Healthy

மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கா? அலட்சியம் வேண்டாம்! - ஒரு மருத்துவ விளக்கம்! #Menorrhagia

மாதவிடாய் பற்றிய விழிப்புஉணர்வு, அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது. அதிலும் சாதாரணமாக அல்ல... எழுத்து வடிவத்தைத் தாண்டி, திரைவடித்துக்கே வந்துவிட்டது. உதாரணமாக, 'பேடு மேன்' (Pad man) போன்ற படங்கள் மக்களால் வரவேற்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும் ஆரோக்கியமான சூழல்தானே! இதுபோன்ற விழிப்புஉணர்வுகளில் ஒன்றுதான், மாதவிடாய் காலத்தில் உடல்நலத்தின் மீது நாம் எடுத்துக்கொள்ளும் அக்கறை. 'அந்த நேரத்தில் உனக்கு வயிறு வலிக்குமா?’, `எனக்கு வலியே இருக்காது. ஆனாலும், அதிகமா ரத்தப்போக்கு இருக்கும்', 'எனக்கு அந்த நாள்களில் பயங்கரமா வயிறு வலிக்கும். மாத்திரை போடலைன்னா வலி குறையவே குறையாது'... இப்படியான மாதவிடாய்காலச் சிக்கல்களை, சில உரையாடல்களை பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவதொரு சூழலில் நிச்சயம் கேட்டிருப்பார்கள் அல்லது அவர்களே சொல்லியிருப்பார்கள். வலியுணர்வுபோலவே, மாதவிடாய் காலத்துக்கென சில பிரத்யேகப் பிரச்னைகளும் இருக்கின்றன. `உங்களுக்கு ஏற்படும் மாதவிடாய்காலச் சிக்கல் எது?’ என்று கேட்டால், அதிகமான அல்லது குறைவான ரத்தப்போக்கு, மூட் ஸ்விங், பின் முதுகுவலி, கால்வலி, அடிவயிற்றில் வலி... என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்னையைக் கூறுவார்கள்.

மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது குறித்து மகப்பேறு மருத்துவர் வினுதா அருணாச்சலத்திடம் கேட்டோம்... ``மாதவிடாய் காலத்தில் சிலருக்கு முதல் நாளில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாள். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.

எது அதிக ரத்தப்போக்கு?

அன்றாடச் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் தாங்கமுடியாத வலி; அதிகப்படியான நாப்கின் தேவைப்படுதல்; அசெளகரியமாக உணர்தல், இவற்றோடு உடலில் ரத்த அளவு குறையும் அளவுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தையே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம் என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது, உடலிலுள்ள ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தச்சோகை ஏற்படக்கூடும். இதனால், உடல் நலிவடைந்து, சோர்வாகக் காணப்படுவார்கள். இவை அனைத்தும் தொடக்கநிலைகள்தாம். இந்தச் சூழலிலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.

அதிக ரத்தப்போக்கு எடுத்துச்சொல்லும் எச்சரிக்கைகள்...

வயதின் அடிப்படையில், அதிக ரத்தப்போக்கு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகள் என்று அறிந்துகொள்ளலாம்.

20 - 25 வயதுள்ளவர்கள்:

`Polycystic Ovaries’ எனப்படும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சிகள் இல்லாமல் இருப்பது, உணவு முறை சீராக இல்லாதது போன்றவற்றாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

25 முதல் 35 வயதுள்ளவர்கள்:

இந்த வயதுள்ளவர்கள் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான அறிகுறியாகக்கூட இருக்கலாம். அந்தப் பிரச்னையை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் இது நீர்க்கட்டிப் பிரச்னையாகவும் இருக்கக்கூடும். அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கலாம். எனவே, அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது நல்லது.

45 வயதை தாண்டியவர்கள் (மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு):

அதிக ரத்தப்போக்கென்றால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மெனோபாஸ் காலத்துக்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் (Post Menopausal Bleeding), பரிசோதனை செய்து, காரணத்தைக் கண்டறிந்துவிடுவது நல்லது.

எதனால் ஏற்படுகிறது?

* ரத்தப்போக்குக்கு உதவும் முக்கியமான ஹார்மோன்கள் `ஈஸ்ட்ரோஜென் (Estrogen)’, `புரொஜெஸ்ட்ரோன் (Progesterone)’. இவை இரண்டிலும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்வதால் ஏற்படுவதுதான் அதிக ரத்தப்போக்கு. இதை ஹார்மோன் சமநிலையின்மை (Hormone Imbalance) எனக் குறிப்பிடுவோம்.

* மாதவிடாய் நாள்களில் கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பை செயலிழப்பதால் ஏற்படலாம்.

* கர்ப்பப்பை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது.

* கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படலாம்.

* கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டியால் (Adenomyosis)ஏற்படலாம்.

* தைராய்டு பிரச்னைகள், சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகளால் ஏற்படலாம்.

உணவுமுறை மாற்றங்கள்:

இந்தியாவைப் பொறுத்தவரை, பொதுவாகவே நிறையப் பேருக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது. ரத்தச்சோகையால் பாதிக்கப்படுபவர்களில், பெரும்பாலானோர் பெண்களே. பருவமடைதல், மாதவிடாய், பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிக ரத்த இழப்பை எதிர்கொள்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணம். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். உதாரணமாக, கீரை, மாதுளை, அத்திப்பழம், பப்பாளி போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரையோடு சத்து மாத்திரைகளும் உட்கொள்ளலாம். இப்படி, அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணத்தைச் சரியாக அறிந்துகொள்வதே, அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி’’ என்கிறார் வினுதா அருணாச்சலம்.