politics

தமிழக அரசு செயல்பட மறந்தது/மறுத்தது ஏன்? 2015 சென்னை மழையின் மீள் நினைவுகள் நிறைவுப் பகுதி

மிழக மழை, வெள்ளம் படிப்பினைகளும், சிறப்பான செயல்முறைகளும் என்ற தலைப்பில் (Tamil Nadu floods, LESSONS LEARNT & BEST PRACTICES)  2015-ம் ஆண்டு பெருமழை, வெள்ளம் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பேரிடர் மேலாண்மை அமைப்பு செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் அறிக்கையில் உள்ள தகவல்கள் இவைதான்:

சென்னையில் 2015-ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக வடகிழக்குப் பருவமழை பெய்த போதும், செம்பரம்பாக்கம் ஏரி முழுகொள்ளளவு அடைந்த பின்பும் ஏரி திறந்து விடப்படவில்லை. நீர் நிலைகளில் தண்ணீர் திறக்கப்படும் முடிவை, சரியான நேரத்தில் எடுத்திருந்தால், சென்னையும், சென்னைப் புறநகர் பகுதிகளையும் வெள்ளத்தில் மூழ்காமல் தடுத்திருக்க முடியும். அதே போல, பருவமழை காலங்களின்போது தாழ்வான பகுதிகள் அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என்று கருதக் கூடும் இடங்களில் படகுகளை தயாராக நிறுத்தி வைக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை நிர்வாகம் குறித்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவமழைக்கு முன்னதாகவும், ஆற்றுப்படுகைகளின் ஆக்கிரமிப்புகளை உரிய நேரத்தில் ஆய்வு செய்து, அதனை அகற்ற வேண்டும்.

பரிந்துரைகள்

ஒவ்வொரு நான்கு கிலோ மீட்டர் இடைவெளியில் தானியங்கி வானிலை மையங்கள் அமைக்க வேண்டும். இந்தத் தானியங்கி வானிலை மையங்கள், சாட்டிலைட் அனிமேஷன் வரைபடத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த வானிலை மையமானது, (ஒரு மணி நேரத்தில் 20 மி.மீ மழை பெய்வது முதல் ஒரு மணி நேரத்துக்கு 120 மி.மீ வரை மழை பெய்வதையும்) வானிலை மாற்றங்கள், பல்வேறு காரணங்களால் கன மழை பெய்வது போன்றவற்றை முன் கூட்டியே கணிக்கும் படி இருக்க வேண்டும்.

மண்டல வானிலை ஆராய்ச்சி மையங்களின் தகவல்களைக் கவனத்தில் கொண்டு, அணையிலிருந்தோ அல்லது ஏரியிலிருந்தோ தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்ய நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும். அணைக்கு அல்லது ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவைக் கொண்டு இந்தக் குழு தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

மழை காலங்களில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் தாலுகா அலுவலகங்களில் ஜெனரேட்டர்களை தயாராக வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு நகர்ப் பகுதிகளிலும், வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்கு திட்டமிடும் போது, அந்தப் பகுதியில் உள்ள மண்ணை பரிசோதனை செய்து முடிவுகள் எடுக்க வேண்டும்.

குறுக்கப்பட்ட ஆறு

இதையெல்லாம் தமிழக அரசு செய்திருக்கிறதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டோம். சென்னை நீரியல் நிபுணர் ஜனகராஜன், "2015-ம் ஆண்டு பெருமழை பெய்வதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்லியிருக்கிறது. அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் எல்லாம் தூர்வாரி விட்டதாக தமிழக அரசு சொல்கிறது.
அடையாறு ஆற்றில் வெள்ளத்தைத் தடுக்க  கரைகளில் சுவர் கட்டியிருக்கின்றனர். சில இடங்களில் கரையோரம் இருந்த மக்களை அப்புறப்படுத்தி இருக்கின்றனர். எல்லா இடங்களிலும் இதைச் செய்யவில்லை. ஆறுகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என்பது இப்போதைய வருவாய்த் துறை ஆவணங்கள் படி நடத்தப்படக் கூடாது. 1910 -ம் ஆண்டு செட்டில்மென்ட் ரிஜிஸ்டர் படிதான் ஆற்றின் நீள அகலம் அளக்கப்பட்டு, தூர்வாரப்பட வேண்டும். இந்த ஆவணத்தின் அடிப்படையில்தான் செம்பரம்பாக்கம் தொடக்கம் முதல் அடையாறு ஆறு கடலில் கலக்கும் வரை உள்ளபகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இப்போது அடையாறு இருக்கும் அகலம், நீளம் என்பது உண்மையானது அல்ல. ஆக்கிரமிக்கப்பட்ட அடையாறு வெகுவாகக் குறுகி விட்டது. ஆறு என்பது ஒரு நேர்க்கோடு என்று நினைக்கின்றனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதன் துணை ஏரிகளான 40 ஏரிகளிலிருந்து தண்ணீர் வருகிறது. இந்த 40 ஏரிகள், செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றின் உபரி நீர்தான் அடையாற்றில் வருகிறது.

