Healthy

வெற்றிலை, தர்பூசணி, முருங்கை.. தாம்பத்யம் சிறக்க உதவும் இயற்கை உணவுகள்!

தாம்பத்யம் என்றதும் அச்சப்படவோ, அருவறுக்கவோ தேவையில்லை. அது ஓர் அன்புப் பகிர்தல் என்பதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும். அதில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்ய ஏதேதோ சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்தும் பலன் தருவதில்லை. நம் வீடுகளில் சமையலில் இடம்பெறும் கீரைகள், பழங்கள், காய்கள், பூக்களைப் பயன்படுத்தி அந்தக் குறைபாடுகளை மிக எளிதாகச் சரி செய்யலாம். சரியாக முயற்சி செய்தால் நிச்சயம்  பலன் கிடைக்கும்.

இது குறித்து விரிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் ஜேம்ஸ்குமார்.


அரைக்கீரை
``ஆம்... அரைக்கீரையில் அத்தனை விஷயம் இருக்கிறது. ஆண்மைக் குறைவால் அவதிப்படும் ஆண்களும், தாம்பத்யத்தில் விருப்பமில்லாத ஆண் பெண் இருவரும் இந்தக் கீரையுடன் சின்ன வெங்காயம், நெய் சேர்த்து வேக வைத்துக் கடைந்து காலை, மாலை உணவில் சேர்த்து வந்தால் முழு பலன் அடையலாம். பொதுவாக, அரைக்கீரையை சமைக்கும்போது அதனுடன் புளி சேர்த்துச் சமைப்பது வழக்கம். புளி சேர்த்தால் அத்தனை பலன் கிடைக்காது. ஆகவே அரைக்கீரையுடன் மிளகு, நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தாலும் தாது வளரும், கைமேல் பலன் கிடைக்கும். இது தேகத்தில் அழகை அதிகரிக்கச் செய்வதுடன் நரம்புத் தளர்ச்சியை நீக்கி திடகாத்திரமான தேகத்தை வளர்க்கச் செய்யும். பொதுவாக கீரைகளை காலை மற்றும் மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


தர்பூசணி
தர்பூசணியையும் இயற்கை வயாகரா என்று சொன்னால் அது மிகையாகாது. தர்பூசணியில் சிட்ருலின் (citrulline) எனப்படும் அரிய வகைப் புரதச்சத்து அதிகமாக உள்ளது. தர்பூசணி சாப்பிட்டதும் இந்த சிட்ருலின் வேதியியல் மாற்றமடைந்து அர்ஜினைன் (arginine) என்ற வேதிப்பொருளாக மாற்றமடைந்து இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளை ஊக்குவிக்கிறது. மிக முக்கியமாக ஆணுறுப்பில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளைத் தடுப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. ஆகவேதான் இதை இயற்கை வயாகரா என்கிறார்கள்.
தர்பூசணி என்றதும் நம் நினைவில் வருவது `செக்கச்செவேல்' என்ற அந்தச் சிவப்புநிற சதைப்பாகம்தான். ஆனால், அந்தச் சிவப்பு நிற சதைப்பாகத்தை ஒட்டி இருக்கும் வெள்ளை நிற சதைப்பாகம்தான் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்தது என்பது கூடுதல் தகவல்.


கற்றாழை
சோற்றுக் கற்றாழையின் வேர்களை சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து இட்லிப் பானையில் வைத்து வேக வைக்க வேண்டும். தண்ணீருக்குப் பதில் பாலை ஊற்றி வேக வைத்து காய வைத்துப் பொடியாக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தாம்பத்ய உறவு மேம்படும். ஆண்மைப் பிரச்னையை தீர்க்க உதவும் என்றபோதிலும் ஆண் பெண் இருவருமே சாப்பிட்டு வரலாம்.

கோழி முட்டை
இளம் வயதில் சில தவறான பழக்கங்களால் சிலருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதுண்டு. இத்தகையப் பிரச்னைகளைப் போக்க நாட்டுக் கோழி முட்டைகளைச் சாப்பிடலாம். இரண்டு நாட்டுக் கோழி முட்டைகளை ஒரு மண் பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். சிறிது சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து லேசான சூட்டோடு சாப்பிட்டு விட வேண்டும். காலை உணவுக்குப் பதில் இந்த முட்டையை மட்டும் சாப்பிட்டு பால் குடித்து வரலாம். இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வந்தால் முழு பலன் கிடைக்கும்.


