மதுரையின் 'கதி'?! மனம் வருந்திய பாண்டித்துரை! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

Vikatan Correspondent
politics

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செந்தமிழ் வளர்த்த செல்வப் பாண்டியன்; சங்கம் நிறுவிய சான்றோன்; கல்வியையும், செல்வத்தையும் ஒருங்கே பெற்ற மாமனிதன்; பாலவநத்தம் ஜமீன்தாரின் மகன்.. இப்படிப் பல்வேறு புகழுரைக்குச் சொந்தக்காரர் பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரையார். அவருடைய நினைவு தினம் இன்று....

புலவர்கள் நிறைந்த அவைக்களம்!

பாண்டிய நாட்டின் ஒரு பாளையப் பகுதியாக ராமநாதபுரம் இருந்த காலம் அது. அங்கு, இசைமேதையும் ஜமீன்தாரருமாக விளங்கிய பொன்னுச்சாமிக்கு, மகனாகப் பிறந்தவர்தான் பாண்டித்துரை. இவர் 1867-ம் ஆண்டு மார்ச் 21-ம் நாள் பிறந்தார். உக்கிரபாண்டியன் என்பது அவரது இயற்பெயர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த பாண்டித்துரை, கவர்ச்சியான தோற்றமும், இனிமையாகப் பேசும் ஆற்றலும் கொண்டிருந்தார். ஆசான் அழகர் ராசுவிடம் நற்றமிழையும், வழக்குரைஞர் வேங்கடசுவர சாஸ்திரியிடம் ஆங்கிலத்தையும் பயின்றார். 

அவர், ஆங்கில உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சேர்ந்து கல்வி பயின்றபோது, ஆசான்கள் வியக்கும் அளவுக்கு அவருடைய கல்வி ஞானம் இருந்தது. 1884-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி, ஜமீன் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட பாண்டித்துரை, தொடர்ந்து சதாவதானம் முத்துச்சாமி, ராமசாமி, பழனிகுமாரத் தம்பிரான் போன்றோரிடம் இதிகாசம், புராணம், சைவ சித்தாந்தம் முதலியவற்றைக் கற்றுக் கொண்டார். இப்படிப் பலரிடமும் கல்வி பயின்றதால், அவருடைய பேச்சாற்றல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அத்துடன் அவருடைய அவைக்களம், புலவர்கள் நிறைந்தும் காணப்பட்டது. 

சைவத்தில் மிகுந்த பற்று கொண்ட பாண்டித்துரையார், மிகுந்த பொருட்செலவில் ஒரு மாளிகையை உருவாக்கினார். அதற்கு, ‘சோமசுந்தர விலாசம்’ என்று பெயரிட்டதோடு, அந்த மாளிகைக்குள் இருந்த சிறுமண்டபத்தில் தினந்தோறும் சிவபூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் ஒவ்வொரு நாளும் இசைப் புலவர்களைக் கொண்டு தேவாரம், திருவாசகம் மற்றும் தமிழ் கீர்த்தனைகளைப் பாட வைப்பார். இது முடிந்த பின்னர், அரசு அலுவல்களைக் கவனிப்பார். பின்பு, புலவர்களுடன் கலந்துரையாடுவார். நாராயணார், வீராசாமியார், சிவகாமியாண்டார், சுந்தரேசர் போன்றோர் இவரது அவையை அலங்கரித்த குறிப்பிடத்தகுந்த புலவர்கள். பூச்சி சீனிவாசனார், இவருடைய அவையில் இடம்பெற்றிருந்த பெரும் இசைப்புலவர் ஆவார். இங்கு கூடியிருக்கும் புலவர்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அதிகாரமாக திருக்குறள் பரிமேலழகர் உரை விவாதிக்கப்பட்டது. சில சமயங்களில், பாண்டித்துரையே பல நூல்கள் பற்றி விரிவுரை நிகழ்த்துவார். இவருடைய அவைக்களத்துக்கு வந்து பரிசுகள் பெற்றுச் சென்றவர்கள் ஏராளம். இவரால் வெளிவந்த தமிழ் நூல்கள் ஏராளம்.

பண்டையத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்த உ.வே.சா., பாண்டித்துரையால் பலமுறை சிறப்பிக்கப்பட்டார். மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்களை முதன்முதலில் உ.வே.சா வெளியிடுவதற்குக் காரணமாக இருந்தவர் பாண்டித்துரை. இதுகுறித்து உ.வே.சா., மணிமேகலை நூலின் முதல்பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். பாண்டித்துரை தனது ஆசான் ராமசாமி மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் வெளியிட்டார். இது தவிர, இன்னும் பிற நூல்களையும் வெளியிட்டார். அவருடைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் பல படிக்கப்பட்டு, அவற்றில் இடம்பெற்ற அறம், பொருள், இன்பம் பற்றிய பொதுப் பாடல்களைத் தனியாக எழுதச் செய்தார். அதை, திருக்குறள் போல முப்பாலாகவும், அதிகாரமாகவும் பிரித்து,‘பன்னூற்றிரட்டு’என்ற பெயரில் வெளியிட்டார்.

மதுரையில் தமிழுக்குக் 'கதி' !

