News

உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல... மனதின் ஆரோக்கியமும் முக்கியம்! #WorldMentalHealthDay

ல்லாம் இருந்தும் வாழ்வில் மகிழ்ச்சி இல்லையென்றால் பயனில்லை. அத்தகைய, மகிழ்ச்சிக்கு அடிப்படை, ஆரோக்கியம் தான். 

`ஆரோக்கியம்' என்றால் என்ன? `உலக சகோதர மையம்' என்ற அமைப்பு சொல்கிறது... 

'உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் என குறிப்பிட முடியும்' என்கிறது.

ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மனதளவில் மகிழ்ச்சியில்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல. இந்த விஷயம் பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப்போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர். உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியம் குறையும்; அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப் போகும்.

விபத்து, நோய்த் தொற்று, ஜுரம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் என உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுவதைப்போலவே, மனதுக்கும் பல்வேறு தீங்குகள் தினம் தினம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக பிறரது கிண்டல் - கேலிப் பேச்சுகள், உறவினர் மற்றும் நண்பருடன் மனக்கசப்பு, நெருங்கியவர்களின் பிரிவு, விவாகரத்து, தோல்வி, குடும்பத்தில் பிரச்னை போன்ற மன உளைச்சல் தரும் சம்பவங்களைச் சொல்லலாம். இதுதவிர 200-க்கும் மேற்பட்ட மனநோய்கள் உள்ளன. இவையெல்லாம் நம் மனதை தினம்தினம் பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், 'மனம்' எனும் ஒரு விஷயம் கண்ணுக்குத் தெரியாத காரணத்தால், பெரும்பாலும் இவையனைத்தும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. ஆனால், அதனால் ஏற்படும் ஆபத்துகள் பல!

ஒருவருக்கு அடிபட்டு ரத்தம் வந்தாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படுகிறார். ஆனால், அவருக்கு, மன உளைச்சல் / மனச்சோர்வு மற்றும் உணர்வுகள் ஏற்படுத்தும் காயம் போன்றவற்றுக்கு 'அது தானாவே சரியாப் போயிரும்' என பிறரால் அறிவுறுத்தப்படுகின்றன. இதில் இரண்டு பாதிப்புகளின் தீவிரமும் ஒன்றுதான்; ஆனால் முதலாவது கவனிக்கப்படுகிறது. இரண்டாவது கவனிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனம். 

மனநோய் எப்போது கவனிக்கப்படுமென்றால், அதன் தீவிரம் அதிகரித்தாலோ, ஒருவரை பார்க்கும்போதே தெரியுமளவு இருந்தாலோ / மற்றவரைப் பாதிக்கும் பட்சத்திலேயே, இவை கவனிக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான மனநோய்கள், பிறர் பார்த்தால் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளன. நோயால் பாதித்தவர் மட்டுமே அதை உணர்ந்து கஷ்டப்படும் நிலையில் உள்ளன. உதாரணமாக பதற்ற நோயால் பாதிக்கப்பட்டவரை எளிதில் பிறரால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், இந்த மன நோயால் அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. 

சினிமாவிலும், ஊடகங்களிலும் சித்திரிக்கப்படும் மனநோய்போல் உண்மையான மனநோய் வெளிப்படாது. பணியிடங்களில் நால்வரில், ஒருவருக்கு மனநோய் இருக்கலாம் என பல ஆராய்ச்சிகள் சொல்வதைப் பார்த்தால், நம்மைச் சுற்றியுள்ள மற்றும் நம் குடும்பம், உடன் வேலை செய்பவர் என யார் வேண்டுமானாலும், ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டு  அதை வெளியில் சொல்ல முடியாமல் அது மனநோய்தான் என்பதுகூட தெரியாமல் தன் வாழ்க்கையை, மகிழ்ச்சியின்றி துயரத்திலே கடத்திக் கொண்டிருக்கலாம். 

