Healthy

16 கோடிப் பேருக்குக் கல்லீரல் பாதிப்பு... கவனம்! - உலக ஹெபடைட்டிஸ் தினப் பகிர்வு #EliminateHepatitis

பெரும்பாலான நோய்களுக்கு வைரஸ் தாக்குதல்களே காரணம். மலேரியா தொடங்கி இப்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஜிகா வரைக்கும் எல்லாமே வைரஸ்களால் ஏற்படும் நோய்களே. இந்த வரிசையில் மிகவும் அபாயகரமான வைரஸ்... ஹெபடைட்டிஸ். ஆண்டுதோறும் ஜூலை 28-ம் தேதியை 'உலக ஹெப்படைடிஸ் தினமாக' உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு ஹெபடைட்டிஸ் தினத்தின் தீம் 'ஹெபடைட்டிஸை ஒழிப்போம்..! (Eliminate Hepatitis). 

ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமிகள் மிகவும் ஆபத்தானவை. உயிரையே பறிக்கும் அளவுக்கு அபாயகரமானவை. இந்த  வைரஸ் கிருமிகளின் வகைகள், பரவும் முறை, பாதிப்பு, சிகிச்சை முறைகள், இந்தக் கிருமிகளிடம் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கிறார் ஹெபடைட்டிஸ் ஆலோசகர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் சந்தன் குமார்...

வகைகள்...
ஹெபடைட்டிஸ் வைரஸால் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானது கல்லீரல் அழற்சி. இந்த வைரஸில் ஏ, பி, சி, டி, இ, ஜி எனப் பல வகைகள் உள்ளன.

பரவும் விதம், பாதிப்புகள்...
* ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் பரவும். 
* ஹெபடைட்டிஸ் பி, சி ரத்தம் மற்றும் உடலில் சுரக்கும் கசிவுகள் மூலம் பரவக்கூடியவை. இதில் ஹெபடைட்டிஸ் பி, ரத்தத்தின் மூலம் மட்டும் பரவும்.
* ஹெபடைட்டிஸ் ஏ என்பது மிகவும் சாதாரணமாகப் பரவக்கூடியது. இந்த வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமான காய்ச்சலின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். 
* ஹெபடைட்டிஸ் டி வைரஸ் நேரடியாக பாதிக்காது. மாறாக, பி வைரஸுடன் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். இது மிகவும் ஆபத்தானது. 

ஹெபடைட்டிஸ் பாதிப்பால் ஏற்படும் நோய்கள் வளரும் நாடுகளில் அதிகமாக உள்ளன. உலகில் 350 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று இருப்பது 4.7 சதவிகிதம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஹெபடைட்டிஸ் சி வைரஸ், உலகம் முழுவதும் 160 மில்லியன் பேருக்குக் கடுமையான கல்லீரலில் நோயை ஏற்படுத்தியிருக்கிறது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹெபடைட்டிஸ் வைரஸ்களில், பி மற்றும் சி மிகவும் ஆபத்தானவை. ஏனெனில், இவை ரத்தம் மூலமாக பரவக்கூடியவை. இந்தியாவில் இந்தத் தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் இவை எப்படிப் பரவின என்று ஆராய்ந்து பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்... பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றுதல், பாதுகாப்பற்ற அறுவைசிகிச்சை நடைமுறைகள், போதை மருந்தைப் பயன்படுத்துபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்குப் போடப்படும் இன்சுலின் ஊசிகளில் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளைப் பயன்படுத்துதல்... போன்றவை முக்கியக் காரணிகளாக இருந்திருக்கும்.

கல்லீரல் சிதைவு, மஞ்சள்காமாலை, அடிவயிற்றுப் பொருமல், ரத்தப்போக்கு போன்ற பாதிப்புகளுக்குக் காரணம் ஹெபடைட்டிஸ் பி அல்லது சி வைரஸ் தொற்றுதான் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இவற்றை ரத்தப் பரிசோதனையின் மூலம் மட்டுமே கண்டறிய இயலும். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் ஆரம்பநிலை புற்றுநோயுடன் இருக்கவும் வாய்ப்பு உண்டு.

ஹெபடைட்டிஸ் பி தொற்றைத் தவிர்க்க...
ஹெபடைட்டிஸ் பி பாதிப்புக்கு சிகிச்சை கிடையாது. தடுப்பு மருந்துகள் மட்டுமே உள்ளன. தடுப்பு மருந்துகள் வைரஸ் தொற்று அதிகரிப்பதைக் குறைக்குமே தவிர, குணப்படுத்தாது. ஹெபடைட்டிஸ் பி வைரஸை ஒழிப்பதற்கு சிறந்தவழி அதை வராமல் தற்காத்துக்கொள்வதுதான். 

