politics

குழப்பம் தீர வேண்டுமென்றால் இந்த ஆட்சி கலைய வேண்டும் ! -  சூடுகிளப்பும் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ்

''ஆட்சியிலும், கட்சியிலும் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. என் ஆதரவு யாருக்கும் இல்லை'' என்று புது ரூட்டில் கிளம்பியிருக்கிறார். கோயம்புத்தூர் சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான கனகராஜ். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''உங்கள் நிலைப்பாடு என்ன?'' 

''இவ்வளவு நாள்கள் அடித்துக்கொண்ட ஓ.பி.எஸ்ஸும், இ.பி.எஸ்ஸும்  இப்போது சேர்ந்துவிட்டார்கள். தனியாகப் பிரிந்து எடப்பாடியை நட்டாற்றில் நிறுத்திய ஓ.பி.எஸ் அணியில் இருப்பவர்களுக்குப் பதவிகள் வாரி வழங்கப்படுகின்றன. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் காப்பாற்ற, காரணமாக இருந்த 19 எம்.எல்.ஏ-க்கள் இப்போது ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். இது என்ன நியாயம்? யாரைக்கேட்டு எடப்பாடி ஓ.பி.எஸ்ஸை இணைத்துக்கொண்டார் ? தமிழ்நாட்டு  மக்களுக்கு மட்டுமல்ல, எம்.எல்.ஏ-வான எனக்கே குழப்பமாக இருக்கிறது. மூன்றுபேரும் ஒன்றாகச் சேராவிட்டால் என் ஆதரவு யாருக்கும் இல்லை. நான் சட்டமன்றத்துக்கே போகமாட்டேன்''.

'' 'சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால்தான் கட்சி பிழைக்கும்' என்று சொல்லித்தானே இ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் இணைந்திருக்கிறார்கள். நீங்கள் தினகரனைச் சேர்க்கச் சொல்கிறீர்களே?''

''அப்படியென்றால், அவர் தினகரன் வேட்பாளராக நின்றபோதே தடுத்து வெளியேற்றியிருக்க வேண்டியதுதானே? அதை, ஏன் இவர்கள் செய்யவில்லை. ஏனென்றால், எல்லோருக்கும் தேவை. பதவி.. பதவி… பதவி... ஓ.பி.எஸ்ஸுக்கு முதல்வர் பதவி தரவில்லை என்றுதான் தனியாகப் பிரிந்து போனார். இப்போது சேர்ந்திருப்பதும் பதவிக்காகத்தான். மன்னார்குடி குடும்பத்தை வெளியேற்றுவதுதான் அவர் நோக்கம் என்றால், ஏன் துணை முதலமைச்சர் பதவியைப் பெற்றிருக்க வேண்டும்? ஓ.பி.எஸ்ஸும், இ.பி.எஸ்ஸும் எளிதாக இணைந்துவிட்டார்கள். அவர்களை நம்பி இரு அணிகளாகப் பிரிந்துகிடந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் எதிரும் புதிருமல்லவா இருக்கிறோம். இதுவரை நான் எடப்பாடி அணியில் இருந்தேன். அதனால் ஓ.பி.எஸ் என்னை ஓரம்கட்டக்கூடும். என்னை மக்கள் பணிகள் செய்யவிடாமல் தடுப்பார்கள். ஆளாளுக்கு ஓர் அணி என்று அடித்துக்கொள்கிறார்கள். இந்தக் குழப்பம் தீர வேண்டுமென்றால், தேர்தல் வர வேண்டும்''. 

''எடப்பாடிதானே முதல்வர்.  ஓ.பி.எஸ்ஸால் எப்படி உங்களை ஓரங்கட்ட முடியும்? அதுமட்டுமல்லாது, இப்போதுதான் இருவரும் இணைந்துவிட்டார்களே?''

''அ.தி.மு.க., ஜெ. அணி... ஜானகி அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்து சேர்ந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? ஆனால், கடைசிவரை நீங்கள் அப்போது யார் அணியில் இருந்தீர்கள் என்ற கேள்வியை நேர்முகத்தேர்வின்போது அம்மா கேட்பார். அம்மாவுக்கே கடைசிவரை அந்த எண்ணம் போகவில்லை. ஓ.பி.எஸ் எம்மாத்திரம்? அவர்கீழ் உள்ள துறையின் பணிகளுக்காக அவரை அணுகினால், அவர் நிச்சயமாக எங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்''.

''தினகரன் அணியினரைச் சேர்த்துக்கொண்டால் இந்தப் பிரச்னை சரியாகிவிடுமா?''

''இவர்கள் மட்டும் இணைந்த முறையே முதலில் தவறு. இணைய வேண்டும் என்று முடிவெடுத்ததுமே இரு அணிகளாகப் பிளவுபட்டுக் கிடந்த மாவட்ட நிர்வாகிகளையும் கூட்டி ஒரு மாநாடுபோல நடத்தி இவர்கள் இருவரும் கைகோத்துக்கொண்டதுபோல எல்லோரையும் கைகோக்க வைத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் பதவிக்காக இவர்கள் மட்டும் கைகோத்துக்கொண்டால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்படுமா? தினகரன் என்பவரைத் தனியாக பார்க்காதீர்கள். அவர் பக்கம் 19-லிருந்து 23 எம்.எல்.ஏ-க்கள் வரைக்கும் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் இந்த ஆட்சியைக் காப்பாற்றக் காரணமாக இருந்தவர்கள்தானே? அப்படியென்றால், அவர்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்தானே? அவர்கள் எல்லாம் வாக்களித்ததனால்தானே  எடப்பாடி முதல்வர் ஆனார்? அதனால்தான், அவர்களையும் இணைக்க வேண்டும் என்கிறேன். மூன்று பேரும் அமர்ந்து பேசி ஒரு தெளிவான முடிவெடுக்காவிட்டால் குழப்பமே மிஞ்சும்.  அவர்கள் கோர்ட்டுக்குப் போவார்கள். ஆட்சி கலையும்''.

''தினகரனுக்கு இவ்வளவு சப்போர்ட்  செய்கிறீர்களே? தினகரன் தரப்பிலிருந்து உங்களைத் தொடர்புகொண்டார்களா?''

''இல்லை. ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கபட்டபோதுதான் அவர் எனக்கு அறிமுகம். மற்றபடி தினகரன் தரப்பிலிருந்தோ, மன்னார்குடி தரப்பிலிருந்தோ எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. சசிகலா சிறைக்குச் செல்லும்போதுகூட எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கட்சியைக் காப்பாற்றுங்கள் என்று ஒரு தெய்வத்தைப்போல பேசிவிட்டுப் போனார். அப்படிப்பட்ட  அவர்களைச் சேர்க்காமல் அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியாது''.