மனநோய்கள் குறித்துப் பல்வேறு தவறான எண்ணங்கள் நம் சமுதாயத்தில் நிலவுகின்றன. இதனாலும், மனநல விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தால் பலரும், மனநோய் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10-15 வருடம் கழித்து, வேறு வழியின்றி டாக்டரிடம் போகும்போது மட்டுமே அதற்கு சிகிச்சை பெற முன்வருகின்றனர். உதாரணமாக மனநலப் பிரச்னைகள் பள்ளிப்படிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்போதும், தற்கொலை முயற்சி, வீடு / பொருள் சேதம் / வன்முறை, விவாகரத்து என பிரச்னை முற்றி உச்சத்தை அடையும்போதும் மட்டுமே உதவி கோரப்படுகிறது. இந்த நவீன யுகத்திலும் சாமியார், மந்திரம், பில்லி சூன்யம் என்று அழைத்துச் செல்லும் அவல நிலையும் இருக்கத்தான் செய்கிறது.

குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் தாக்கும் மனநோயையும், அதன் அறிகுறிகளையும் தெரிந்துகொள்வதே, அதிலிருந்து மீள்வதற்கான முதல் படி. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒருவரின் சிந்தனையில், செயல்பாடுகளில், நடத்தை மற்றும் உணர்வுகளில், பிறரை விட வித்தியாசமோ, தீவிரமோ தெரிந்தால், அது மனநலப்பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி வரும் அறிகுறிகள் ஒருவரிடம் தொடர்ந்து காணப்பட்டால், உடனடியாக, மனநல மருத்துவர் (Psychiatrist) அல்லது மனநல நிபுணர் / உளவியலாளரிடம் (Psychologist) அழைத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இல்லாதபட்சத்தில், பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி, அவரது குடும்பம் மற்றும் அவர் வேலை பார்க்கும் இடம் என எல்லாவற்றையும் பாதித்துவிடும். பெற்றோருக்கு மனநோய் இருந்தால், பிள்ளைகளின் வளர்ப்புமுறை பாதித்துவிடும். மேலும், திருமண முறிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும். நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபட முடியும். அப்படிப்பட்டோர் தங்கள் உணவு, துக்கம், உடற்பயிற்சிப் பழக்கம் போன்றவற்றைச் சரியாகச் செய்வார்கள். ஆனால், சிகரெட் / குடி போதைப் பழக்கத்தை தவிர்த்து விடுவார்கள். அப்படி இருந்தால்தான் தன் குடும்பத்தை சரிவர வழிநடத்த முடியும். சமூக விஷயங்களில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும். எனவே, இன்றிலிருந்தாவது விழிப்புஉணர்வு அடைந்து மனநலம் பேணுவோம், வாழ்வை சிறக்கச் செய்வோம்!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொது அறிகுறிகள்:

பெரியவர்கள்:

1. தெளிவற்றச் சிந்தனை

2. நீடித்திருக்கும் கவலை அல்லது எரிச்சல்

3. மாறிவரும் அதிக மகிழ்ச்சி / அதிக கவலை

4. மிகுந்த / தேவையில்லாத பயம், சோகம் அல்லது பதற்றம்.

5. தனிமையை நாடுவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுவது.

6. உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவது

7. அளவுக்கு அதிகமான கோபம் / குற்ற உணர்வு

8. இல்லாத விஷயத்தைப் பார்ப்பது /யாரோ தம் காதில் பேசுவது போன்று உணர்தல்

9. அன்றாடப் பிரச்னைகளையும் செயல்பாட்டையும்கூட சமாளிக்க முடியாமல் திணறுதல்

10. தற்கொலை எண்ணங்கள்

11. பல மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியாத உடல்கோளாறுகள். உதாரணமாக எரிச்சல் கொண்ட குடல் நோய் (Irritable Bowel Syndrome)

12. அளவுக்கதிகமான கட்டுப்படுத்த முடியாத மது / போதைப் பழக்கம்

13. எதிலும் நாட்டமின்மை

14. திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யும், விரும்பத்தகாத எண்ணங்கள் / திரும்பத் திரும்ப ஒரே செயலைக் கட்டுப்பாடின்றி பதற்றத்துடன் செய்வது. உதாரணமாக அடுப்பை அணைத்து விட்டாமா? என பலமுறை சரிபார்ப்பது / கையை கழுவிக் கொண்டேயிருப்பது

15. காரணமில்லாமல் மற்றவர்மீது சந்தேகப்படுவது

16. எல்லாவற்றுக்கும் மற்றவர்மீது சார்ந்திருப்பது

17. தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல்

18. ரொம்பவும் சுத்தம் பார்ப்பது

19. தொடர்ந்து பாலியல் எண்ணங்களோ / ஆசையோ இல்லாமலிருத்தல்

20. பாலியல் தொடர்பில் வெறுப்பு அல்லது கணவரையோ / மனைவியையோம் அது சம்பந்தமாக தவிர்ப்பது.