யாருக்குப் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்? 
ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று உள்ள தாய்மார்களின் குழந்தைகள், போதை ஊசிகளைப் பயன்படுத்துபவர்கள், பச்சை குத்திக்கொண்டவர்கள், ரத்த ஊடுகலப்புடன் தொடர்பு உடையவர்கள், ஹீமோடயாலிசிஸில் (Hemodialysis) இருப்பவர்கள், ஹெச்ஐவி பாசிட்டிவ் உள்ளவர்கள், பாதுகாப்பு இல்லாத முறையில் உடலுறவு கொள்பவர்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலின் கீழ் இருப்பவர்கள். 

தொழில்வழியில் ரத்தத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வுக்கூட பணியாளர்கள் போன்ற உடல்நல பராமரிப்புத் துறையில் உள்ளவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலின் கீழ் அடங்குவார்கள். இவர்களுக்கான ஒரே தீர்வு தடுப்பூசிதான்.

கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? 
நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்துவதைவிட முக்கியமான ஒன்று, பாதிக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்துகொள்வதுதான். நாடு முழுவதும் அனைவருக்கும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு பரிசோதனைக்கு வரும் பெண்களுக்கும், ரத்த வங்கிகளுக்கு வரும் கொடையாளிகள், பயனாளர்களுக்கும் ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி பரிசோதனை செய்யப்பட வேண்டும். 

நோய் தொற்றைத் தடுக்க...
கவனக்குறைவால் ஊசி குத்தும்போது காயம் ஏற்பட்டால், உடனடியாக ஓடும் நீரில் காயம்பட்ட இடத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், ஆன்டிசெப்டிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 
ரத்தக் கொடையாளிக்கு ஹெபடைட்டிஸ் பி பாசிட்டிவாகவும், பயனாளிக்கு நெகட்டிவாகவும் இருக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவருக்கும், பயனாளிக்கும் உடனடியாக ஹெபடைட்டிஸ் பி இமுனோகுளோபுலின் மற்றும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியின் முதல் டோஸைப் போட வேண்டும்.

ஹெபடைட்டிஸ் சி தொற்றைத் தடுக்க...
ஹெபடைட்டிஸ் சி வைரஸ் ஒரு 'சைட்டோ பிளாஸ்மிக்' வைரஸ். இது, கல்லீரல் செல்லில் டிஎன்ஏவுடன் ஒருங்கிணையாது. ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் உடனடியாக சிகிச்சையளிக்கலாம். சி வைரஸுக்குத் தடுப்பு மருந்தாக 'இன்டர்ஃபெரான்' ஊசி வாரந்தோறும் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால், பல பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அதன் பின்னர் புதிதாக வந்த ஆன்டிவைரஸ் மருந்துகள் ஹெபடைட்டிஸ் சி சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாகவும், குறைந்த விலையிலும் இருந்தன. மேலும், ஹெபடைட்டிஸ் சி-யை எளிதில் ஒழிக்க முடியும். இது குறித்த விழிப்புஉணர்வை அதிக அளவில் ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். 

நலம் காக்கலாம்...
* சுத்தமான சூழலும், சுகாதாரமான உணவும், நீரும் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் தொற்றைத் தடுக்கும். 
* வைரஸ் தாக்குதல் உள்ளவர்களுக்கு உரிய தடுப்பூசி கொடுப்பது, ஹெபடைட்டிஸ் பி வைரஸைத் தடுக்கும். மேலும், கல்லீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். அதைக் குணப்படுத்தும் சிகிச்சைக்கும் வழிவகுக்கும்.
* நவீன மருந்துகள் மற்றும் தடுப்பூசியை வீட்டில் உள்ள அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். இதைக் குணப்படுத்த முடியும்.

அறிகுறிகள்...
வயிற்றில் வலி எடுப்பது,
பசி எடுக்காமல் இருப்பது,
காய்ச்சல்,
வாந்தி,
மூட்டு மற்றும் தசைப் பகுதிகளில் வலி எடுப்பது,
உடல் எடை குறைதல்,
வயிற்றுப்போக்கு,
தலைச்சுற்றுதல்,
கண்கள் மற்றும் தோல் மஞ்சளாக மாறுவது,
உடல் சோர்வு முதலியவை இருக்கும்.

இந்த அறிகுறிகள் தவிர, மஞ்சள்காமாலை நோயால் ஏற்படும் அறிகுறிகள் யாவும், அனைத்து வகை ஹெபடைட்டிஸ் வைரஸ்களுக்கும் பொதுவானதே. கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பொறுத்து, ஒருவருக்கு எந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலும். அறிகுறிகள் எதுவும் ஏற்படுத்தாத வைரஸ் வகைகளும் உள்ளன. உதாரணமாக சி வகை வைரஸ், மிகவும் மெதுவாகவே தெரியவரும். சிலருக்கு ஆறு மாத காலங்களிலும் இன்னும் சிலருக்குப் பல வருடங்களுக்குப் பின்னரும்கூட தெரியவரும். இத்தகைய வைரஸ் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும். 

நலமாக வாழ ஹெபடைட்டிஸை ஒழிப்போம்... வாழ்வை இனிதாக்குவோம்.!