politics

தள்ளாடும் நீட் விலக்குத் தீர்வு... திண்டாடும் மாணவர்கள்! - என்ன எதிர்பார்க்கலாம் இனி?

’மதில் மேல் பூனை’ என்பார்கள், இங்கே நீட் விலக்கு வேண்டும்... வேண்டாம் என்று தமிழகத்தின் இரண்டு தரப்புகள் உச்சகட்டத்தில் மோதிக் கொண்டிருக்க, மொத்தமாகத் தமிழக மாணவர் சேர்க்கைக்கே இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பளித்து மதில் மேல் ஏறி நின்றுகொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.  

மருத்துவச் சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீட்டின்மீது உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, நீட் தொடர்பான ஓராண்டு தற்காலிக விலக்குக்குத் தமிழக அரசு தயாரானது. ''அது தொடர்பாகத் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால், ஓராண்டு நீட் விலக்கினை மத்திய அரசு பரிசீலனை செய்யும்'' என்று அண்மையில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் தெரிவித்தார். இதையடுத்து அவசரச் சட்டம் தொடர்பான முன்வடிவம் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழக அரசு தரப்பிடமிருந்து மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொடி தூக்கியது இந்திய மருத்துவக் கவுன்சில். அதைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பு விளக்கம் கேட்டு அட்டர்ணி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தரப்புக்கு ஆணை பிறப்பித்திருந்தது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து வரும் 22-ம் தேதி வரை தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். 

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் கதை!

நீட் தேர்வின் ஓராண்டு விலக்குக்கும் கெடுபிடியான சூழல் அமைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாகப் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ''நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இதே அமர்வுதான் காவிரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது; இருபது நாள்களுக்கும் மேலாக விசாரணையைத் தள்ளிவைத்தது. ஆனால், நீட் விவகாரத்தில் இவ்வளவு விரைந்து விசாரணையை நடத்துவதன் பின்னணியிலான அவர்களது அரசியல் புலப்படவில்லை. அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதாக முன்வந்ததும் மத்திய அரசுதான். தற்போது எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் ஒரு மத்திய அரசு நிறுவனம்தான். இது, பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் கதை. இந்த ஓராண்டு விலக்கைக்கூட நமக்குப் பிச்சையிடுவதுபோலத்தான் அளித்திருக்கிறார்கள். தற்போது அதற்கும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது'' என்றார். 

இதன் பின்னணியிலான அரசியல் என்ன?

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணதாசன் பேசுகையில், ''மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கையில் தற்போது நம்பகத்தன்மையே இல்லை. நீட் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதிக்கும் என்கிற அடிப்படையில்தான் வழக்கே தொடரப்பட்டது. அப்போதெல்லாம் மௌனம் சாதித்த அரசு, 'தற்போது ஒரு வருட தற்காலிக விலக்கு அளிக்கிறோம்' என்று பழைய கதையை மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு நீட் விலக்குக்கு மறுப்பு தெரிவித்து வந்த பி.ஜே.பி., 'கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவார்கள். அதனால், ஒருவருட விலக்கு குறித்து பரிசீலிக்கிறோம்' என்று கூறுகிறது. 'இந்த ஓராண்டு மட்டும் விலக்கு அளித்தாலும், அடுத்த ஆண்டிலிருந்து நீட்டுக்கான ஸ்டெடி மெட்டீரியல் தருகிறோம்' என்கிறார்கள். அது, எந்த விகிதத்தில் எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. இன்னொரு பக்கம், நீட் வரும் என்று நம்பிப் படித்த மாணவர்களும் தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவிருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு அரசுகளின் அரசியல் ஆதாயச் செயல்பாடுகள் அத்தனையும் மாணவர்களை மட்டுமே பாதிக்கிறது. ஒன்று, நீட் வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை உறுதியாகச் சொல்ல வேண்டும். நீட் இருக்கிறதா? ஆந்திரா, காஷ்மீர் உள்ளிட்ட பிறமாநிலங்கள்போல தன் மாநில மாணவர்களை மட்டுமே நீட் வழியான தேர்வு முறையில் மருத்துவச் சீட்டு அளிப்போம் என்கிற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. பிப்ரவரி மாதத்திலேயே சட்ட முன்வடிவ மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அதனையாவது முழுமையாகச் செயல்படுத்தியிருக்க வேண்டும். தற்போது அந்த மசோதாவின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இது அத்தனையுமே மோடி மற்றும் மாநில அரசின் ஜிம்மிக்ஸ் வேலைகள்தான்” என்றார். 

டெல்லியில் இது தொடர்பாக நடந்த மனுவின் மீதான விசாரணைக்குச் சென்றுவந்த மாணவி அனிதாவின் அண்ணன் மணிரத்னம் கூறுகையில், ''அனிதாவும் எங்களுடன் நீதிமன்றத்துக்கு வந்தார். ஆனால், அவருக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. பதினேழு வயது நிரம்பிய சிறுமியைத்தான் அவர் விரும்பிய படிப்பைப் படிக்கவிடாமல் இந்தச் சட்டம் தடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் பத்தாம் வகுப்பிலிருந்தே அதற்கான கனவுடன் படித்து வருகிறார். நீட் தேர்வுக்கு முன்பே ஏன் நீதிமன்றம் வரவில்லை என்று கேட்கிறார்கள். அரசு உறுதியாக ஒரு நிலைப்பாட்டை சொல்லாதபோது யாருடைய வார்த்தையை நம்பி நாங்கள் எங்கள் முடிவை எடுக்க முடியும்? தற்போது செவ்வாய்க்கிழமை வரை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நீதிமன்றம் தள்ளிவைத்திருப்பதுகூடச் சாதகமான முடிவையே தருவதற்காகத்தான் என்று நம்புகிறோம்” என்றார்.           

அனிதாவிடம் டெல்லி சென்று வந்தது பற்றிக் கேட்டோம், ''எங்களது நிலைப்பாட்டை விலக்கும் சட்டப்படியான விஷயங்கள் குறித்து என்னைப் பேட்டியின்போது சொல்லச் சொன்னார்கள். எனக்கு அவ்வளவு விவரமெல்லாம் தெரியாது. எப்படியாவது டாக்டர் சீட் கிடைக்க வேண்டும். அதற்காகப் போராடுவேன்” என்றார். 

தங்கைக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும் அண்ணன்... தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் தங்கை... இவர்களின் கனவுக்கு என்ன பதில் தரப்போகின்றது அரசும் அதன் சட்டமும்? பொறுத்திருந்து பார்ப்போம்.