``மழைக்காடுகளைக் காப்பாற்றிய பழைய செல்போன்கள்!" - அமேசான் காட்டின் ஆச்சர்ய கதை

இரா.கலைச் செல்வன்
சுற்றுச்சூழல்

அந்தக் கரும்பலகையில் இரண்டு மரங்கள், நான்கு துண்டுகளாக வரையப்பட்டிருந்தன. அதாவது, ஒரு மரம் இரண்டாக வெட்டப்பட்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தள்ளி மான்கள், ஜாகுவார்கள் வரையப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கு அது காடு என்பது புரியும். அந்த ஆசிரியை அவர்களின் மொழியில் கேட்கிறார்...

``இது நம்ம காடு தானே?"

"ஆமா..."

``இப்படி இந்த மரங்கள வெட்டி, திருட்டுத்தனமா எடுத்துப் போறது சரியா?"

``இல்ல...தப்பு...தப்பு..." பல குழந்தைகளும் தலைகளை ஆட்டி பதில் சொல்கின்றனர். 

``இப்படி மரங்களை வெட்டினால் என்னவாகும்?"

``நமக்குப் பழங்கள் கிடைக்காது." ஒரு சிறுமி.

``மான்களுக்கும், ஜாகுவார்களுக்கும் வீடு இருக்காது." 

``மழை வராது."

``சாமி அழும்."

``மரம் பாவம். செத்துப் போயிடும்."

இப்படியாகப் பல பதில்கள். ஆனால், ஒவ்வொரு பதிலும் அந்தக் குழந்தைகளுக்கு, அந்தக் காட்டின் மீதிருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக இருந்தன. ஈரம் நிறைந்திருக்கும் பிரேசிலின் மழைக்காடுகள் அவை. பிரேசிலின் ``பாரா" (Para) மாநிலத்திலிருக்கும் ``ஆல்ட்டோ ரியோ குவாமா பூர்வகுடி நிலப்பகுதி" (Alto Rio Guama Indigenous Land). 2014 க்கு முன்னர் வரை தங்கள் வனங்களைப் பாதுகாக்க மிகப் பெரிய போராட்டங்களை நடத்தியது இந்த மண்ணின் பூர்வகுடி இனம் ``டெம்பே" (Tembe). 

``டெம்பே"வின் குழந்தைகள் சொல்லும் பதில்கள் எதுவும் பள்ளியில், பாடப்புத்தகங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்டவை அல்ல. அது தலைமுறை, தலைமுறையாக அவர்களின் மரபணுக்களிலேயே கடத்தப்பட்ட பாடம். காட்டின் தரையிலிருந்து தலைநிமிர்ந்துப் பார்த்தால், வானத்தைப் பார்ப்பது சற்று கடினம்தான். சமயங்களில்...வானம் பச்சை நிறம் பூண்டிருப்பதாகக் கூடத் தோன்றலாம். ஒவ்வொரு மரமும் அத்தனை உயரம். ஒவ்வொரு மரமும் அத்தனை அகலம். ``டெம்பே"வுக்கு அது கடவுள். குலசாமி. அந்தக் காட்டைத் தவிர அவர்களுக்கு வாழ்வில் எது ஒன்றும் பெரிது கிடையாது. 

``டெம்பே" அல்லாத மற்றவர் அனைவருக்கும் அது பணம், டாலர்கள். கொட்டிக் கொடுக்கும் புதையல். அரசின் பக்கம் கை நீட்டுபவர்களுக்குக் கையூட்டுகளைக் கொடுத்து, அந்த மரங்களை வெட்டி உலகின் பல நாடுகளுக்குக் கொண்டு சேர்க்க அங்கு மிகப்பெரிய கொலை, கொள்ளை கும்பல் உண்டு. அவர்களை எதிர்த்துப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள் ``டெம்பே".  

