death

`நான் என்ன விபசாரமா செய்றேன்...?!' - நர்ஸ் ரேணுகாவின் கண்ணீர் நிமிடங்கள்

`நான் என்ன விபசாரமா செய்றேன். அந்த இன்ஸ்பெக்டர் அப்படிப் பேசறார்' எனத் தற்கொலை செய்து கொண்ட நர்ஸ் ரேணுகா, மரணிப்பதற்கு முன்பு தன்னுடைய கணவரிடம் கண்ணீர்மல்கப் பேசும் ஆடியோ வைரலாகிவருகிறது. 

சென்னை திருவேற்காடு போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த நர்ஸ் ரேணுகா இறந்தார். அவருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் நடந்த வாக்குவாதம் செல்போனில் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது. 11 நிமிட அந்த ரெக்கார்டு பதிவில் ரேணுகாவை விசாரணை என்ற பெயரில் போலீஸார் மிரட்டுகின்றனர். இந்த ஆடியோவைக் கேட்டபிறகே இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நர்ஸ் ரேணுகா தற்கொலை சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் செம்பேடு பாபு ஆகியோர் இந்தச் சம்பவத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். ரேணுகாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று அவரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

போலீஸ் நிலையத்தில் ரேணுகாவுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த உரையாடல் இதுதான். 

நர்ஸ்: `என்ன பண்ணினேன் என்று சொல்லுங்க, ஒரு நிமிடம் சார், நான் சொல்வதைக் கேளுங்க. புகார் கொடுத்த பிறகு நீங்கள் என்னிடம் விசாரித்தீர்களா' 

போலீஸ் அதிகாரி: `இதை சுமோட்டாவாக எடுத்து என்னால் நடவடிக்கை எடுக்க முடியும். நான் உன்னுடைய பிரச்னையைச் சொன்னால் நீ மற்றவர்களின் பிரச்னையைச் சொல்கிறாய்.  நான் கேட்கிறதற்கு பதில் சொல்லு' 

 நர்ஸ்: `சொல்கிறேன்' 

போலீஸ் அதிகாரி:  `நான் நினைத்தால் உன்னை உள்ளே வைத்துவிடுவேன். நீயா நானா என்று பாத்துவிடுவோம். புகாருக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு இல்லாத பிரச்னை உனக்கு எதற்கு. நான் கோபப்பட்டால் அவ்வளவுதான். புரியுதா. எனக்கும் தெரியும். சிசிடிவி பதிவைப் போடச் சொல்லட்டுமா உன்னுடைய அட்ரா சிட்டியைப் பாரு. நீ வேண்டும் என்றால் அரசியல்வாதியாக மாறு உன்னை முதலில் திருத்திக் கொள்'    

 நர்ஸ்: `நான் இந்த வாசலிலேயே கொளுத்திக் கொள்வேன்' 
 
 போலீஸார் ஏய். இரு, மகளிர் போலீஸ் எங்கப்பா...

`போலீஸ் நிலையத்தில் வெளியில் வரும் ரேணுகாவை அவரின் கணவர் கஜேந்திரன் `ரேணு இங்கு வா' என்று அழைக்கிறார். அப்போது அங்கு வரும் போலீஸார் ஏன் இப்படி அட்ரா சிட்டி பண்ணுற' என்பதோடு அந்த ஆடியோ முடிவடைகிறது 

இந்த ஆடியோவுக்குப் பிறகு தீக்குளித்த ரேணுகாவை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். அப்போது அவர் பேசியதும் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது. அதில், ரேணுகா, `என்னுடைய சாவுக்கு இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், புகார் கொடுத்த பெண் மற்றும் அ.தி.மு.க.வில் உள்ள சிலர்' என்று சொல்கிறார். அப்போது `அய்யோ வலிக்கிறது' என்று ரேணுகா கதறியபோது அருகில் இருந்தவர் தண்ணீரை எடுத்து ரேணுகாவின் உடலின் மீது ஊற்றுகிறார். அப்போது  `ஊற்றாதீர்கள், தீக்காயம் புண்ணாகிவிடும்' என்று உரையாடல் நடக்கிறது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரேணுகாவுக்கு அவரின் கணவர் கஜேந்திரன் ஆறுதல் சொல்கிறார். அப்போது, ரேணுகா, `நான் என்ன ப்ராத்தல் தொழிலா செய்கிறேன்' என்று கண்ணீர்மல்கச் சொல்கிறார். இந்த ஆடியோ 4 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டரின் கருத்தைக் கேட்க முயன்றோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.