ்.ராமகிருஷ்ணன், மு.மேத்தா, சு.வெங்கடேசன்,  அறிவுமதி,  அருள்மொழி, பா.விஜய், இமயம், ஹாஜாகனி ஆகியோர்  புகழஞ்சலி செலுத்திய இந்த நிகழ்வில் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, கனிமொழி, உதயநிதி, தயாநிதி மாறன், அரவிந்தன் போன்றோரும் மற்றும் கலைஞரின் குடும்பத்தினரும், துரைமுருகன், டி.ஆர்.பாலு உட்பட தி.மு.க முன்னணியினரும் கலந்துகொண்டனர். 

ஹாஜாகனி பேசும்போது, ``அவர் படித்த பள்ளியில் படித்த பெருமை எனக்குள்ளது. சிறுவயதில் பள்ளியில் சேர்க்க மறுத்த ஆசிரியரிடம், `எதிரே உள்ள கமலாலயக் குளத்தில் விழுந்துவிடுவேன்!' என்று குரல் எழுப்பியவர் கலைஞர். கமலாலயத்தில் குதித்தால் அழிந்துவிடுவோம் என்பது அப்போதே கலைஞருக்குத் தெரிந்திருக்கிறது. அவர், பீச்சில் இடம் பிடித்தவரல்ல; தமிழர்களின் மூச்சில் வாழ்கிறவர். கலைஞர் இல்லாத காலத்தில் வாழ்கிறோம் என்ற வேதனை ஒருபக்கம் இருந்தாலும், அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமையும் இருக்கிறது. திருக்குவளை இல்லாமல்போயிருந்தால் தமிழகத்தில் இரு குவளைதான் இருந்திருக்கும். தளபதி ஸ்டாலின், இனி செயல் தலைவர் அல்ல, புயல் தலைவர்'' என்றார்.

சு.வெங்கடேசன், ``மரபை மீறுவதுதான் இலக்கியம். வழக்கமாகத் தமிழக சினிமாவில் நீதிமன்றக் காட்சியை 600 அடிக்கு வைப்பார்கள். ஆனால், `பராசக்தி'யில் 2000 அடி வைத்து மரபை உடைத்தவர் கலைஞர். அதனால்தான் அவர் மரணம் வரைக்கும் அந்தக் காட்சி, நீண்டுகொண்டே வந்துள்ளது. பொதுவாக நீதிமன்றக் காட்சிகளில் கதாநாயகன்தான் பேசுவார், கலைஞருக்காக நடந்த நீதிமன்றக் காட்சியில் வில்லன்கள், கோமாளிகள் எல்லோரும் வந்தார்கள். கலைஞரை அடக்கம் செய்தபோது அவர் பேரன் பேனாவை அருகில் வைத்தார். மறுநாள் முகம் தெரியாத தொண்டர் ஒருவர் மூன்று பேப்பர்களை சமாதியில் வைத்துவிட்டுச் சென்றார். இந்தப் பேனாவுக்கும் பேப்பருக்கும் இடைப்பட்ட உலகம்தான் கலைஞரின் வாழ்க்கை'' என்றார்.

இமயம் பேசும்போது, ``கலைஞரைப் பற்றிப் பேசவேண்டுமானால், 15 வருடமே போதாது... 15 நிமிடத்தில் எப்படிப் பேசுவது. ஒரு கடிதம் மூலம் ஒரு மாநாட்டுக்கு லட்சம் பேரைத் திரட்ட முடியும் என சாதித்துக்காட்டியவர்'' என்றார். 

எஸ்.ராமகிருஷ்ணன், ``தமிழக அரசுக் கட்டடங்களில் `தமிழ் வாழ்க!' என்ற ஒரு வாசகம் இருக்கும். அதற்குக் காரணம், கலைஞர். இதுபோல மொழியைக் கொண்டாடுகிற மாநிலம் வேறு ஏதுமில்லை. ஒரு மனிதனைக் காலம் உருவாக்கும். ஓர் எழுத்தாளனைச் சமூகம் உருவாக்கும். ஓர் எழுத்தாளனை முதலமைச்சராகப் பெற்றதுதான் நமக்குப் பெருமை'' என்றார்.

வாஸந்தி, ``கலைஞர் குடும்பத்தைப் பற்றிய கட்டுரையை `இந்தியா டுடே'யில் வெளியிட்டோம். அதற்குக் கலைஞர் கோபப்பட்டிருப்பார் என நினைக்கிறேன். இதற்கு எதிர்வினையாக `முரசொலி'யின் இணைப்பான புதையலில் என்னைப் பற்றி கிழி கிழியெனக் கிழித்துவிட்டார்கள். அதற்குப் பிறகு கலைஞரிடம் ஒரு பேட்டி வாங்க வேண்டும் என நிர்வாகத்தில் கேட்டார்கள். ஏற்கெனவே கோபத்தில் இருக்கும் கலைஞர், அதற்கு ஒப்புக்கொள்வாரா என்று அச்சம். அவர் உதவியாளரிடம் கேட்டதற்கு, `அதெல்லாம் வராதீங்க' என்று கூறிவிட்டார். இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் நானும் நிரூபமாவும் அறிவாலய வாசலில் யாசகர்கள்போல் நின்றோம். அப்போது காரில் வந்த கலைஞர் எங்களைப் பார்த்துவிட்டார். `என்ன விஷயம்?' என்று கேட்க, `உங்களைப் பேட்டி எடுக்க வேண்டும்' என்றதும், `நாளை காலை வீட்டுக்கு வாருங்கள்' என்று அவர் சொன்னதும், எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட பண்புக்குரியவர். அதற்குப் பிறகு நாங்கள் அவருக்கு அடிமை'' என்றார்.

