politics

``மல்லையா கேட்டது நியாயம்தான்!" - வெளிச்சத்துக்கு வந்த இந்தியச் சிறைகளின் உண்மை முகம்!

இந்திய வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்தாமல் லண்டனுக்குப் பறந்து சென்று பதுங்கிக் கொண்டார் மல்லையா. அவரை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து சிறையில் அடைக்க வேண்டுமென இந்தியாவிலுள்ள வங்கிகள் சேர்ந்து வழக்குத் தொடுத்தன. தண்டனை உறுதியாகி மல்லையா ஒருவேளை சிறைக்குக் கொண்டுவரப்பட்டால் மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில்தான் அவரை அடைப்பார்கள் என மல்லையா தரப்புக்குத் தெரிய வந்தது. உடனே மல்லையா தரப்பிலிருந்து சில கோரிக்கை வைத்தார்கள். அவருக்கு ஏற்றாற்போல் படுக்கை, வெஸ்டர்ன் டாய்லெட் ஆகிய வசதிகள் கொண்ட சிறையில்தான் மல்லையா இருப்பார் என அது தொடர்பான புகைப்படங்களை இந்திய அரசு சமர்ப்பித்தது. அதைப் பார்த்த மல்லையா தரப்பினர், ஆர்த்தர் ரோடு சிறையில் இயற்கையான வெளிச்சமோ, போதிய காற்று வசதியோ இல்லை என்றார்கள்.

அத்துடன், பொதுவாக இந்தியச் சிறைகளிலேயே ஒரு கைதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. ஆதலால் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வரக் கூடாது எனச் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்ட நீதிபதி, மல்லையாவை இந்தியாவில் அடைக்க இருப்பதாகக் கூறப்படும், சிறையின் வீடியோ பதிவைச் சமர்ப்பிக்குமாறு இந்தியாவுக்கு உத்தரவிட்டார். இப்படியாக இந்த வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் மல்லையாவுக்கு எதிராகத் தீர்ப்பு வருமாயின் அறுபது நாள்களுக்குள் அவர் இந்தியா கொண்டு வரப்படுவார். இந்த வழக்கின் போக்கை வைத்துப் பார்க்கிற போது மல்லையா எதிர்பார்க்கிற சிறைச்சாலை வசதிகளுக்கு இந்திய அரசு வளைந்து கொடுப்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்கிற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் கேசவனிடம் பேசினேன்.

``சிறைச்சாலையில் ஒரு மனிதன் வாழ்வதற்கான அடிப்படைச் சூழலே இல்லை என்பது மல்லையாவின் மூலமாக உலக அரங்குக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டுமேயன்றி அவருக்கு அரசு கொடுக்கும் சலுகையாகவே, அதீத அக்கறையாகவோ பார்க்கக் கூடாது. அடிப்படை வசதிகள் இன்றி நான்கு நாள்களுக்கு ஒருமுறை ஒரு கைதி இந்தியச் சிறைச்சாலைகளில் இறந்து போகிறார். போதிய காற்றும், வெளிச்சமும், சரியான மருத்துவ வசதி இல்லாமலும், எளிதில் தொற்றுநோய் பரவியும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாமலும், சிறையிலிருந்து மருத்துவமனை கொண்டு வருவதற்குள் பல கைதிகள் இறந்துள்ளனர். இறந்து கொண்டும் இருக்கிறார்கள். இதுதான் நம் நாட்டுச் சிறைச்சாலைகளின் நிலை. அவை மல்லையா மூலமாக இன்னும் பகிரங்கமாகத் தெரிய வேண்டுமென்றே விரும்புகிறேன். இந்தியப் பெரிய சிறைச்சாலைகளில் மிகப்பெரிய பிரச்னை என்பது அதிக இடநெருக்கடி. இதைச் சரி செய்வதற்காகவே கைதிகளை நீண்டநாள்கள் சிறையில் வைத்திருக்காமல் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால், சிறையில் இருக்கும்போது அவர்கள் அனுபவிக்கிற அவதியை நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய முகிலன் காற்று கூட வராத, கழிவறைக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு விடிய விடிய தூங்காமல் இருக்கிறார். 

சிறைச்சாலை என்பது தண்டனை வழங்குகிற இடம்தான். ஆனால், ஒரு மனிதன் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு இருக்கிறது. அது அங்கே இருக்கிறதா எனக் கேட்டால் நிச்சயம் இல்லை. 

சிறைச்சாலை என்பது குற்றவாளிகள் மட்டும் இருக்கிற இடம் இல்லை. மெழுகுவத்தி ஏந்தியதற்காக திருமுருகன் காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். துண்டு பிரசுரம் கொடுத்ததற்காகக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி வளர்மதி பல துன்பங்களைச் சிறையில் அனுபவித்தார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியதற்காக வழக்கு பதியப்பட்டு பலர் உள்ளே இருக்கிறார்கள். குற்றவாளிகள் மட்டுமன்றி இவர்களும்தாம் சிறைத் துன்பங்களில் உழலுகிறார்கள் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். 

இந்தியச் சிறைச்சாலைகளின் தரம் பற்றி மல்லையா போன்றவர்களின் வழியாகத் தெரிய வருவது வரவேற்கத்தக்கதுதான். இந்தியாவிலுள்ள பல பெரிய சிறைச்சாலைகள் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டவை. இந்தியர்களை பழிவாங்கும் நோக்கில் கட்டப்பட்ட அந்தச் சிறைச் சாலைகள் எப்படி மனிதன் வாழத்தகுந்ததாக இருக்கும். பழைய சிறைச்சாலைகள் இடித்து புதிதாகக் கட்டப்பட வேண்டும். கைதிகளுக்குச் சுத்தமான குடிநீர், காற்றோட்டமான சூழல் ஆகியவற்றை வெளிப்படையாக உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குற்றச் செயலுக்குக் காரணம் தனி நபர் அன்றி நம்முடைய சமூக அமைப்பே காரணம். பழிக்குப் பழி என்பது சிறைத்தண்டனை அல்ல. சீர்த்திருத்தும் நோக்கோடு தண்டனை கொடுக்க வேண்டும். இதர குடிமகன் போல, நல்ல மனிதனாக வாழ பயிற்சி அளிக்கக்கூடிய இடமாகத்தான் சிறை இருக்க வேண்டும்." என்றார் வழக்கறிஞர் கேசவன்.