21. வழக்கத்துக்கு மாறான பாலியல் விருப்பங்கள்: உயிரில்லாத பொருள்கள் ஆண் பெண்ணாக, பெண் ஆணாக உடை மாற்றுதல், மற்றவர்கள் /தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்தல், அடுத்தவரின் படுக்கை அறையை எட்டிப்பார்த்தல்,  ஆரோக்கியமற்ற முறையில் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுபவர்கள்.

டீன் ஏஜ் வயதினர் 10 - 18 வயது

1. பள்ளி செயல்திறனில் மாறுதல், திடீரென மதிப்பெண் குறைதல்.

2. தினசரி செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போவது

3. உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்

4. உடல்ரீதியான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுதல்

5. பள்ளிக்குச் செல்லாமலிருத்தல், திருடுதல், பொருள்களை சேதப்படுத்துதல், அதிகாரத்துக்கு கட்டுப்படாமலிருத்தல்

6. உடல் எடையைக் குறித்த மிகுந்த பயம் / பதற்றம்

7. பசியின்மை மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் கூடிய நீடித்திருக்கும் எதிர்மறை மனோநிலை

8. அடிக்கடி கோபப்படுதல்

9. கட்டுப்படுத்த முடியாத போதை / குடிப்பழக்கம்

10. பிடித்த விஷயத்தில் நாட்டமில்லாமல் போவது

11. குறிப்பிட்ட வயதுக்கு பின்னரும் கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கழித்தல்

12. திரும்பத் திரும்ப வரும் துன்புறுத்தும் எண்ணங்கள், திரும்பத் திரும்ப கையைக் கழுவுவது மற்றும் சரிபார்ப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்பாடுகள்.

சிறு குழந்தைகள் (5 முதல் 10 வயது வரை)

1. பள்ளி செயல்திறனில் மாற்றம் ஏற்படுதல்

2. முயற்சியெடுத்தும் குறைந்த மதிப்பெண் பெறுதல்

3. அதிகமான கவலை / பதட்டம் /பயம்

4. ஓரிடத்தில் உட்கார முடியாமல் நிலைக் கொள்ளாமலிருத்தல் (Hyperactive)

5. தொடர்ந்து வரும் கெட்ட கனவுகள்

6. தொடர்ந்து நிர்வாகத்துக்கு பணிந்து போகாமலிருத்தல் மற்றும் வன்முறை செயல்பாடுகளில் ஈடுபடுதல்.

7. அடிக்கடி எரிந்து விழுதல் / கோபப்படுதல் (Temper tantrums)

8. கவனம் செலுத்த முடியாத நிலை (கவனச் சிதறல் - poor concentration)

9. கற்றலில் உள்ள குறைபாடுகளான எழுதுவது, படிப்பது கணக்கு போடுவது போன்றவற்றில் ஏற்படும் குறிப்பிட்ட பிரச்னைகள் (Learning Disabilities)

கைக்குழந்தைகள்: (5 வயதுக்கு கீழ்)

1. வளர் மைல்கற்களான தவழ்வது, உட்காருவது, நடப்பது, பேசுவது போன்ற விஷயங்களில் பிற குழந்தையைவிட தாமதமாவது.

2. எவ்வளவு முயற்சி எடுத்தும் புது விஷயங்களை கற்றுக் கொள்ள முடியாத நிலை. உதாரணமாக ரைம்ஸ், புது வண்ணங்கள்

3. சுற்றி உள்ள உலகத்தில், மனிதர்களில் ஆர்வம் கொள்ளாமல் இருத்தல்; ஆனால், உயிரில்லா பொருள்களுடன் ஆழ்ந்திருத்தல்

4. வார்த்தைகளையும் ஒலியையும் தொடர்புபடுத்த முடியாமல் போவது

5. திரும்பத் திரும்ப கை அல்லது விரல்களை அசைப்பது

6. அம்மாவின் கண்ணைப் பார்க்காமலிருத்தல், சிரித்தால் திரும்ப பதிலுக்கு சிரிக்காமலிருத்தல்

7.பேசத் தொடங்குவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலிருத்தல்

8. ஒருவர் சொல்வதைப் பின்பற்ற இயலாமை (not able to follow directions)