ஆக்கிரமிப்பு

திருநீர் மலை- திருமுடி வாக்கம் பகுதிகளை இணைக்க அடையாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டியிருக்கின்றனர். இந்தப் பாலம் ஆற்றின் அகலத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், ஆற்றை விட குறுகியதாக இருக்கிறது. 2015-ல் திருநீர் மலைப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு இந்தப் பாலம் ஒரு முக்கிய காரணம். இந்தப் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் சொன்னோம். இது நெடுஞ்சாலைத்துறை செய்ய வேண்டும் என்று சொன்னார். இப்போது வரை இந்தப் பாலம் அகலப்படுத்தப்படவில்லை. எப்படி இன்னொரு வெள்ளத்தை இவர்களால்தடுக்க முடியும்.

அதே போல விமான நிலையம் அருகே அடையாற்றில் 300 தூண்கள் கட்டியிருக்கின்றனர். இந்த தூண்கள் காரணமாகத்தான் 2015-ல் ஏர் போர்ட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. அடையாறு கடலுக்கு அருகில் செல்லும் போது சரிவாக இருக்க வேண்டும். ஆனால், அடையாறு அப்படி சரிவாக இல்லை. ஓரிடத்தில் பள்ளமாகவும், ஓரிடத்தில் மேடாகவும் இருக்கிறது.  

வீணான மக்கள் பணம்  

அடையாறு ஆற்றை தூர்வாரியதாகச் சொல்லியிருக்கிறார்கள். அடையாற்றில் பல இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன. இதை அகற்றவே இல்லை. மாறாக ஆற்றில் இருக்கும் குப்பைகளை மட்டும் தூர்வாருகிறோம் என்ற பெயரில் அகற்றியிருக்கின்றனர். ஜே.சி.பி-யை வைத்து ஆங்காங்கே பள்ளம் தோண்டியிருக்கின்றனர். ஆற்றில் சேரும் இணைப்புக் கால்வாய்கள் அடைபட்டிருக்கின்றன. அவற்றை சரி செய்யவில்லை. பங்கிங்ஹாம் கால்வாயின் சரியான அகலம் 100 அடி. ஆனால், இப்போது எந்த ஒரு இடத்திலும் இந்தக் கால்வாய் 100 அடி அகலத்தில் இல்லை. பங்கிங்ஹாம் கால்வாயும், கொசஸ்தலை ஆறும் சேரும் இடத்தில் அடைப்பு இருக்கிறது. அதை நீக்கவில்லை.

மத்திய அரசின் பரிந்துரைப்படி தமிழக அரசு உயர் மட்டக்குழு அமைக்கவில்லை. நிரந்தரத் தீர்வு தேடுவதற்காக 1500 கோடி ரூபாய் வேண்டும் என்று மத்திய அரசிடம் மீண்டும் தமிழக அரசு கேட்டிருக்கிறது. நிரந்தரத் தீர்வுக்கு என்னென்ன திட்டங்களை தமிழக அரசு வைத்திருக்கிறது என்று பொதுமக்களிடம் சொல்வார்களா?  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாருகிறோம் என்று சொல்லி 20 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை விரயம் செய்திருக்கிறார்கள்" என்றார் கவலையுடன்.

நீர்பிடிப்புப் பகுதிகள் பாழ்

சுற்றுச்சூழல் ஆர்வலரும், செம்பரம்பாக்கம் ஏரி என்ற முகநூல் பக்கத்தை நடத்தி வருபவருமான நடராஜனிடம் பேசினோம். “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2015-ம் ஆண்டு உபரி நீர் திறந்து

விடப்பட்டது. ஆனால், அரசு திறந்து விட்ட பகுதியைத் தவிர, ஏரியின் இன்னொரு பக்கத்திலும் உபரி நீர் வெளியேறியது. அதை அதிகாரிகள் கவனிக்கவே இல்லை.

அடையாறு ஆறு முழுமையாகத் தூர்வாரப்படவில்லை. நீர் பிடிப்புப் பகுதிகளும் பாதுகாக்கபடவில்லை. நீர் பிடிப்புப் பகுதிகளில் வீடுகளோ அல்லது தொழிற்சாலைகளோ இருக்கின்றன. வீடுகளும், தொழிற்சாலைகளும் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் நீர் பிடிப்புப் பகுதிகளில் தூர்வாரப்படவில்லை. அதிகத் தண்ணீர் தேக்க விடாமல் மழை பெய்யும் போது ஏரிகளையும் உடைத்து விடுகிறார்கள். தண்ணீர் வீணாகிறது.  

