politics

தங்களை மறந்து பேசும் அமைச்சர்கள்... ‘வெச்சி’ செய்யும் நெட்டிசன்கள்!

மிழகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மரணத்துக்குப் பிறகு, இரண்டாகப் பிரிந்த அ.தி.மு.க-வை ஒன்றாக இணைத்து... அதை, தாம் இறக்கும்வரை மிகுந்த கட்டுக்கோப்புடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா. ஆனால், அவருடைய மரணத்துக்குப் பிறகு அந்தக் கட்சியிலும் அவர் அமைத்துக்கொடுத்த ஆட்சியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறிவருகின்றன. அதிலும் அமைச்சர்கள் சிலர் தாங்கள் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே தங்கள் இஷ்டத்துக்கு எதையாவது உளறிக்கொண்டிருப்பது, தமிழக மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.  ‘இவர்களை எல்லாம் ஜெயலலிதா எப்படித்தான் அமைச்சர்களாக வைத்திருந்தாரோ' என்று மக்கள் சொல்லுமளவுக்கு அவர்களைப் பற்றிய மீம்ஸ்கள் நாள்தோறும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அப்படி நம் அமைச்சர்கள் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள். இதோ... 

செல்லூர் ராஜூ:

சமூக வலைதளங்களில் அமைச்சர்கள் வைரலாவதை முதன்முதலில் தொடங்கிவைத்து, அவற்றுக்குக் காரணகர்த்தாவாக விளங்குபவர் செல்லூர் ராஜூதான். கூட்டுறவுத் துறை அமைச்சரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்கப் புதிய முயற்சியை மேற்கொண்டார். அதற்காக அணைகளில் உள்ள தண்ணீரின்மேல் தெர்மாகோல் அட்டைகளைக் கொண்டு மூடினார். இதுகுறித்து அவர், ‘‘இதன்மூலம் நீர் ஆவியாகாமல் தடுக்கப்படும். இதுபோல் ஏற்கெனவே வெளிநாடுகளில் இந்த முயற்சி வெற்றிபெற்றுள்ளது. இந்தத் திட்டத்துக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 200 சதுர அடிக்கு வைகை அணையில் உள்ள நீரின் மேல் தெர்மாகோல் போடப்பட்டது’’ என்றார். இந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் போட்ட அனைத்து தெர்மாகோல் அட்டைகளும் கரை ஒதுங்கின என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘நீர் ஆவியாதலைத் தடுக்கத் தெர்மாகோல் போட்ட ஐன்ஸ்டீனே” என்று அன்றுமுதல் அவரை, வறுத்தெடுக்க ஆரம்பித்தனர் நெட்டிசன்கள்.

திண்டுக்கல் சீனிவாசன்:

இவரையடுத்து, வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன்தான், சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் அதிகமாக வலம்வரத் தொடங்கியிருக்கிறார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதையடுத்து, தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் நடந்த பொதுக்குழுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட திண்டுக்கல் சீனிவாசன், ‘‘ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நாங்கள் யாரும் அவரைப் பார்க்கவில்லை. எங்களைச் சசிகலா குடும்பத்தினர் அதற்கு அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சட்னி சாப்பிட்டதாகவும் பொய் சொன்னோம்’’ என்று சொல்லி பொதுமேடையில் மன்னிப்புக் கேட்டு பரபரப்பைக் கிளப்பினார்.

அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘‘சைவ உணவு உட்கொண்டால்தான் இளைத்த உடலைப் பெற முடியும். என்னைப்போன்று பெருத்த உடல் இருப்பவர்கள் சைவம் உட்கொண்டால்தான் உடல் இளைக்கும். எனவே, ஆரோக்கியமான உடலைப் பெற அனைவரும் சைவ உணவையே உட்கொள்ளுங்கள்'' என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தற்போது திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அவர், ‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, கோரிக்கை விடுத்ததால் டெங்கு தொடர்பாக ஆய்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவர்கள் தமிழகம் வந்தனர்’’ என்று உளறிக் கொட்டியுள்ளார். ‘‘மோடியிடம் அடைக்கலமாகியிருக்கும், மோடி புராணம் பாடும் அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் ஓர் அமைச்சருக்கே நாட்டின் தற்போதைய பிரதமர் யார், முன்னாள் பிரதமர் யார் என்று தெரியாதது வேடிக்கையாக இருக்கிறது’’ எனத் தொடர்ந்து மீம்ஸ்கள் மூலம் திண்டுக்கல் சீனிவாசனை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து அவர் பற்றிய பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி:

