politics

'நிதி முறைகேடு, முரசொலி அறக்கட்டளை, இடைத் தேர்தல்கள்!'  - 19 முதல் அழகிரி அட்டாக்  

மெரினா சமாதியில் புயலைக் கிளப்பிவிட்டு, சென்னை ரெஸிடென்சி ஓட்டலில் தங்கியிருந்து, நடப்பதைக் கவனித்துவருகிறார் மு.க.அழகிரி. 'தனிக்கட்சி குறித்து குழப்பமான மனநிலையில் இருக்கிறார். ஆனால், ஏதோ ஒருவகையில் அடுத்தகட்ட அரசியல் அதிரடியை வரும் 19-ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இரங்கல் தீர்மானத்தை வாசித்தார் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன். நேற்று கருணாநிதி சமாதியில் நின்று கொண்டு, அழகிரி பேசிய வார்த்தைகளை ஸ்டாலின் தரப்பினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 'அவர் அப்படிச் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். அனைத்தையும் நாங்கள் எதிர்பார்த்துத்தான் காத்திருக்கிறோம்' என எடுத்த முடிவில் உறுதியாக இருக்கின்றனர் ஸ்டாலின் தரப்பினர். 'தி.மு.க-வுக்குள் மீண்டும் இணைவோம்' என நம்பிக்கையோடு காத்திருந்த அழகிரி ஆதரவாளர்களும் சோர்ந்து போய் உள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் பேசினோம். "கருணாநிதி பெயரில் தனிக்கட்சியை அழகிரி தொடங்குவார் எனச் சிலர் பேசிவருகின்றனர். அப்படியொரு முடிவில் அவர் இல்லை. இந்தக் கட்சியைக் காப்பாற்றத்தான் போராடிக்கொண்டிருக்கிறார். அவர் எப்போது மதுரைக்கு வருவார் எனக் காத்துக்கொண்டிருக்கிறோம். ஓட்டலில் இருந்தபடியே, தி.மு.க-வில் நடப்பதைக் கவனித்துவருகிறார். அவ்வப்போது கோபாலபுரம் சென்று தயாளு அம்மாவைப் பார்த்துவருகிறார். 
 

'கட்சிக்குள் மீண்டும் அழகிரியைச் சேர்க்க வேண்டும்' என செல்வி குடும்பம் மட்டுமல்லாமல், மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டவர்களும் வலியுறுத்திவந்தனர். 'அழகிரியைச் சேர்ப்பதில் அன்பழகனுக்கு உடன்பாடில்லை' என்கின்றனர். கருணாநிதி சொல்வதைத்தான் இதுநாள் வரை பேராசிரியர் கேட்டுவந்தார். இப்போது, ஸ்டாலின் சொல்வதை அவர் கேட்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம். செயல் தலைவர் ஸ்டாலின் உடன் இருக்கும் சிலர் செய்யும் வேலைகளால்தான், இத்தனை பிரச்னைகளும்" என்றவர், 

"தி.மு.க-வின் மிக முக்கியமான அங்கமாக இருக்கும் முரசொலி அறக்கட்டளையில் துரை தயாநிதியைச் சேர்க்க வேண்டும் என அழகிரி வலியுறுத்திவந்தார். மிக முக்கியமான கணக்கு வழக்குகள் எல்லாம், இந்த அறக்கட்டளையின் வழியாகத்தான் இயங்குகின்றன. இதை அழகிரி குறிவைக்கக் காரணம், ஸ்டாலினுடன் எப்போதும் வலம்வரும் திருவண்ணாமலைப் புள்ளி ஒருவர் ஃபைனான்ஸ் காரியங்களுக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதாகத் தகவல் வந்ததுதான். 'கட்சியையும் தவறான பாதைக்குக் கொண்டு போகிறார்கள்; கட்சி நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள்' என எங்களிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அழகிரி. எனவேதான், 'அண்ணன் உள்ளே வந்துவிட்டால், இந்த முறைகேடுகள் அனைத்தும் வெளியில் தெரிந்துவிடும்' என்பதால்தான், அவருடைய வருகைக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்" என விவரித்தவர், 

"கோபாலபுரத்தில் கருணாநிதி மீது அழகிரி கோபத்தை வெளிப்படுத்திய சம்பவத்தையும் சிலர் பேசுகின்றனர். அன்று ஸ்டாலின் மீது இருந்த கோபத்தில் கருணாநிதியைச் சந்தித்து, 'கொன்னுடுவேன்' என ஆத்திரத்தில் வார்த்தையை விட்டுவிட்டார் அழகிரி. அதையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் ஸ்டாலின்.  அதன்பிறகு, செயல் தலைவராக அவரை நியமித்ததற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் அழகிரி. குடும்பத்தினர் சமரசம் பேசியும் அழகிரியைத் தடுப்பதற்குக் காரணம், 'உதயநிதியின் என்ட்ரிக்கு அவர் இடையூறாக இருப்பார்' எனவும் ஸ்டாலின் தரப்பினர் நினைப்பதுதான். அடுத்து என்ன செய்வது என அவர் இன்னமும் முடிவெடுக்கவில்லை. வரும்    19-ம் தேதி, மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார் அழகிரி. அது முடிந்ததும், ஆதரவாளர்களை அழைத்து கருத்துகளைக் கேட்க இருக்கிறார். அதன்பிறகே, அரசியல்ரீதியான முடிவுகளை அறிவிப்பார். 

அதேபோல திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அவரது தரப்பில் யாராவது நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் வலம் வருகிறது. அப்படி எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை. தி.மு.க-வை காப்பாற்றும் வகையில்தான் அவருடைய செயல்பாடுகள் இருக்குமே தவிர, கழகத்துக்கு எதிராக எந்த முடிவையும் எடுக்க மாட்டார். வெளியில் இருந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார். ரஜினியுடன் மிகுந்த நட்பில் இருக்கிறார் அழகிரி. அவரோடு இணைந்து செயல்படுவதைக் காலம் முடிவுசெய்யும். நாடாளுமன்றத் தேர்தலிலும் செயல் தலைவரின் செயல்பாடுகளைக் கட்சி நிர்வாகிகள் பார்க்கத்தான் போகிறார்கள்" என்றார் நிதானமாக.