கரையை உயர்த்தாத மர்மம்

அடையாறு ஆற்றில் முடிச்சூர் வரை 10 சதவிகிதம் அளவுக்குத்தான் தூர்வாரி இருக்கின்றனர். முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படவே இல்லை. தூர்வாருகிறோம் என்று சொல்லி விட்டு,  பெரியார் நகர் அருகில் இருக்கும் செம்பரம்பாக்கம் பகுதியில் மட்டும் சவுடு மணல் மட்டும் அள்ளியிருக்கிறார்கள். ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தினால், அதிகத் தண்ணீர் தேக்கலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு 19 அடி வரை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் தேக்கி வைத்தார்கள். பின்னர் பிரிட்டிஷ் காலத்தில் 21 அடியாக உயர்த்தப்பட்டது. 1990-ம் ஆண்டிலிருந்து 22 அடி தண்ணீர்தான் தேக்குகின்றனர். 30 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்குச் செம்பரம்பாக்கம் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும். ஏரியில் அதிகமாக தண்ணீர் தேக்கும் போது, அருகிலுள்ள இருங்காட்டுக் கோட்டை சிப்காட் பாதிக்கப்படும் என்பதால், தண்ணீரை அதிகமாகச் சேமித்து வைக்க மறுக்கிறார்கள்.

பெரியாறு அணையில் கேரளா அரசு அதிக அளவு தண்ணீர் தேக்கி வைக்க மறுக்கிறது என்று சொல்கிறோம். அவர்கள் சொல்லும் காரணம். அணையில் அதிக தண்ணீர் தேக்கி வைத்தால், கேரளப் பகுதிகள் பாதிக்கப்படும் என்று சொல்கின்றனர். அதே போலத்தான் இப்போது, செம்பரம்பாக்கம் ஏரி விஷயத்தில் தமிழக அரசு நடந்து கொள்கிறது. சிப்காட் மூழ்கி விடும் என்பதால், அதிக தண்ணீர் தேக்க அனுமதிப்பதில்லை.

அழிக்கத் திட்டம்

1980-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் விவசாயப் பாசனதுக்கு உதவிய  ஏரிகள், குடிநீர் ஆதாரங்களாக மாற்றப்பட்டன. அதே சமயத்தில்தான் செம்பரம்பாக்கம் அருகே சிப்காட் அமைக்கவும் நிலம் ஒதுக்கப்பட்டது. ஒரு பக்கம் நீராதாரத்தைப் பெருக்க திட்டமிடுகிறார்கள். இன்னொரு பக்கம் நீர் ஆதாரத்தை அழிக்க திட்டமிடுகிறார்கள்.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஏரியிலிருந்து நீர் வெளியேறும் பகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறது. அடையாற்றின் ஒரு பகுதி, அடையாறு கடலில் கலக்கும் இடம் சென்னை மாவட்டத்தில் இருக்கிறது. எனவே, மூன்று மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து செயல்பட்டால்தான் செம்பரம்பாக்கம், அடையாறு இரண்டையும் பாதுகாக்க முடியும்” என்றார்.

ஏரிகள் 40 சதவிகிதம் ஆக்கிரமிப்பு

அறப்போர் இயக்கத்தின், மாநிலக் குழு உறுப்பினர் ஹாரிப் சுல்தானிடம் பேசினோம். “நீர் நிலைகளில் அரசுதான் ஆக்கிரமிப்புகளைச் செய்துள்ளது. வில்லிவாக்கம் ஏரி 214 ஏக்கர் கொண்டது. இப்போது 38 ஏக்கர்தான் இருக்கிறது. மீதி எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். சிட்கோ  நகர் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 2013-ல் இதிலும் கூட மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் போது, கிடைத்த மண்ணை ஏரியில் கொட்டி மேடு ஆக்கி விட்டனர். ஏரி ஆக்கிரமிப்புக்கு முன்பு மழை பெய்தால் இரண்டு நாள் மட்டும்தான் தண்ணீர் நிற்கும். ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாக  2015-ல் சிட்கோ நகருக்குள் 10 முதல் 15 அடி தண்ணீர் நின்றது.

