politics

தினகரன், அழகிரி, ஸ்டாலின், இடைத்தேர்தல்கள்! - என்ன சொன்னார் எடப்பாடி பழனிசாமி? 

குட்கா விவகாரத்தில் ஆளும்கட்சியை நோக்கி, மத்திய அரசின் வளையம் இறுகிக் கொண்டிருக்கிறது. 'ரெய்டு நடப்பது ஒருவகையில் நல்லதுதான். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்' என விவாதித்துள்ளனர் அமைச்சர்கள். 

சென்னை, நொளம்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் வீட்டில் நடந்த குட்கா ரெய்டை அடுத்து, 'புதிய டி.ஜி.பி யார்?' என்ற கேள்வி தமிழக காவல்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது. 'இந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவும் வாய்ப்பு இருக்கிறது' என சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். செங்குன்றத்தில் குட்கா குடோனை நிர்வகித்து வந்த மாதவராவ் என்பவரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா உரிமையாளர்கள் அளிக்கப்போகும் வாக்குமூலம், அ.தி.மு.க அரசுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

"குட்கா வழக்கு, 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு, முதல்வர் துறையில் நடக்கும் ஊழல்கள் எனத் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பை நோக்கி நகர்ந்தாலும், ஆளும்கட்சி தரப்பில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தவில்லை. 'ரெய்டு நடப்பதன் மூலம் மத்திய அரசுக்கு அடிபணிந்து நாங்கள் நடக்கவில்லை' என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்ற மனநிலையிலேயே அமைச்சர்கள் வலம் வருகின்றனர்.  'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது. மடியில் கனமில்லை. எனவே, வழியில் பயமில்லை' என அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுவதும் இந்த அடிப்படையில்தான்" என விவரித்த அ.தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவர், "மத்திய அரசின் ரெய்டு நடவடிக்கைகள் வேகம் எடுப்பதை அமைச்சர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. டிசம்பருக்குள் தேர்தலைக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

அதனால்தான், இந்த அரசைக் கலைக்க முயல்வதன் ஒருபகுதியாக ரெய்டை நடத்துகிறார்கள். இதை உணர்ந்துதான், 'எந்த வடிவத்தில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயார். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்' என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த சில நாள்களாக, ரெய்டைப் பற்றிக் கவலைப்படாமல் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசித்து வருகிறார் முதல்வர். சில அமைச்சர்களிடம் அவர் பேசும்போது, 'இந்த இரண்டு தொகுதிகளிலும் தினகரன் நிறுத்தக் கூடிய வேட்பாளர்களை எதிர்கொள்வது எளிது. ரெய்டு நடத்தப்படுவதும் ஒரு வகையில் நல்லதுதான். இதன்மூலம், திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் 35 சதவீத வாக்குகளை நம்மால் பெற்றுவிட முடியும். நாம் நிச்சயம் சரிவை நோக்கிச் செல்ல மாட்டோம். 

இந்த இரண்டு தொகுதிகளிலும் ஸ்டாலின் நிலைமைதான் சிக்கலாக இருக்கிறது. இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிச்சயம் களமிறக்குவார் அழகிரி. தி.மு.கவுக்கு வர வேண்டிய வாக்குகளை அழகிரியே பிரித்துவிடுவார். நமக்கு இருக்கும் சவால், தினகரன் தரப்புக்குப் போகக் கூடிய சமுதாய வாக்குகளை அ.தி.மு.கவுக்குக் கொண்டு வருவதுதான். இதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு வைத்திலிங்கத்துக்கும் காமராஜுக்கும் இருக்கிறது. இந்த வாக்குகளை நம் பக்கம் கொண்டு வந்துவிட்டால், மற்ற சமுதாய வாக்குகளும் தினகரனுக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்தத் தேர்தல் நம்மைவிட, ஸ்டாலினுக்குத்தான் அக்னி பரீட்சையாக இருக்கப் போகிறது. திருவாரூரில் அதிக வாக்குகளை அழகிரி வாங்கினாலும், அவர் ஒரு பெரிய சக்தியாக இருக்க மாட்டார்.

அழகிரியைக் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். நமக்கு வர வேண்டிய வாக்குகளை அவர் பிரித்துவிடாமல் பார்த்துக் கொண்டால் போதும். திருப்பரங்குன்றத்தில் தினகரனைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் நாம் பெறக் கூடிய வெற்றிகள், இந்த ஆட்சிக்கு மேலும் வலு சேர்க்கும். திருப்பரங்குன்றம் இரட்டை இலைக்கான தொகுதி. அங்கு நமக்கான வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும். அழகிரிக்கும் தினகரனுக்கும்தான் இரண்டாவது இடத்துக்கான போட்டி இருக்கும். திருவாரூரில் நமக்கும் அழகிரிக்கும்தான் போட்டி இருக்கும். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் முதல்வர்" என்றார் விரிவாக. 

'இடைத்தேர்தல்களில் தி.மு.கவுக்கு நான்காவது இடம் கிடைக்கும். என்னை நம்பி வந்தவர்களுக்கு நான் கடைசி வரையில் பாதுகாவலராக இருப்பேன்' என்றெல்லாம் அழகிரி பேசுவதை, தி.மு.க வட்டாரத்தில் கவனித்துக் கொண்டு வருகின்றனர். 'பேரணியின் மூலம் செல்வாக்கைக் காட்ட முடியாத அழகிரி, இடைத்தேர்தல்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்' என்கின்றனர் அவரது அழகிரியின் ஆதரவாளர்கள்.