முருங்கை
முருங்கைப் பூவை உணவாகவோ மருந்துகளுடன் சேர்த்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்தில் அதிக நாட்டம் உண்டாகும். உடல் சோர்ந்து உள்ளம் சோர்ந்து போனவர்கள் தினமும் நான்கைந்து முருங்கைப்பூக்களைத் தினமும் இரண்டுவேளை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அரைக்கீரையுடன் அரைப் பங்கு முருங்கைப்பூவைச் சேர்த்துக் கடைந்து சோற்றுடன் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் பலப்படும். இதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சாப்பிட்டு பலனடையலாம். இந்த முருங்கைப்பூக்களை இயற்கை வயாகரா என்று சொன்னால் அது மிகையாகாது. பக்க விளைவுகள் இல்லாதது, செலவில்லாதது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் முருங்கைக்கீரையப் பொடியாக நறுக்கி அதனுடன் கேரட் துருவிப் போட்டு பசு நெய் சேர்த்து கோழி முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறைவு நீங்குவதோடு முழுமையான தாம்பத்யம் கிடைக்கும். பிஞ்சு முருங்கைக்காய்களை தணலில் காட்டி சாறு பிழிந்து குடிப்பது, சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் போட்டு நன்றாக வேக வைத்து சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பது போன்றவற்றின்மூலம் தாம்பத்ய உறவில் குறைவின்றி செயலாற்ற முடியும். இதே முருங்கைப்பிஞ்சுகளை பட்டாணி அளவுக்கு சிறிது சிறிதாக நறுக்கி மிளகுத்தூள், உப்பு சேர்த்து பச்சையாகச் சாப்பிட்டு வந்தாலும் தாம்பத்யம் சிறந்து விளங்கும்.

வெற்றிலை
வெற்றிலையுடன் கால் அரிசி அளவு கோரோசனையை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்தின்மீது ஆர்வம் ஏற்படும். ஆண் பெண் இருவருமே இதைச் சாப்பிட்டு பலனை அடையலாம். இரண்டு வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஜாதிக்காய் ஒரு அரிசி எடை, ஜாதிப்பத்திரி ஒரு அரிசி எடை, கஸ்தூரி ஒரு கடுகு அளவு, ஏலக்காய் ஒன்று , லவங்கம் ஒன்று, பாதாம் அரை பருப்பு, முந்திரி அரை பருப்பு, திராட்சை  4, குல்கந்து கால் டீஸ்பூன் சேர்த்து இரவு உணவுக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஊறுவதோடு உடல், மனம் ஆரோக்கியம் உண்டாகி தாம்பத்யத்தில் சிறப்பான பலனைப் பெற்றுத்தரும்.

அத்தி - சின்ன வெங்காயம்
தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு தூங்கப்போகும் முன் மூன்று அத்திப்பழங்களைச் சாப்பிட்டுவிட்டு பால் அருந்திவந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இதை ஆண் பெண் இருவருமே பின்பற்றலாம்.
சின்ன வெங்காயத்தை தேன் விட்டு வதக்கி இரவு உறங்கபோவதற்கு முன் சாப்பிட்டு பசும்பால் குடித்து வந்தால் ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். இதேபோல் தாம்பத்ய உறவுக்கு முன் சின்ன வெங்காயத்தை வாயில் போட்டு அதன் சாற்றை மெதுவாக விழுங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல் சின்ன வெங்காயம் அல்லது வெள்ளை வெங்காயத்தை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.

பேரீச்சை  - செவ்வாழை
காலை உணவு உண்ட கால் மணி நேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துவது, இரவு உணவுக்குப் பின் 10 பேரீச்சம்பழங்களை உண்டு பசும்பால் குடித்து வருவது போன்றவற்றின்மூலம் ஆண்மைக் குறைவு நீங்குவதோடு தாம்பத்யம் சிறக்க உதவும். இதேபோல் ஆண் பெண் இருவரும் இரவு உணவுக்குப் பிறகு ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழத்தை தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் தாம்பத்யம் பலப்படும்.

இதேபோல் பாதாம், பிஸ்தா, வெள்ளைப்பூண்டு, நிலக்கடலை உள்ளிட்ட உணவுகளும் தாம்பத்ய வாழ்க்கை சிறக்க உதவக்கூடியவையாகும்.''