environment

துணி சோப்புக்கு மாற்றாகும் இயற்கை பயோ என்சைம்... வீட்டிலே செய்வது எப்படி?

"வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், கண்மாய், ஏரிகள், நிலத்தடி நீர் போன்ற நீர்நிலைகள் விஷமாக, கெமிக்கலை இவற்றில் கலக்கும் தொழிற்சாலைகள் மட்டும் காரணமல்ல. நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணி துவைக்கும் சோப், சோப் பவுடர் உள்ளிட்ட விஷயங்களும்தாம். அதனால், நிலத்தையும் நீரையும் காபந்து பண்ண இயற்கை பயோ என்சைம் தயாரிப்பை எளிமையாக்கி, அதைப் பயன்படுத்தும்படி எல்லோருக்கும் விழிப்பு உணர்வு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறேன்" என்று இயற்கை மீதான கரிசனத்தோடு பேசுகிறார் சரோஜா.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் முதன்மை சிஷ்யைகளில் ஒருவர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா. உணவே மருந்து, தற்சார்பு வாழ்வியல், இயற்கை விவசாயம் என்று நம்மாழ்வார் கருத்துகளைக் கழனியிலும் களத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துபவர். அதை மற்றவர்களுக்கு விழிப்பு உணர்வு பாடமாக்குபவர். நம்மாழ்வார் விதையாக விழுந்திருக்கும் வானகத்தில் சரோஜாவுக்கு சமீபத்தில் விருது கொடுத்து கௌரவித்தார்கள். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

``பத்து வருஷமா இயற்கை விவசாயம் பார்த்துட்டு வருகிறேன். அதுக்கு காரணம், நம்மாழ்வார் அய்யாவைச் சந்தித்ததும் அவரை குருவாக ஏற்றுக்கொண்டதும்தான். அவர் இன்னைக்கு நம்மோடு இல்லைன்னாலும் அவரது கருத்துகள் இன்றைக்கு எட்டுத்திக்கும் காற்றைப் போல வேகமா பரவிகிட்டு இருக்கு. அவர் வலியுறுத்திய தற்சார்பு வாழ்வியலை நோக்கி எனது அடுத்த அடியை எடுத்து வச்சுருக்கிறேன். துணி துவைக்க ரசாயனம் கலந்த சோப்பைக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம் என்று எனக்குள் உறுத்தல். சோப்பு பவுடரையும் வாங்கிப் பயன்படுத்தி அதில் உள்ள கெமிக்கலோடு கூடிய கழிவுநீரை நீர்நிலைகளில் கலந்துவிடுகிறோம். கிராமங்களில் நேரடியாக ஆறு, குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் போய் துணிகள் துவைத்து, ரசாயன கழிவுநீரைக் கலந்து அந்த விஷநீரை நிலத்தடி நீரிலும் கடல் நீரிலும் கலக்க வைக்கிறோம். அதற்கு முடிவுகட்ட பயோ என்சைம் கரைசலை எளிமைப்படுத்தி, அதை நான் பயன்படுத்துவதோடு, அதை நான் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விளக்கிப் பேசி மற்றவர்களுக்கு விழிப்பு உணர்வு செய்கிறேன். 

இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால், துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது. அந்தத் துணிகளை பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது. இதன் செய்முறை எளிது. தண்ணீர் 1 லிட்டர், நாட்டுச் சர்க்கரை 100 கிராம், எலுமிச்சை பழம் 3 யை எடுத்துக்கணும். ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று எலுமிச்சை பழங்களையும் மிக்ஸியில் அரைத்து ஊற்றி, அதில் நூறு கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து அதிக காலி இடம் உள்ள கண்ணாடிப் பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். அதில் உருவாகும் வாயு வெளியேறுவதற்காகத் தினமும் ஒரு முறை மூடியைத் திறந்து, மறுபடியும் மூடி வைக்கவும். ஏழு நாள்களில் தயாராகிவிடும். இதில், ஒரு பக்கெட் துணிக்கு நூறு மில்லி அல்லது அதற்கு மேல் கொஞ்சம் கலந்து ஊறவைத்துத் துவைக்கலாம். இதைப் பயன்படுத்தி துவைக்கும்போது துணிகளை துவைக்கும்போது நுரை வராது. எனவே, தண்ணீர் குறைவாகச் செலவாகிறது.

நான் ஐந்து லிட்டர் தண்ணீரில் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் மூடிவைத்தேன். உண்பதற்கு வாங்கும் ஆரஞ்சு, மாதுளம் பழங்களின் தோலை அப்படியே அதில் சேர்த்து வருகிறேன். எலுமிச்சை சாறு பிழிந்து பின்னர் அதன் தோலையும் சேர்க்கிறேன். இப்போதும் பயன்படுத்துகிறேன். துவைக்கும்போதே நல்ல மணம். துவைத்து அலசிய பின்னும் தொடர்கிறது.

இதையே தரை துடைக்கவும் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். நீங்களும் பயன்படுத்துங்கள். சோப்பு வாங்கும் செலவு குறையும். எலுமிச்சையில் உள்ள ஆசிட்டுக்கு அழுக்கைப் போக்கும் குணமுள்ளது. அதில் நாட்டுச் சர்க்கரையை கலப்பதால், அது என்சைமாக மாறி, அதன் அழுக்கு நீக்கும் தன்மை கூடுகிறது. குளிக்கக்கூட கடலைமாவு, சீயக்காய்ன்னு கெமிக்கல் இல்லாத பொருள்களைப் பரவலாக பயன்படுத்துகிறோம். ஆனால், துணிகளைத் துவைக்க 90 சதவிகிதம் பேர் கெமிக்கல் அதிகம் உள்ள சோப், பவுடர்களைதான் பயன்படுத்துகிறோம். அதனால், எளிய வகையிலான, அதிகம் செலவில்லாத இந்த பயோ என்சைம் கரைசலை துணிகள் துவைக்கவும், தரைகளைச் சுத்தப்படுத்தவும் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதை நான் எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்வைத்துப் பேசுகிறேன்.

நம் ஒவ்வொருவரின் சிறிய, ஆனால் சீரிய முயற்சியால் இயற்கை காக்கப்படும். செய்வீர்களா?" என்ற கேள்வியோடு முடித்தார்.