politics

` ஆட்சியைக் கவிழ்க்க நாங்கள் தயார்... ஆனால்?!'  - தினகரன் பேச்சால் கொந்தளித்த அறிவாலயம்

தி.மு.க-வின் புதிய தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிகழ்வை, தினகரனைத் தவிர்த்து அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ளன. `எடப்பாடி பழனிசாமி அரசைக் காப்பாற்றுவது தினகரன்தான். ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்றால் எங்கள் பக்கம் அவர் வந்திருக்க வேண்டும்' எனக் கொந்தளிக்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த பொதுக்குழுவில் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின். அவருக்கு அடுத்து கட்சியின் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டார் துரைமுருகன். இந்த நிகழ்வில் பேசிய ஸ்டாலின், ' தமிழகத்தை ஊழல் ஆட்சியில் இருந்து விடுவிப்பதே நமது முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிந்துவிட்டு, அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்ப்பிக்க வேண்டும். தி.மு.க-வின் மரபணுக்களைச் சுமந்து புதிய கனவுகளோடு இன்று நான் புதிதாய் பிறந்துள்ளேன்' என நெகிழ்ச்சியாகப் பேசினார். அவரது இந்தப் பேச்சைக் கூட்டணிக் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ளன. 

அதேநேரம், ஸ்டாலின் கருத்தை விமர்சித்துப் பேசிய தினகரன், ' மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். கருணாநிதி இருந்தபோதே அடுத்தகட்ட தலைவராக அவர் அறிமுகம் செய்யப்பட்டார். எதுவும் தெரியாத மாதிரி இன்றுதான் தெரிய வந்ததுபோல், பகல் கொள்ளை நடக்கும் ஆட்சி, திருடர்கள் ஆட்சி என்றெல்லாம் பேசியிருக்கிறார். வாஜ்பாய் மறைவுக்கு சென்றிருந்தபோது ஸ்டாலினும் டி.ஆர்.பாலுவும் அமித் ஷாவுக்காகக் காத்திருந்து சந்தித்தனர். அப்போது கருணாநிதி புகழ் அஞ்சலிக்கு, அமித்ஷா வருவதாக கூறிவிட்டு தற்போது வேறு ஒருவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனால் கோபமான ஸ்டாலின், தமிழகத்தில் காவிமயம் ஆவதை விட மாட்டோம் என்று விரக்தியில் பேசுவது வெளிப்படுகிறது. இது தலைமைக்கான பண்பாக தெரியவில்லை. மறைமுகமாக கூட்டணி அமைத்துப் பார்த்தனர். அந்தக் கூட்டணி அமையாத விரக்தியில்தான் பேசுகின்றனர்' எனக் கூறியிருந்தார். 

தினகரனின் இந்தக் கருத்தை தி.மு.க நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``கழகத்தின் புதிய பொருளாளராக பொறுப்பேற்ற பிறகு இன்று காலை அறிவாலயம் வந்திருந்தார் துரைமுருகன். அவருக்குக் கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின்னர், தினகரனின் பேச்சு குறித்து நிர்வாகிகள் சிலர் பேசியுள்ளனர். அப்போது பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், ' தினகரன் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். அதனால்தான், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். தொடக்கத்தில், அ.தி.மு.கவில் இருக்கும் ஆறு அமைச்சர்கள் மட்டுமே தனக்கு எதிராக இருப்பதாகப் பேசினார். இப்போது ஒட்டுமொத்த அ.தி.மு.கவுக்கும் எதிராக அவர் பேசுகிறார். அவருடன் இருப்பவர்கள் யாரும், அவரை ஒரு பெரிய தலைவர் என நினைத்துக்கொண்டு வரவில்லை. ஜெயக்குமாரைப் பிடிக்காமல் வெற்றிவேல் வந்தார். பன்னீர்செல்வத்தைப் பிடிக்காமல் தங்க.தமிழ்ச்செல்வனும் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்காமல் செந்தில் பாலாஜியும் அவரிடம் வந்தனர். தமிழ்நாடு முழுக்கவே அவரிடம் இருக்கும் ஆட்கள் எல்லாம் இப்படித்தான் வந்தனர். 

ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பின், அவரை ஆதரித்து வந்த ஒரே ஒரு எம்.எல்.ஏவும் உள்ளூர் அமைச்சரைப் பிடிக்காமல்தான் வந்தார். ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், எப்போதோ தி.மு.க தலைமையிடம் வந்து தினகரன் பேசியிருக்க வேண்டும். அப்படிப் பேசாமல் ஸ்டாலினை விமர்சிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நாங்கள் எதிரியாகத்தான் பார்க்கிறோம். அதனால்தான், தினகரன் தரப்பினர் மீது ரெய்டு நடந்தபோது, 'குறிவைத்துச் செயல்படுகிறார்கள்' என விமர்சித்தோம். அதுவே, எடப்பாடி பழனிசாமி தரப்பை நோக்கி ரெய்டு நடந்தபோது, `நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஆளுநரிடம் மனு கொடுத்தோம். எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பது புரியாமல், இவர் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சொல்லப் போனால், இந்த ஆட்சிக்கு எதிராக தினகரன் இல்லை. மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்துகொள்ளவே அவர் விரும்புகிறார். 

ஆனால், தினகரனைத் தவிர மற்றவர்களைச் சேர்த்துக்கொள்ளும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். தினகரன் வந்துவிட்டால், தங்களுடைய தலைக்கு மேலே போய்விடுவார் எனவும் அவர்கள் அச்சப்படுகின்றனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் நடத்திய கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை விமர்சித்தார் தினகரன். அவரது இந்தப் பேச்சை ரசிக்காத தமிமுன் அன்சாரி எங்கள் பக்கம் வந்துவிட்டார். அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளில் ஷேக் தாவூதைத் தவிர வேறு யாரும் இவர் பக்கம் இல்லை. எந்தக் கட்சியும் இவரை விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி அரசை, தன்னுடைய சுயநலத்துக்காக இவர் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்' எனக் கொதிப்புடன் விவரித்தார். குறிப்பாக, தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியொரு விமர்சனத்தைத் தினகரன் வெளியிட்டதை தி.மு.கவினர் பலரும் ரசிக்கவில்லை" என்றார் விரிவாக.