மு.மேத்தா, ``மொழிக்காக தன் இறுதி நாள் வரை பாடுபட்டவர். தமிழ் மொழிக்கு `செம்மொழி' என்ற  சிம்மாசனம் தந்தவர் கலைஞர்'' என்றார்.

கலாப்ரியா, ``சிறு வயது முதல் திராவிட இயக்க இதழ்களைப் படித்து வளர்ந்தவன். மரபும் இல்லாமல் உரைநடையாகவும் இல்லாமல் புதுமையான முறையில் கவிதை எழுதியவர். அண்ணாவுக்கு அவர் எழுதியதுபோல ஓர் அஞ்சலிக் கவிதையை இதுவரை யாரும் எழுதியதில்லை. கேள்விகளுக்கு உடனுக்குடன் நகைச்சுவையாகப் பதில் அளிப்பதில் அவருக்கு நிகர் இல்லை.

ஒரு தேர்தல் நேரத்தில் `நான் பாண்டிச்சேரியில் நிற்கட்டுமா?' என்று கண்ணதாசன் கேட்டதற்கு, `உன்னால் அங்கு நிற்க முடியுமா?' என்று கலைஞர் பதிலுக்குக் கேட்டிருக்கிறார். மும்பையில் தமிழர்களின் நிலையை `நாயக'னும் `காலா'வும் காட்டுவதற்கு முன்பே காட்டியவர் கலைஞர்'' என்றார்.

அறிவுமதி, ``தி.மு.க பிறந்த வருடத்தில் நான் பிறந்ததால் எனக்கு `மதியழகன்' என்று பெயர் வைக்கப்பட்டது. சிறுவயதில் கலைஞர் கதை-வசனத்தில் வந்த படத்தைப் பார்க்க பல கிலோமீட்டர் தூரம் நடத்தி கூட்டிச் சென்றவர் என் தந்தை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, வள்ளுவர் பெயரில் ஓர் ஒன்றியத்துக்கு ஒரு நூலகம் வைக்கச் சொல்லி கடிதம் எழுதினேன். அவரோ 1,130 ஊராட்சிகளிலும் நூலகங்களைத் திறந்தார். கைநாட்டுப் பேர்வழிகளைக் கையெழுத்துப் பேர்வழிகளாக மாற்றியது திராவிட முன்னேற்றக் கழகம். இது தொண்டர்களின் கட்சி'' என்றார்.

கந்தசாமி, ``நம் நாட்டில் பாரத ரத்னா கொடுக்கப்பட்ட 46 பேர்களில் 10 பேர்தான் தகுதியானவர்கள். கலைஞர் அதற்கு முழுத் தகுதியானவர். சென்னையில் அண்ணா நூலகத்தை உருவாக்கினார். அதை மூடுவதற்குத்தான் எத்தனை தடைகள். புத்தகப் பதிப்பாளர்கள் நலனுக்காக ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்'' என்றார்.

இறுதியாகப் பேச வந்த கவிஞர் பா.விஜய், தன்னுடைய கவிதையால் அரங்கை அதிரவைத்தார். ```அன்பு உடன்பிறப்புகளே...' என்ற ஒற்றை வரியில் காவியம் படைத்தவர் கலைஞர். `அப்பா' என்ற ஒரு வார்த்தையில் வரலாறு படைத்தார் செயல் தலைவர். ஏழு கோடி தமிழர்களின் ஒற்றை உருவம் கலைஞர். `நெஞ்சுக்கு நீதி' தந்த நெருப்புப் பாசறை. அந்தக் கம்பீரத் தலைவன் இன்று இல்லையா, இனி அந்தக் கரகரத்தக் குரல் கேட்காதா, இனி கோபாலபுரத்தின் கடைசி வீட்டில் பரபரப்பு இருக்காதா, அறுபது ஆண்டுகால அரசியலை, சினிமாவை, பத்திரிகைத் துறையை, கலையை உலுக்கிப்போட்ட உயிரே, மு.கருணாநிதி பிறப்பு-இறப்பு முடித்துவிட முடியாது. நீ, அடித்தட்டு மனிதனின் அசுரப்பாய்ச்சல்; அழுத்தப்பட்ட சமூகத்தில் பீறிட்டுக் கிளம்பிய அக்னி ஆறு; சூடுபட்ட இனத்துக்குச் சுடச்சுட தமிழ் செய்த சூரியக்கொப்பரை. ஆகஸ்ட் 7-ம் நாள் உலகத்துக்குச் சொன்ன சேதி இதுதான், `உழைத்துக்கொண்டே வளர்ந்துவிடு... உணர்ச்சியோடு வாழ்ந்துவிடு... உறவுகளோடு முடிந்துவிடு'' என்றார்.

இலக்கியவாதிகளின் அஞ்சலி அனைவரையும் இளகவைத்துவிட்டது.