Healthy

இளமையைத் தக்கவைக்கலாம்... ஆன்டி ஏஜிங் க்ரீம்கள், சிகிச்சைகள்!

னிதர்கள் எல்லோருக்குமே தீராத ஆசை ஒன்று உண்டு... `என்றும் பதினாறு’ போல இருக்க வேண்டும் என்ற ஆசை. அதிலும் வயதாக ஆக இளமைத் தோற்றத்தின் மேல் தீராத வேட்கை எழுவது இயல்பு. குறிப்பாக முகம்தான் நம் அழகையும் இளமையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் முக்கிய அடையாளம். அதனால் முகத்தைத்தான் முதலில் பொலிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். அதற்கு உதவுபவை ஆன்டி ஏஜிங் க்ரீம்கள், ஊசிகள், சில சிகிச்சைகள். வயது முதிர்ச்சியால் நமக்கு ஏற்படும் மாற்றங்கள், அந்தச் சமயத்தில் முகத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள எந்தெந்த க்ரீம்கள் உதவும், வேறு சிகிச்சைகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் விளக்கமாகப் பேசுகிறார் சரும மருத்துவர் ரேவதி...

ஒருவருக்கு முப்பது வயதாகும்போதே உடல் முதிர்ச்சியடைவதற்கான அனைத்து அறிகுறிகளும் ஆரம்பித்துவிடும். சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் முகமெங்கும் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் தோன்றக்கூடும். வயதாவதால் சருமம் மட்டுமல்லாமல், முகத்திலிருக்கும் எலும்புகளிலும் அடர்த்தி குறையும். மேலும், தசைகளும் புவியீர்ப்பு விசை காரணமாக கீழ்நோக்கி இழுக்கப்படும். கன்னங்களில் இருந்த கொழுப்புகள் எல்லாம் கரையத் தொடங்கும். சிறு வயதில் தலைகீழ் முக்கோண வடிவில் இருந்த முகம், வயதாகும்போது நேர் முக்கோணமாக மாறிவிடும். இந்த மாற்றங்களால் முகம் வயதான தோற்றத்தை மெள்ள மெள்ளக் காட்ட ஆரம்பிக்கும்.

சரும முதிர்ச்சிக்கான காரணங்கள்...

முதுமையை நெருங்க நெருங்க மனிதர்களுக்கு இரண்டு வகையாக முதிர்ச்சி ஏற்படுகிறது. ஒன்று, உள்ளார்ந்த காரணத்தால் ஏற்படுவது. அடுத்தது, உடலுக்குச் சாராத புறம்பான காரணங்களால் உண்டாவது. உள்ளார்ந்த காரணம் என்றால், உடலில் ஏற்படும் மாற்றங்கள். குறிப்பாக, பெண்களுக்கு மெனோபாஸ் நேரங்களில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் சுரப்புகளில் மாற்றங்கள் உண்டாகும். சுரப்பிகள் ஒருவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் சுரக்கத் தொடங்கும். இதனால் சருமம் சிலருக்கு கறுப்பாக மாற ஆரம்பிக்கும்; தளர்ச்சி, சுருக்கம் எல்லாம் ஏற்படும். உடல் சாராத காரணங்கள் என்றால், சூரியக் கதிர்கள், ட்யூப் லைட், எல்.ஈ.டி லைட், உணவு முறை, மனஅழுத்தம், வாழ்க்கை முறை, புகைபிடித்தல், குடிப்பழக்கம் போன்றவற்றால் உடல் முதிர்ச்சித் தன்மையை அடைவது.

தீர்வுகள்... 
சன்ஸ்க்ரீன் கைகொடுக்கும்!

உடல்சாராத பிரச்னைகளைச் சரிசெய்ய, எதிர்கொள்ள சரியான சன்ஸ்க்ரீன்களைப் பயன்படுத்த வேண்டும். வெயிலில் செல்லும்போது மட்டுமல்ல, ட்யூப் லைட், எல்.ஈ.டி லைட்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் அது உதவும். உடலுக்குத் தீங்கு விளைவிக்கிற, சருமத்துக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்து நிரம்பிய பழங்கள், காய்கறிகள் என தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். ஆரோக்கியமான சருமத்துக்கு உடற்பயிற்சி அத்தியாவசியமான ஒன்று. தினமும் உடற்பயிற்சிசெய்தால் சருமம் பொலிவிழக்காமல் இருக்கும்.

மனம்... கவனம்!
மனஅழுத்தத்தைக் குறைக்க வேண்டும். தினமும் ஆழ்ந்த, நீண்ட, நிம்மதியான உறக்கம் எல்லோருக்கும் அவசியம் தேவை. அதற்கு, புகைபிடிப்பதையும் குடிப்பழக்கத்தையும் கைவிட வேண்டும். அதிலிருக்கும் நிக்கோட்டின் மற்றும் எத்தனால் சருமப் பிரச்னைகளை உருவாக்கக்கூடியவை.