பாண்டித்துரையார், ஒருசமயம் தூங்கா நகர் என்று அழைக்கப்படும் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த அறிஞர்கள் பலர், அவருடைய சொற்பொழிவைக் கேட்க விரும்பினர். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக் கொண்டார் பாண்டித்துரை. அதன்பொருட்டு, அவருக்கு கம்ப ராமாயணம், திருக்குறள் ஆகிய இரண்டு நூல்கள் தேவைப்பட்டன. இரு நண்பர்களிடம் சொல்லி அனுப்பியும் உரிய காலத்தில் அந்த இரண்டு நூல்களும் அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் மன வேதனையடைந்த அவர், "செந்தமிழ் தோன்றி வளர்க்கப்பட்ட மதுரையில் தமிழுக்குக் 'கதி' என்று சொல்லப்படும் (க) கம்பராமாயணமும், (தி) திருக்குறளும் கிடைப்பதும் அரிதாகி விட்டதே" என்று வருந்தினார். இந்தப் பெருங்குறை நீங்க, கூடல் நகரில் தமிழ் செழித்தோங்க நண்பர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
 
"தமிழ் நூல்களைப் பெற்றிராத தமிழர்கள், மதுரையில் மட்டுமல்ல, தமிழ் நாடெங்கும் வாழ்ந்து வருகின்றனரே! அந்நியர் ஆட்சி, ஆங்கில மொழி மீது மோகத்தையும், தாய்த் தமிழ் மீது தாழ்ச்சியையும், தமிழர்கள் கொள்ள வைத்துள்ளதே? மொழிப் பற்றின்றிப் பாழ்பட்டுள்ள தமிழர்களுக்குப் பைந்தமிழ் உணர்வை நாம் ஊட்ட வேண்டாமா" என மன்னர் பாஸ்கர சேதுபதியிடம் கேட்டார் பாண்டித்துரையார். அதைச் செவிமடுத்த, மன்னர், "அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்" என வினவினார். "தமிழுக்கு உயிர்ப்பூட்டவும், தமிழ் உணர்வுக்கு உரமூட்டவும் தமிழ்ச் சங்கம் ஒன்றை மதுரையில் உருவாக்க வேண்டும்” என்றார் பாண்டித்துரை. அவருடைய தீவிர முயற்சியாலும், பல அறிஞர் பெருமக்களாலும் நான்காம் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. அன்றே, சேதுபதி செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தகச்சாலை, நூல் ஆராய்ச்சிச் சாலை முதலியனவும் தொடங்கப்பட்டன. தமிழ்ச் சங்கத்துக்காக மதுரையில் இருந்த தம்முடைய பெரிய மாளிகையையே வழங்கிய பாண்டித்துரையார், பாண்டியன் புத்தக சாலைக்கு, பல நூல்களைக் கொடுத்து உதவினார். 

ஸ்காட்டின் நூல்களை எரித்தார்!

பாண்டித்துரையின் முன், நற்றமிழைக் கற்பித்தலின்போதோ, கற்கும்போதோ பிழையின்றி ஒலித்தல் வேண்டும். அதுபோல, பிழை நிறைந்த நூல்களை ஏற்கவும் மாட்டார். அவருடைய காலத்தில் ஸ்காட் என்னும் ஆங்கிலேய வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். தமிழ் மொழியில் அரைகுறை பயிற்சி பெற்றிருந்த அவர், திருக்குறளில் எதுகை, மோனை இல்லாத இடங்களை எல்லாம் தவறானவை என்று கருதி, அவற்றைத் திருத்தி அச்சிட்டார். திருக்குறளை திருத்தி அச்சிட்ட நூலை பாண்டித்துரையிடம் கொண்டுபோய் கொடுத்து, அதில், தாம் செய்த திருத்தங்கள் பற்றிச் சொன்னார். நூலைத் திறந்து பார்த்த பாண்டித்துரை கடுஞ்சினம் கொண்டார். 

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’ -
என்று திருவள்ளுவர் எழுதிய குறளை, ஸ்காட் இவ்வாறாக,

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
உகர முதற்றே உலகு’ -
என மாற்றி எழுதியிருந்தார். இதுபோல், அவர் பல குறட்பாக்களையும் திருத்தம் செய்திருந்தார். இதனால் கோபமுற்ற பாண்டித்துரையார், அந்தக் கோபத்தை அவரிடம் காட்டாமல், ஸ்காட்டிடம் இருந்த மொத்த பிரதிகளையும் விலை கொடுத்து வாங்கினார். பின்னர், பலர் முன்னிலையில் குழி ஒன்றை வெட்டச்செய்து, அவற்றை எல்லாம் அதற்குள் போட்டுத் தீயிட்டுக் கொளுத்தினார். "இந்த நூல்கள் அறிஞர்களிடம் சென்று மனத் துன்பம் அளிக்காமல் இருப்பதற்கும், அறியாதவர்கள் திருக்குறளைப் பிழையுடன் படிக்காமல் இருப்பதற்கும் இதுதான் தக்கவழி" என்றார் அங்கிருந்தவர்களிடம். இதன்மூலம் பாண்டித்துரையார் தமிழ் மீது கொண்டிருந்த பற்றை நன்கு அறிய முடிகிறது. 

வ.உ.சி-க்கு உதவிய பாண்டித்துரை!

பாண்டித்துரையார் மொழிப்பற்று மட்டும் கொண்டிருக்கவில்லை. நாட்டுப் பற்றும் கொண்டிருந்தார். இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் கம்பெனி சிறப்பாக நடைபெறுவதற்கு பேருதவி செய்தார். தமது நண்பர்களையும் அதில் ஈடுபடும்படிச் செய்தார். நாட்டுக்கும் மொழிக்கும் கைமாறு கருதாது உதவி செய்த வள்ளல் பாண்டித்துரை, ஒருநாள் தமது மாளிகையில் புலவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில், மயக்கமுற்று கீழே விழுந்தார். இதனால், நினைவு தவறிய நிலையில் படுக்கையில் இருந்த அவரை, 1911-ம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி விண்ணுலகம் அழைத்துக் கொண்டது.

செம்மொழியாம் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களின் பட்டியலில் பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைக்கும் ஓர் இடம் உண்டு என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மறுக்காது.

- ஜெ.பிரகாஷ்

SCROLL FOR NEXT