``டெம்பே"வின் நிலத்தில் ஒரு பக்கம் மிகப்பெரிய ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்தன. குறிப்பாக, ``மெஜெர் ராஞ்ச்" (Mejer Ranch) எனும் பண்ணை பெரியளவிலான நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. அதற்கு எதிராக 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்ட ரீதியிலும், அறப் போராட்டங்களின் வழியாகவும் இன்னும் பல வழிகளிலுமாக ``டெம்பே" மக்கள் போராடினர். இறுதியாக, 2014ம் ஆண்டின் தொடக்கத்தில் பண்ணையைக் காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அந்த மாலை நேரம், சிவப்பு நிற பழத்தைப் பிழிந்து அந்தச் சாற்றை அவர்களின் முகத்தில் பூசிவிடுகிறார் அந்தப் பெண். கிழிந்த ஜீன்ஸ் பேன்ட், அங்கங்கு ஓட்டையாகிப் போயிருக்கும் சட்டை...சிலர் சட்டை போடாமல் வெறும் உடம்பில் இருந்தனர். தலையைச் சுற்றி, சிவப்பு நிற பட்டை ஒன்று. அது ஏதோ பறவையின் இறகால் செய்யப்பட்டிருப்பது போலிருந்தது. அப்படியாக ஒரு 30 பேர் இருக்கிறார்கள். அவர்களை ``டெம்பே போராளிகள்" (Tembe Warriors) என்றழைக்கிறார்கள். 

ஒரு பழைய லாரி வந்து நிற்கிறது. ஒவ்வொருவரும் துப்பாக்கிகளோடு அதில் ஏறுகிறார்கள். ஒரு பெண்ணும் அந்த வண்டியில் ஏறுகிறார். அவர் தன் பையில் நிறைய தோட்டக்களை வைத்திருக்கிறார். அதை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கிறார். அவர்கள் அந்தக் காட்டுப் பகுதியைச் சுற்றி வருகிறார்கள். அங்கு சில வண்டிகளின் தடங்கள் இருப்பதைப் பார்க்கிறார்கள். அது புதிய தடம். நேற்று அது அங்கில்லை. 

தங்களின் வண்டியை நிறுத்துகிறார்கள். இறங்கி மெதுவாக நடக்கிறார்கள். சில சத்தங்களைக் கூர்ந்து கேட்டு அதை நோக்கிப் போகிறார்கள். அங்கு 6 பேர் இருக்கிறார்கள். வெட்டப்பட்ட மரத்தை அறுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு டிராக்டர் நின்று கொண்டிருக்கிறது. அவ்வளவு பேரையும் சுற்றி வளைக்கிறார்கள். 

அந்தப் பெண், முன் வருகிறார். 

``நீங்களும் மனிதர்கள்தானே...உங்களுக்கும் குடும்பம் எல்லாம் உண்டுதானே. நாங்கள் என்றாவது உங்கள் வீட்டுக்கு வந்து கொள்ளையடித்திருக்கிறோமா? நீங்கள் ஏன் எங்கள் காட்டை அழிக்கிறீர்கள். எங்கள் மரங்களைத் திருடுகிறீர்கள். யாரோ ஒரு முதலாளிக்காக எங்களைப் பகைத்துக் கொள்கிறீர்கள்? " அவர்கள் அமைதியாக அந்தப் பெண்ணைப் பார்த்தபடி நிற்கிறார்கள். அதில் ஒருவன் முறைக்கிறான்.

``ஒரு பெண் இப்படிப் பேசுகிறாளே என்று நினைக்கிறீர்களா? நான் `டெம்பே' பெண். எனக்கு பயம் கிடையாது. என்னை உங்களால் ஒன்றும் செய்திட முடியாது. இதுதான் உங்களுக்கான கடைசி எச்சரிக்கை. அடுத்த முறை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்." என்று மிரட்டிவிட்டு நகர்கிறார் புயுர் டெம்பே (Puyr Tembe). அந்த இனத்தின் முதல் பட்டதாரி. வழக்கறிஞர். 

இப்படியாகத்தான் தங்கள் காடுகளைக் காக்க அவர்கள் போராடிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காட்டின் நிலப்பரப்பு மிக அதிகம். அவர்களால் எல்லாவற்றையும் தடுக்க முடிவதில்லை. சட்டவிரோத மரக்கடத்தல் (Illegal Logging) தொடர்ந்துகொண்டேயிருந்தது. 

