politics

"மரணதண்டனையால் குற்றம் குறைந்து விடாது..!" மனித உரிமை ஆர்வலர்கள்

டுமலை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைக்கான தீர்ப்பை மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர். 

நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது. அது சமமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது குரலாக ஒலிக்கத்தொடங்கியுள்ளன. அதற்கு காரணம் என்கவுன்டர், மரண தண்டனை போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களே உடுமலைசங்கர் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்காரணமாக இந்தத் திர்ப்பு சாதிய ரீதியில் அணுகப்படுவதாக ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்கு உதாரணமாக பேரறிவாளன் நளினி உள்ளிட்டோரின் மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

கௌசல்யா - சங்கர் இருவரும் கடந்த 2016 மார்ச் மாதம் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்கள் இருவரும் உடுமலைக்கு வந்தபோது பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சங்கர். கௌசல்யா படுகாயங்களுடன் உயிர் தப்பினார். 

சங்கர் படுகொலை தொடர்பாக வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதற்காக, கௌசல்யாவின் பெற்றோர்களே கூலிப்படைவைத்து சங்கரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி கௌசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் என்கிற மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ்க் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உள்ளிட்ட  மூன்று பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதுகுறித்து மனித உரிமை ஆர்வலர்களிடம் பேசினோம்.

‘‘சங்கரை படுகொலை செய்தது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக்  கடுமையாக தண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கு மரண தண்டனை என்பதை ஏற்க முடியாது’’ என்கிறார் மனித உரிமை ஆர்வலர் மார்க்ஸ் மேலும் தொடர்ந்தவர், “இந்தக் குற்றங்களுக்கு மரண தண்டனை ஒழிக்க வேண்டும். இதற்கு ஒழிக்கத் தேவையில்லை என்று எதுவும் வரையறுப்பதில்லை... குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை கூடாது என்று அனைவருமே போராடி வருகிறோம். இந்தப் பிரச்னையில் அவர்கள் குற்றவாளிகளா? குற்றவாளிகள் இல்லையா என்பது பிரச்னையில்லை. அதற்கு எல்லாம் அப்பாற்பட்டு மனித உயிரின் மதிப்பை உணர்ந்தே அதனை எதிர்க்கிறோம். அந்தவகையில் பார்க்கும் போது ராஜீவ் காந்தி படுகொலையில் 26 பேர் கொலை செய்யப்பட்டனர். உயிரிழிந்த 26 பேரும் அப்பாவிகள் அப்படிப்பட்ட அந்த வழக்கையும் எதிர்த்துப் போராடி வருகிறோம். ஆணவக் கொலைக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் மரணதண்டனை தேவையில்லை. மரணதண்டனையால் குற்றம் குறைந்துவிடும் எனச் சொல்லிவிட முடியாது. நீதிபதிகளும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளின் அடிப்படையில் சம்பவங்களைசென்சிடிவாக அணுகுவதால் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படுகிறது’’ என்றார் 

மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேனிடம் பேசினோம். ‘‘உடுமலைசங்கர் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை பாராட்டுகிறோம்.

இந்த வழக்கை புலனாய்வு செய்த போலீஸார் மற்றும் நீதிபதி ஆகியோருக்கு இந்தப் நேரத்தில் பாராட்டுத் தெரிவித்துக்கொள்கிறோம். கவுசல்யாவுக்கும் சாட்சிகளுக்கும் உறுதுணையாக இருந்த அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறோம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திய தீர்ப்பு. ஆனாலும் இந்த வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் உள்ள மரண தண்டனையைப் பயன்படுத்தக் கூடாது என்று பல வருடமாகப் போராடி வருகிறோம். நாங்கள் எதிர்த்துவரும் அந்தப் பிரிவுதான் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய கொடூரமான வழக்காக இருந்தாலும் அதற்கு மரணதண்டனை தீர்வு அல்ல. மரணதண்டனை இருக்கக் கூடாது என இந்தியச் சட்ட ஆணையமே பரிந்துரைக்கும் போது எதற்கு அந்த தண்டனை என்பதுதான் கேள்வி.

கவுசல்யாவின் தந்தை சிறை வாழ்கை அனுபவித்து வருவதுதான் அவருக்கு மிகப்பெரிய தண்டனையாக இருக்க முடியும். அதுவே இந்தக் குற்றத்துக்கான நியாயமான தீர்ப்பாகும். இந்த வழக்கில் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தியதாக நீதிபதி சொல்ல இடம் உள்ளது. சட்ட  முகாந்திரத்தை வைத்துப் பார்க்கும்போது அந்தத் தீர்ப்பு சரியானதாக இருக்கலாம். ஆனால் மனித உரிமை பார்வையில் இந்தத் திர்ப்பை ஏற்க  முடியாது. தலித் அல்லாத ஒருவருக்கு ஒரு தீர்ப்பும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு தீர்ப்பும் இருக்க முடியாது. அனைவருக்கும் நீதி என்பது சமமானது’’ என்றார்.