politics

கட்சித் தாவணுமா? இந்த ஐடியாக்களை ஃபாலோ பண்ணுங்க!

கூவத்தூர் முதல் குஜராத் வரை கட்சித்தாவல் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இப்படி ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு ஓபனாக தாவினால் பதவி போய்விடும் என்பதால், 'தொகுதிப் பிரச்னைகள் குறித்துப் பேச சந்தித்தேன், தனிப்பட்ட முறையில் நண்பரைக் காண வந்தேன்' என டெம்ப்ளேட் வசனங்களை அள்ளித் தெளிக்கிறார்கள் எம்.எல்.ஏ-க்கள்/ எம்.பி-க்கள். அவை எல்லாமே போரடிப்பதால் இனி ட்ரெண்டுக்கேற்றார்போல காரணங்கள் சொல்லவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து சாம்பிளுக்கு சில காரணங்களையும் லிஸ்ட் போட்டிருக்கிறோம். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

* ட்ரெண்டுக்கேற்றதுபோல என சொல்லிவிட்டாலே பிக் பாஸ்தானே. அதனால் இனி ஆளுங்கட்சியை சந்திக்கப்போகும் மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் வெளியே வந்து, 'காயத்ரி செய்தது கொஞ்சம் கூட சரியில்லை, ஓவியாவை ஓரங்கட்டியது தமிழ்நாட்டுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். இந்தப் பிரச்னையை உடனே தீர்க்க மனு கொடுத்துவிட்டு வந்தேன்' என பேட்டி தட்டலாம். ஓவியா ஆர்மி அதை மனதில் வைத்து அடுத்தத் தேர்தலில் ஓட்டு குத்துவார்கள்.

* ஆறுதல் சந்திப்புகள் எப்போதுமே சென்டிமென்ட்டாக ஒர்க் அவுட் ஆகும். ஆதலால் ஆறுதல் கூற சந்தித்தேன் எனக் கூறித் தப்பிக்கலாம். ஆனால் எதற்கு ஆறுதல் கூறுவது? அதான் இப்போ அடிக்கடி இன்கம்டாக்ஸ் ரெய்டு எல்லாம் வருதே ப்ரோ! 'தொடர்ந்து வருமானவரித்துறையின் இன்னல்களுக்கு ஆளாகும் முதல்வரை சந்தித்து ஆறுதல் கூற வந்தேன்' என ஸ்டேட்மென்ட் விட்டால்... ஓவர் ஓவர்!

* 'அவசரத்துக்கு ஒதுங்குபவர்களுக்கு ஆதார் கார்டு அவசியம்' என்ற உத்தரவு மட்டும்தான் இன்னும் பாக்கி. மற்ற எல்லாவிதமான சட்டங்களையும் போட்டாயிற்று. எனவே, இதைச் சாக்காக வைத்தே சந்திக்கலாம். 'இங்கேதான் ஆதார் கார்டுக்கு அப்ளிகேஷன் ஃபார்ம் தர்றதா சொன்னாங்க' என்றோ, 'என் போட்டோ ஆதார்ல நல்லாவே இல்ல, அதான் தலைவரோடதாவது நல்லா இருக்கானு பார்க்க வந்தேன்' என்றோ கூறினால்... டபுள் ஓகே ஆகிவிடும்.

* சினிமா வட்டாரத்தில் ஒரு டயலாக் புழக்கத்தில் உண்டு. 'அன்னை இல்லத்துல இருந்து வர்ற சாப்பாடு சூப்பரா இருக்கும்' என்பதே அது. அதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, 'தலைவர் வீட்டுல கொத்துப் பரோட்டா - முருங்கைக்காய் சாம்பார் காம்போ செமையா இருக்கும். அதான் சாப்பிட்டு போலாம்னு வந்தேன்' என சொல்லிவிட்டால் அன்னவெறி கண்ணையன்போல என நினைத்து அசால்ட்டாக விட்டுவிடுவார்கள். 

* ஆளானப்பட்ட ஹெச்.பி.ஓவையே கதறவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஹேக்கர்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸை ஹேக் செய்து ஆன்லைனில் ரிலீஸ் செய்து அதகளம் செய்கிறார்கள். எனவே, கையில் ஒரு பென் ட்ரைவை தூக்கிக்கொண்டு, 'தலைவர் வீட்டில் நெட் கனெக்‌ஷன் ஸ்பீடாக இருக்குமென்பதால் மொத்த சீசனையும் டவுன்லோட் செய்யலாம் என வந்தேன்' என்று சொன்னால் நம்பிவிட வாய்ப்பிருக்கிறது.

* கடைசி உபாயம் இதுதான். 'ஸ்கூல் லீவு காலம்ங்க. வெயில் வேற விட்டு வெளுக்குது. அதான் குடும்பத்தோட கூவத்தூர் ரிசார்ட்ல போய் தங்கலாம்னு இருக்கோம். இதுக்கு முன்னாடி அங்க இவர் தலைமைலதானே ஒரு கூட்டம் போய் தங்கி இருந்தது. அதான் ஃபீட்பேக் கேட்டுப் போலாம்னு வந்தேன்' என சொல்லியும் தப்பிக்கலாம். ஆல் தி பெஸ்ட்!