`ஒரு கிலோமீட்டரில் 800 டன் கழிவுகள்!’ - குன்னூர் ஆற்றை மீட்கக் களமிறங்கிய உள்ளூர் மக்கள்

சதீஸ் ராமசாமி
சுற்றுச்சூழல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் மையப்பகுதியில் ஓடும் ஆற்றில், ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சேர்ந்துள்ள சுமார் 800 டன் கழிவுகளை 20 நாள்களாகத் தொடர்ந்து அகற்றும் பணியில் உள்ளூர் மக்கள் களமிறங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், அதிக மாசடைந்த ஆறுகளில் ஒன்றாக குன்னூர் ஆறு உள்ளது.வனப்பகுதியில் ஊற்றெடுத்து, தெளிந்த நீராக குன்னூர் நகரை வந்தடைந்து, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நகரின் மையப்பகுதியில் பயணித்து, ஒட்டுமொத்த கழிவையும் சுமந்து கறுப்பு நிறத்தில் சாக்கடை நீராக மாறி, மீண்டும் வனப்பகுதியில் பயணித்து பவானி ஆற்றில் கலக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், ஊட்டி கோடப்பமந்து கால்வாய்க்கு அடுத்தபடியாக மிக மோசமாக மாசடைந்த ஆறாக மாற்றப்பட்டுள்ளது, இந்த குன்னூர் ஆறு.

இந்த ஆற்றின் மிகப்பெரிய சாபம், சுமார் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு நகரின் மையத்தில் பயணிப்பதுதான். ஒரு லட்சம் மக்கள்தொகை கொண்ட குன்னூர் நகரின் குடியிருப்புகள், கடைகள், உணவகங்களின் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், நெகிழிக் கழிவுகள் என பாலத்தில் நடக்கும்போதே குமட்டல் எடுக்கும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. மேலும், கழிவுகளால் நீர் தேங்கி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நீரைப் பருகும் யானை, காட்டு மாடு உள்ளிட்ட விலங்குகளும் பாதிக்கும் நிலை நீடிக்கிறது.

ஒரு காலத்தில் குன்னூரின் அடையாளமாக இருந்த இந்த ஆறு, இன்றைக்கு அவமானமாகவே மாற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில், `கிளீன் குன்னூர்’ என்ற பெயரில் உள்ளூர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள், ஆற்றைத் தூய்மைப்படுத்த முடிவுசெய்து களத்தில் இறங்கினர். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதாலும், தூர் வாரப்படாததாலும் ஆற்றில் இரண்டு அடி ஆழத்துக்கு மேல் கழிவுகள் குவிந்துள்ளது. இதனால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சுமார் 800 டன் கழிவுகள் இருக்கலாம் எனக் கணக்கிட்டு, 50 -க்கும் மேற்பட்டோர் மற்றும் பொக்லைன் இயந்திரமும் கொண்டு ஆற்றைத் தூய்மைப்படுத்திவருகின்றனர்.   

SCROLL FOR NEXT