``அடுத்த 3-4 நாள்களுக்குள் சிபிஐ என்னைக் கைதுசெய்யும்..!" - டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

VM மன்சூர் கைரி
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
politics

மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாமீது புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, 15 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள 21 இடங்களில் சோதனையிட்டனர்.

சிபிஐ

14 மணி நேர சோதனையைத் தொடர்ந்து, சி.பி.ஐ அதிகாரிகள் மணீஷ் சிசோடியாவின் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "சி.பி.ஐ குழு எனது வீட்டில் சோதனை செய்து என்னுடைய கணினி, தொலைபேசியைக் கைப்பற்றினர். என்னுடைய குடும்பத்தினர் அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைத்தனர். நாங்கள் எந்த ஊழலும், தவறும் செய்யவில்லை. நாங்கள் பயப்படவுமில்லை, சி.பி.ஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், அதிகாரிகள் மிக நல்லமுறையிலேயே நடந்து கொண்டனர். அதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

பிரதமர் மோடி - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி கலால் வரி கொள்கையை நாங்கள் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் பயன்படுத்துகிறோம். பா.ஜ.க-வின் பிரச்னை மது விலக்கு கலால் ஊழல் அல்ல. அவர்களின் பிரச்னை அரவிந்த் கெஜ்ரிவால்... எனக்கு எதிரான முழு நடவடிக்கைகளும், எனது வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனைகளும், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தடுக்கவே... நான் எந்த ஊழலும் செய்யவில்லை. எப்போதும் நான்தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி அமைச்சர். அடுத்த 3-4 நாள்களுக்குள், சிபிஐ அல்லது அமலாக்கப் பிரிவு என்னைக் கைதுசெய்யும்.. அதற்காக நாங்கள் பயப்பட மாட்டோம், உங்களால் எங்களை உடைக்க முடியாது" எனத் தெரிவித்திருக்கிறார்.

Advertising
Advertising
SCROLL FOR NEXT