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தொடங்கிவைத்த ‘நதிகள் மீட்போம்' விழிப்பு உணர்வுப் பேரணி கடந்த செப்டம்பர் மாதம் சென்னைக்கு வந்தபோது... அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சிலரும், நடிகை சுஹாசினி, கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை, ‘‘தமிழக முதல்வர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே...’’ என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பதற்காக அக்டோபர் 2-ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கு, சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கடந்த முறை திருப்பதி வந்தபோது தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியது. அப்போது தமிழகத்தில் மழை பெய்ய வேண்டும் என வேண்டிக்கொண்டேன். இந்நிலையில், இந்த முறை தமிழகத்தில் மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார். இதை வலைதளக்காரர்கள், ‘‘எடப்பாடி பழனிசாமி திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட்டதால்தான் தமிழகத்தில் மழை பொழிந்தது’’ என வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். 

ஓ.பன்னீர்செல்வம்:

அதே ஈஷா யோகா மைய விழிப்பு உணர்வுப் பேரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் பெயரை மாற்றி உச்சரித்தார். அதாவது, “பாடகி சுதா ரங்குநாதன் அவர்களே” என்று அவருக்கே அதிர்ச்சி தரும்படி அவரின் பெயரை அழைத்தார். அதேபோல், இந்நிகழ்வில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘சுஹாசினி மணிரத்னம்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘சுஹாசினி மணிவாசகம்’ என்று குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதே நிகழ்வில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் கலந்துகொண்டார். அவர், சுதா ரகுநாதனை இசைக் கலையில் இருந்து பரத நாட்டியம் பக்கம் திருப்பிவிட்டார். அத்துடன் அவர், சுதா ரகுநாதன் பக்கம் திரும்பி, ‘‘ஏம்மா... நீங்க பரத நாட்டியம்தானே” என்று கேட்க, ‘பாடகி’ எனப் பதில் ஒலிக்க... “பாடகி சுதா ரகுநாதன் அவர்களே” என மீண்டும் அழைத்தார். 

கே.சி.கருப்பண்ணன்:

“செல்லூர் ராஜூவுக்கு அடுத்து யோசனை சொல்வதில் கருப்பண்ணன்தான் இரண்டாமவர்” என்று நெட்டிசன்கள் மத்தியில் பெயர் எடுத்திருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன். திருப்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ள நீருடன் சாயக் கழிவுகளும் கலந்துசென்றன. இதனால் ஆற்றுத் தண்ணீரில் நுரைபொங்கி வழிந்தது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள், “சாயக் கழிவுகளால் நுரை வந்து நொய்யல் ஆறு மாசுபடுகிறது. இதைத் தடுக்க வேண்டும்” என்று கூறினர். அப்போது அங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் கருப்பண்ணன், “நொய்யல் ஆற்றில் அதிக அளவில் நுரை வந்தது. இது சாயக் கழிவுகளால் ஏற்பட்டது என்ற புகார் எழுந்தது. ஆனால், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கோவை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து வெளியேறும் சோப்பு மற்றும் கழிவுகளாலேயே நுரை ஏற்பட்டுள்ளது” என்றார். இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியதுடன், அவரைப் பற்றியும் மீம்ஸ்களும் வரத் தொடங்கின.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எந்தவொரு தொலைக்காட்சிக்கோ பத்திரிகைகளுக்கோ பேட்டி கொடுக்காத அமைச்சர்கள், அவரின் மறைவுக்குப் பின் ஆளாளுக்கு பேட்டி என்ற பெயரில், வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொட்டிக்கொண்டிருப்பதைத் தமிழக மக்கள் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களின் லட்சணங்கள் என்னவென்பது இப்போது மக்களுக்குத் தெரியவந்துள்ளதால், ஜெயலலிதாவை முன்பு பழித்தவர்கள்கூட, தற்போது, ஏன் அவர் அமைச்சர்களை கைகட்டி, மௌனமாகத் தன் முன் நிற்கவைத்திருந்தார் என்பதை வெளிப்படையாக இப்போது சொல்லத் தொடங்கியுள்ளனர். 

மொத்தத்தில் மீம்ஸ்கள் உருவாக்கும் நெட்டிசன்களுக்கு அமைச்சர்களின் பேச்சுகளால் நல்ல தீனி கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது.