politics

’தொப்பி, மின் விளக்கு’ திணறும் ஆர்.கே.நகர்.. அனல் பறக்கும் தேர்தல் களம் !

டைத்தேர்தல் நடக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரசாரம் தொடங்கிவிட்டதால்,தொகுதி முழுக்க பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதன்முறையாக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை இல்லாமல்  நடக்கும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான அரசியல் கட்சியான தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அதனால் தொகுதி முழுக்க உதயசூரியன் சின்னம் மட்டும்தான் எல்லோரின் கண்களுக்கும் பழகிய சின்னமாக காட்சியளிக்கிறது.மீதியுள்ள சின்னங்கள் எல்லாம் இன்னும் அவ்வளவாக வெளியே காணமுடியவில்லை.இதில் டி.டி.வி.தினகரனின் தொப்பி சின்னமும், மது சூதனின் இரட்டை மின்விளக்கு சின்னமும் பல்வேறு இடங்களில் போஸ்டர் வடிவிலும்,பேனர் வடிவிலும் காண கிடைக்கின்றன.தினகரனின் சார்பில் அவரின் ஆதரவாளர்கள் வைத்துள்ள விளம்பர பேனர்களில் சசிகலா மிஸ்ஸிங். ஆனால் ஜெயலலிதா புகைப்படங்கள் மட்டும் பளிச்சிடுகின்றன.

ஆர்.கே.நகரில் முகாமிட்டுள்ள ஊடகங்கள்!  

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுடன் பேட்டி எடுப்பதிலும் அதனை லைவ் செய்வதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் தொலைக்காட்சிகளின் குழுவினர் இப்போது இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஆர்.கே.நகரிலும் முகாமிட்டுள்ளனர்.அரசியல் அரங்கம்,வேட்பாளருடன் ஒருநாள் என்ற பல்வேறு தலைப்புகளில் ஒளிபரப்பு செய்யப்படும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கென பிரத்யேக பேட்டிகள், காட்சிகள் படம் பிடிக்க தொலைக்காட்சிகள் ஆர்.கே.நகரின் கொருக்குப்பேட்டை,தண்டையார்ப்பேட்டை,வ.உ.சி.நகர்,காமராஜ் நகர் என்று பல இடங்களில் குழுமியுள்ளனர்.

வட்டமடிக்கும் வெளிமாவட்ட வாகனங்கள்!  

பிரசார நேரங்களில் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் ஆதரவாளர்கள் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டுவார்கள்.அதிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக பிளவுபட்ட நிலையில் நடக்கிறது. இதனால் பிளவு பட்ட அதிமுக பிரமுகர்களால் ஆர்.கே.நகர் நிரம்பியுள்ளது.அதிமுக அம்மா அணி சார்பில் களம் இறங்கியுள்ள டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி , ராமநாதபுரம், சேலம், கும்பகோணம்,திருச்சி என்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளனர்.காலை முதல் மாலைவரை ஆர்.கே.நகரின் எல்லா சாலைகளிலும் வெளிமாவட்ட பதிவெண் கொண்ட கார்கள் நூற்றுக்கணக்கில் அணிவகுத்துச் செல்கின்றன.இதனால் திரும்புகிற பக்கம் எல்லாம் வெள்ளைச் சட்டைகள் தென்படுகின்றன.ஆனால் யாரும் 'சின்னம்மா' குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் கவனமாக வாக்குச் சேகரிக்கிறார்கள் என்கிறார்கள் தொகுதி வாசிகள்.

தினகரனை முந்திய மதுசூதனன்!

டி.டி.வி. தினகரன் நாளை மறுநாள்,ஆதி ஆந்திரர்கள் அதிகம் வசிக்கும் காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க வருகிறார் என்பதை அறிந்துகொண்ட மதுசூதனன், இன்றே தனது பிரசாரத்தை அந்தப் பகுதிகளில் தொடங்கினார். அதுவும் ஆதி ஆந்திரர்களின் தாய் மொழியான தெலுங்கில் பேசி மதுசூதனன் வாக்குச் சேகரித்தார். இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஓட்டுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 'ஒன்றாய் இருந்த கட்சியினர் இப்போது இரண்டு மூன்று அணியாய்ப் பிரிந்து ஓட்டு கேட்குறாங்களே'...என்ற குழப்பத்தில் வாக்காளர்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பிரசாரத்தில் இறங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

ஆர்.கே.நகர் வேட்பாளராக களம் இறங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.லோகநாதன் தனது பிரசாரத்தை இன்று தொடங்கினார்.அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், எம்.பி.ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்.கே.நகர் முழுக்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் பிரசார சூடு தகிக்க தொடங்கிவிட்டது.

- சி.தேவராஜன்