Animals

உலகில் இருக்கும் 3458 வகை பாம்புகளில் எத்தனை விஷத்தன்மையுள்ளவை? #WorldSnakeDay

உலகில் மிகவும் விசித்திரமான பிராணி மனிதன்தான் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது. சின்னஞ்சிறிய புழு முதல் மிகப்பெரிய யானை வரையிலான அத்தனை உயிர்களுக்குமான இருப்பிடமாக திகழ்கிறது இப்பூவுலகு. இதில் வாழ்வதற்கு மனிதனுக்கு இருக்கும் உரிமைகள் அத்தனையும், புழு, பூச்சிகள் முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. ஒன்றின் கழிவு ஒன்றின் உணவு என்ற சித்தாந்தப்படி, ஒவ்வொரு உயிருக்குமான வாழிடம், உணவு என அனைத்தையும் உருவாக்கிக்கொடுத்திருக்கிறது இயற்கை. 'இந்த கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்' என இயற்கை வரையறுத்துள்ள லட்சுமணக்கோட்டை, அடிக்கடி மீறுவது மனிதன் மட்டும் தான். எந்த இனமும் அரிதி பெரும்பான்மையாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தவளையை பாம்பு தின்கிறது. பாம்பை, கழுகு தின்கிறது. இப்படி நடந்தால்தான் பல்லுயிர் பெருக்கம் பலப்பட்டு, உயிர்சங்கிலி உடையாமல் காக்கப்படும். ஆனால், மனிதன் தனக்கு நன்மை செய்யும் உயிரினங்களை மட்டும் விட்டு விட்டு, தீமை செய்யும் உயிரினங்களை அழிப்பதில் வெகு முனைப்பு காட்டுகிறான். அந்த வகையில் மனிதனின் எதிரி உயிரினங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவை பாம்புகள். 

மனிதன் தோன்றுவதற்கு பன்னெடுங்காலத்துக்கு முன்தோன்றியவை பாம்புகள். இத்தனை யுகங்கள் கடந்த பிறகும் பாம்புகள் மீதான பயம் மட்டும் மனிதர்களுக்கு நீங்கவே இல்லை. பயத்தின் உச்சகட்டம் பணிந்து போதல். அதன் அடிப்படையில் தான் பாம்புகளை தெய்வமாக வழிபடுகிறோம். ஆனால், நேரில் பாம்பை பார்த்தால் அடித்துக்கொல்ல துடிக்கிறோம். முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் மனிதனோ? 

மனிதர்கள் நினைப்பது போல, பாம்புகள் அத்தனை அபாயகராமவை அல்ல. அவை மனிதர்களைக் கண்டு பயந்து ஓடுகின்றன. உலகளவில் 3,458 வகை பாம்பு வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதில் 600 வகை பாம்புகளே நஞ்சுள்ளவை. அதிலும் 200 வகையான பாம்புகள் மட்டுமே மனிதனை கொல்லும் அளவுக்கு விஷமுள்ளவை. இந்தியாவை பொறுத்தவரை நான்கு வகைகள் மட்டுமே மனிதனைக் கொல்லும் விஷம் உள்ளவை.  பாம்புகள் வசிக்கும் இடங்கள் என நாம் நினைக்கும் இடங்களில் கூடுதல் கவனமாக இருந்தால் போதும். மின்சாரம் தொட்டால் ஆளையே காலிசெய்து விடும். அதற்காக மின்சாரத்தை பயன்படுத்தாமலா இருக்கிறோம். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறோம். அதுப்போலத்தான் பாம்புகளும். நாம் பாதுகாப்புடன் இருந்தால் பாம்புகளால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை.உழவனின் நண்பன் மண்புழுக்கள் மட்டுமில்லை. பாம்புகளும் தான். நெல் விளைச்சலில் 20 சதவிகிதத்தை காலி செய்கின்றன எலிகள். அந்த எலிகளை பைசா செலவில்லாமல் அழித்து விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்க உதவியாக இருக்கின்றன பாம்புகள். உண்மையில் பாம்புகள் தேடிப்போய் மனிதனை தொந்தரவு செய்வதில்லை. தன்னை தாக்க வரும்போதும், இரைக்காகவும் மட்டுமே அவை பிற உயிர்களை தாக்குகின்றன. சிங்கம், புலியைக் கூட காப்பாற்ற நினைக்கும் விலங்குநேசர்களும் பாம்புகளுக்காக வாய் திறப்பதில்லை. பாம்புகளும் இந்த உலகில் வாழ்வதற்கான உரிமையுள்ளவை என்பதை நினைவில் நிறுத்தி அவற்றிற்கு தொல்லை கொடுக்காமல் இருந்தாலே போதும். 

இதைப் பற்றி பேசிய திண்டுக்கல் வன அலுவலர் வெங்கடேஷ், '' இன்று உலக பாம்புகள் தினம். உயிர்சூழலில் பாம்புகள் முக்கியமானவை என்பதால் சர்வதேச அளவில் ஜுலை 16-ம் தேதி உலக பாம்புகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த, முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவற்றிற்கு கால்கள் இல்லை என்றாலும், உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரும். சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. உலகில் உள்ள மொத்த பாம்புகளில், விஷமுள்ள பாம்புகள், ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே. இந்தியாவைப் பொறுத்தவரை, நாகப்பாம்பு, கட்டுவிரியன், சுருட்டை, கண்ணாடி விரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். உலகளவில் இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் பாம்பு கடியால் இறக்கிறார்கள். ஆனால், பாம்பு கடித்து இறப்பவர்களில் விஷம் ஏறி இறப்பவர்களை விட, அதிர்ச்சியால் இறப்பவர்களே அதிகம். உலகில் அதிக நச்சுப்பாம்புகள் உள்ள ஆஸ்திரேலியாவில், பாம்புகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கே பத்துபேர் இருந்தால் அதிகம். ஆக, பாம்புகளை பற்றிய விழிப்பு உணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். பாம்பை கண்டதும் உடலில் அட்ரீனல் சுரந்து, பயமும் பதட்டமும் அதிகமாகி வேகமாக ஓடத்தோன்றும். இப்படி பாம்புகளை பற்றிய பயத்தை, 'ஒப்கிடோபோபியா' என்கிறார்கள். தவளைகள், எலிகள் இருக்கும் இடங்கள், பாம்புகள் வசிக்கும் இடங்கள் ஆகியவற்றில் போதுமான பாதுகாப்புடன் சென்றாலே பாம்பு கடியில் இருந்து தப்பி விடலாம். குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளை பார்த்தால் உடனே அடித்துக்கொள்ளக் கூடாது. வனத்துறையினருகு தகவல் கொடுத்தால் முறைப்படி, பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 படி அனைத்து பாம்புகளும் பட்டியல் விலங்காக கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. எனவே அவற்றை அடிப்பதோ, கொல்வதோ சட்டப்படி குற்றம். உலக பாம்புகள் தினமான இன்று, நாம் ஒரு உறுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாம்புகளை பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம்  தொந்தரவு கொடுக்க மாட்டோம். குடியிருப்பு பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை கொல்லாமல், அவற்றை வனத்துறை மூலமாக முறையாக வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதியை ஏற்றுக்கொண்டால், உயிர்சங்கிலி இன்னும் உறுதியாகும்'' என்றார்.