உணவு, உடற்பயிற்சி உதவும்!
உள்ளார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு எதுவும் இல்லாதபோதிலும், உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியுமே முதிர்ச்சியடைவதை இருபது வருடங்களுக்காவது தள்ளிப்போடும்.

க்ரீம்கள்...

முதிர்ச்சியைத் தடுக்க ஆன்டி ஏஜிங் க்ரீம்களும் இருக்கின்றன. அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, போட்டாக்ஸ் (Botox) வகை க்ரீம்கள். இன்னொன்று, ரெட்டினால் (Retinol) வகை க்ரீம்கள். நம் நரம்பில் இருக்கும் கொலாஜன் ஃபைபர்கள்தான் (Collagen fibers) சருமத்தைச் சீராக வைத்திருக்கும். செல்களில் பிரச்னைக ஏற்படும்போதெல்லாம் இவை உடைந்து, மீண்டும் சரியாகிக்கொள்ளும். அதனால், சருமம் பழைய பொலிவுடனேயே இருக்கும். வயதாகும்போது அந்த ஃபைபர்கள் அவற்றின் சக்தியை இழந்துவிடும். போட்டாக்ஸ் வகை க்ரீம்கள் மீண்டும் அந்த ஃபைபர்களைச் செயல்படவைக்கும். அதனால் மீண்டும் பழையபடி சருமம் தன் பழையத் தன்மைக்கு மாறத் தொடங்கும். சதைகளின் செயல்பாட்டையும் அதிகரிக்கும். நரம்பில் இருக்கும் அசிட்டைல்கொலைன்களையும் (Acetylcholines) இந்த க்ரீம்கள் வலுப்பெறச் செய்யும்.

ரெடிட்டினால் வகை க்ரீம்கள் வைட்டமின் ஏ சத்துகள் உள்ளவை. மேக்கப் போடுவதால் உண்டாகும் தீங்குகள், சூரியக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை இந்த க்ரீம்கள் சரிசெய்துவிடும். கொலாஜன்களை மீட்டெடுத்து, சருமப் பாதுகாப்பை வலுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகளை உட்கொள்வதாலும் முதிர்ச்சியின் அறிகுறிகள் குறையும். 

போட்டாக்ஸ் வகைகளில் ஊசிகளும் இருக்கின்றன. இவை முகத்தில் இருக்கும் கொழுப்புகளைக் கூட்டிச் சீராக்க உதவும். இந்த ஊசிகளை ஒரு சரும மருத்துவரின் ஆலோசனையோடு போட்டுக்கொள்வது நல்லது. இந்த ஊசிகளால் கொலாஜன்கள் தூண்டப்படும். முகத்தில் இருக்கும் சதைகளை வலுப்படுத்தும். 

ஆன்டி ஏஜிங்குக்கான சிகிச்சையில், ஊசிகள் தவிர, முகத்தில் க்ரீம்களைத் தடவி சுத்தம் செய்தும் தோலை உரித்தும் செய்யப்படும் பல வகையான சிகிச்சைகள் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றையும் செய்துகொள்ளலாம். மிகவும் முக்கியமான மாற்றங்களை சருமத்திலோ, தோலிலோ செய்ய வெண்டும் என்றால் மட்டும் லேசர், அறுவைசிகிச்சை முறைகளைக் கையாளலாம். ஆன்டி ஏஜிங்குக்கான சிகிச்சை என்பது ஓர் ஒப்பனைக்கான சிகிச்சை என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு என்ன தேவையோ அந்த சிகிச்சை மட்டும்தான் செய்யப்படும். தேர்ச்சி பெற்ற சரும நிபுணர்களால், தரமான சாதனங்களுடன் செய்யப்பட்டால் சிகிச்சையில் பிரச்னை ஏதும் வராது. ஒவ்வொருவரின் உடல் தன்மை, வயது ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை முறைகளும் மாறுபடும். ஒருவரைத் தீர பரிசோதனை செய்த பிறகே சிகிச்சை அளிக்கப்படும். ஒரே நாளிலேயே இந்த சிகிச்சைகளைச் செய்து முடித்துவிடலாம். மிகவும் எளிதான வழிமுறைகளில், முகத்தை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்வது சாத்தியமே! 

சிகிச்சைகளையும் தாண்டி, ஆரோக்கியமான சமச்சீரான உணவு முறை, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை நம் சருமத்தையும் முகத்தையும் எப்போதும் பொலிவோடு வைத்திருக்க உதவுபவை என்பதை என்றென்றும் நினைவில்கொள்ளவும்.