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பணம் பண்ணும் முதலைகளுக்கு நடுவே, பச்சைகளின் குரலைக் கேட்க வைக்க போராடிக் கொண்டிருந்தார் டொஃபேர் வொய்ட் (Topher White). அவர் ``ரெயின் ஃபாரஸ்ட் கனெக்‌ஷன்" (Rainforest Connection) எனும் அமைப்பைத் தொடங்கினார்.

சில பழைய செல்போன்களை சேகரித்தார். அதில் பல நாள்கள் சார்ஜ் நிலைத்திருக்கும் வகையில், சோலார் பேனல்களை இணைத்தார். இன்னும் சில தொழில்நுட்பங்களை அதோடு இணைத்தார். ஒரு சின்னப் பெட்டியாகத் தோற்றமளித்தது அந்தக் கருவி. அதை எடுத்துக் கொண்டு இந்தோனேசியாவின் போர்னியோ காடுகளுக்குச் சென்றார். அங்கு அதை சோதித்துப் பார்த்தார். 

சில மரங்களில் அந்தக் கருவியைப் பொருத்தினார். அந்தக் கருவியோடு சில செல்போன்களை இணைத்தார். அது அந்தப் பகுதியின் சத்தங்களை மிகக் கூர்மையாகப் பதிவு செய்தது. பலவித ஒலி அமைப்புகளையும் அது வேறுபடுத்திக் காட்டியது. மரம் அறுப்பது, மரம் வெட்டுவது போன்ற சத்தங்களைக் கேட்கும் போது, அந்த ஒலியின் அளவைக்கொண்டு அதை இனம் பிரித்தது. அதை, அந்தக் கருவியோடு இணைக்கப்பட்டிருக்கும் செல்போன்களுக்குத் தகவல்களாக அனுப்பியது. அதைக்கொண்டு, காடுகளில் எந்தப் பகுதிகளில் மரம் வெட்டப்படுகிறது என்ற தகவலை எளிதாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்தச் சோதனை வெற்றியடைந்த சமயம், பிரேசிலின் டெம்பே மக்களின் பிரச்னைக் குறித்து கேள்விப்பட்டு அங்குப் போனார் டொஃபேர் வைட். 

டொஃபேர் வைட் (Topher White).

அந்த மக்களோடு உரையாடினார். அவர்களிடம் தொழில்நுட்பத்தின் அவசியத்தை உணர்த்தினார். தொழில்நுட்பத்தோடு இணைந்து செயல்பட்டால், இன்னும் சிறப்பான முறையில் தங்கள் காடுகளைப் பாதுகாக்க முடியும் என்று பேசினார். அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். மழைக்காட்டின் பல இடங்களில், மரங்களில் அந்தக் கருவி பொருத்தப்பட்டது. 30 டெம்பே போராளிகளின் செல்போனோடும் அது இணைக்கப்பட்டது. 

மாதங்கள் கடந்தன. ஆண்டுகள் ஆயின. இன்று அங்கு இந்தத் தொழில்நுட்பம் பெரியளவில் அவர்களுக்கு உதவியிருக்கின்றன. முழுமையாகச் சட்டவிரோத மரக்கடத்தலைத் தடுக்க முடியாவிட்டாலும் கூட இது அவர்களின் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளை எளிமைப்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து புயுர் டெம்பே  இப்படியாகச் சொல்கிறார்... 

``எங்களுக்குத் தெரியும்...இங்கு பல பேர் செய்யக் கூடாத பல விஷயங்களை மிகவும் பிடிவாதத்தோடு செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் நம்புகிறோம். ஒரு நாள் எங்கள் காடுகளின் உயிராதாரங்களைக் கொள்ளையடிக்கும் இந்தக் கும்பலை மொத்தமாக அழிப்போம். அன்று இந்த மழைக்காடுகளின் மரங்கள் நிம்மதியாக மழையில் நனையும்." 

(Rainforest Connection குறித்து இன்னும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள : https://rfcx.org/home) 
 

SCROLL FOR NEXT