அம்பத்தூர் ஏரி 646 ஏக்கர் இருந்தது. இப்போது 440 ஏக்கர்தான் மிச்சம் இருக்கிறது. 1990-92-ம் ஆண்டில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் மனைகளைப் போட்டு விற்பனை செய்து விட்டனர். இப்போது குடியிருப்பாக இருக்கிறது. இப்படி அரசாங்கமே ஆக்கிரமிப்பு செய்கிறது. சென்னை நகருக்குள் வள்ளுவர் கோட்டமே ஒரு குளத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது. ரெட்டேரி என்பதே இரண்டு ஏரிகள். ஆனால், இப்போது ஒரு ஏரியைக் காணவில்லை. ஒரே ஒரு ஏரிதான் இருக்கிறது. அதுவும் 20 ஏக்கர்தான் இருக்கிறது.

போரூர் ஏரி 800 ஏக்கர் இருந்தது. இந்த ஏரியை ஆக்கிரமித்துதான் தனியார் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கொரட்டூர் ஏரியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கொரட்டூர் ஏரியில் 60 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று 2013-ம் ஆண்டு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவைப் பொதுப்பணித்துறை அமல்படுத்தவில்லை. இன்னும் ஆக்கிரமிப்பு இருந்து கொண்டு இருக்கிறது.
நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணை இல்லாமல் நடப்பதில்லை. கொரட்டூர் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு சாலை, மின் வசதி, தண்ணீர் வசதி இருக்கிறது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆதரவு இல்லாமல், ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புக்கு எப்படி இந்த வசதிகள் செய்யமுடியும். அரசியல்வாதிகள்தாம் நீர் நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் ஆக்குகின்றனர். அவர்களிடமே ஆக்கிரமிப்பை எடு என்றால் எப்படி எடுப்பார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தால் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் எல்லாமே ஏரிகளில் கட்டப்பட்டவைதாம் என்பது தெரியும்.

1954-ல் உலகம் முழுவதும் உள்ள பகுதிகளை அமெரிக்க ராணுவம் வரைபடமாகத் தயாரித்திருக்கிறது. அந்த வரைபடத்தில் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் இருக்கும் ஏரிகளை தெளிவாகப் பார்க்கலாம். தமிழக அரசின் சார்பில்1970-80 களில் டோப்போ ஷீட்  தயாரித்திருக்கிறார்கள். இதிலும் நீர் நிலைகளின் உண்மையான நிலவரம் தெரியும். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு கூகுள் மேப் இருக்கிறது. இதை எல்லாம் வைத்துதான் நாங்கள் ஆய்வு செய்தோம். எங்கள் ஆய்வின் மூலம் சென்னையைச் சுற்றி உள்ள அனைத்து ஏரிகளும் 30 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை ஆக்கிரமிக்கபட்டிருக்கிறது. பல்லாவரம் பெரிய ஏரி, தாம்பரம் புறநகர் உள்ள ஏரிகளும் 40 சதவிகிதம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. 2015-ல் அமுதா ஐ.ஏ.எஸ் என்ற அதிகாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். ஆனால்,  அழுத்தம் கொடுத்து அவரை மாற்றி விட்டனர்.  2016-ல் மழை பெய்யவில்லை என்பதால் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் தப்பித்து விட்டன.

வில்லிவாக்கம் ஏரியை முழுமையாக மீட்க வேண்டும் என்று வழக்குப் போட்டோம். பசுமை தீர்ப்பாயத்தில் இறுதிக்கட்ட விசாரணையில் இருக்கிறது. இந்த ஏரி ஆக்கிரமிப்புக்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். யாருமே தண்டிக்கப்படாமல் போவதால்தான் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. எங்கள் வழக்கின் காரணமாக இப்போது ஏரியில் 24 ஏக்கரை மீண்டும் கொடுத்து விடுவதாக அரசு சொல்லியிருக்கிறது. 11 ஏக்கர் வேண்டும் என்றனர். ஆனால், அதை அரசுக்குக் கொடுக்கக் கூடாது என்று எடுத்துக் கூறியிருக்கிறோம். இதே போல ஒவ்வோர் ஏரியையும் மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

மீண்டும் ஒரு பெருமழை பெய்யும் முன்பாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்தத் தொடரை இங்கே நிறைவு செய்கிறேன்.

சென்னை மழையின் மீள் நினைவுகள் 1

சென்னை மழையின் மீள் நினைவுகள் 2

சென்னை மழையின் மீள் நினைவுகள் 3

சென்னை மழையின் மீள் நினைவுகள் 4

சென்னை மழையின் மீள் நினைவுகள் 5

சென்னை மழையின் மீள் நினைவுகள் 6

சென்னை மழையின் மீள் நினைவுகள் 7

சென்னை மழையின் மீள் நினைவுகள் 8

சென்னை மழையின் மீள் நினைவுகள் 9

சென்னை மழையின் மீள் நினைவுகள் 10

சென்னை மழையின் மீள் நினைவுகள் 11