kids

தன்யஶ்ரீயை ஞாபகம் இருக்கிறதா..?! இப்போது எப்படி இருக்கிறார்?

ழைய வண்ணாரப்பேட்டையின் அந்தச் சின்ன சந்தில் நுழைந்து, வீட்டு நம்பரைத் தேடி வண்டியை நிறுத்தினேன். அந்த வரிசை வீடுகளின் முதல் வீட்டுக்குள்ளிருந்து, இரண்டு அடி குட்டி மின்னல்போல ஓடிவந்து நின்றாள், அந்த 5 வயது சிறுமி. 'தன்யா ஓடாதே... அடிப்படப்போகுது ராஜாத்தி' எனப் பதற்றக் குரலுடன் பின்னாடியே வருகிறார் சிறுமியின் அத்தை. அப்பல்லோ மருத்துவமனையில் ஏற்கனவே என்னைப் பார்த்திருப்பதால், ''வாங்க வாங்க'' என வரவேற்றார். வாசலில் குதித்து விளையாடிய குழந்தை தன்யஶ்ரீயையும் விடாப்பிடியாகத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

இந்த ஆண்டு ஜனவரி இறுதியில், ரைம்ஸ் சொல்லியபடி தாத்தாவுடன் தெருவில் சென்றுகொண்டிருந்தாள் சிறுமி தன்யஶ்ரீ. அப்போது, நான்காவது மாடியிலிருந்து தற்கொலை செய்துகொள்வதற்காகக் குதித்த சிவா என்பவர், சிறுமி தன்யஶ்ரீ மீது விழ, தரையோடு தரையானாள் குழந்தை. அதன்பிறகு நடந்ததை தமிழ்நாடே அறியும். அந்தச் சின்னக் குருத்து, அப்பலோ மருத்துவமனையில் கோமாவில் கிடந்தது. பெற்ற மகளின் நிலைமையை நினைத்து அழுவதா, மருத்துவச் செலவுக்குப் பணம் புரட்ட அலைவதா எனத் தெரியாமல் பித்துப் பிடித்து நின்றார் தன்யஶ்ரீ அப்பா ஶ்ரீதர். 

மருத்துவர்கள், நண்பர்கள், தன்யஶ்ரீ வசித்த ஏரியாவாசிகள், காவல்துறையினர், அரசாங்கம் என எல்லோரும் பண உதவி செய்ய, தமிழ்நாடே அந்தக் குழந்தைக்காகப் பிரார்த்தனை செய்தது.  பிப்ரவரி முதல் வாரத்தில் சென்று பார்த்தபோது, உடைந்த காலில் மாவுக்கட்டு, முன்மண்டை ஓடு நீக்கப்பட்ட தலையில் பெரிய பேண்டேஜ் என உறங்கிக்கொண்டிருந்தாள் தன்யஶ்ரீ. மகளின் பாதத்தை மென்மையாக வருடியபடி அழுதழுது சோர்ந்திருந்தார் ஶ்ரீதர். தன்யஶ்ரீயின் அத்தை சாந்திதான் என்னிடம் பேசினார். நீக்கப்பட்ட மண்டையோட்டை 3 மாதங்கள் கழித்துத்தான், ஆபரேஷன் செய்து பொருத்த வேண்டும் எனச் சொல்லியிருந்தார்.

சில நாள்களுக்கு முன்னால், ''பாப்பாவுக்கு மறுபடியும் ஆப்ரேஷன் செஞ்சு, மண்டையோட்டை வெச்சுட்டாங்க. அது சரியா செட்டாயிடுச்சாம். தன்யா மெதுமெதுவா விளையாட ஆரம்பிச்சுட்டா'' என்ற சந்தோஷ செய்தியைச் சொன்னார் ஶ்ரீதர். இந்த இரண்டாவது ஆப்ரேஷனிலிருந்தும் மீண்ட குழந்தை நலமாக இருக்கிறாள் என அறிந்ததும், தன்யஶ்ரீயைப் பார்க்க வீட்டுக்குச் சென்றேன். துள்ளி ஓடிவந்த தன்யஶ்ரீயப் பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

வீட்டுக்குள் அவளுக்காகத் தனியாக குட்டி பெட் இருந்தது. மாத்திரை, மருந்துகள், பழங்கள், சத்து பானங்கள் என அந்தச் சின்னஞ்சிறு வீடு, தன்யஶ்ரீயின் ஆரோக்கிய மையமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வகுப்பு படிக்கும் அக்கா யாஷிகாவின் மீது விளையாட்டாகப் பாய்கிறாள் தன்யஶ்ரீ. அம்மா யமுனாதேவி 'பாப்பா பார்த்து, சுவத்துல இடிச்சுக்கப்போறே' எனப் பதறுகிறார். 'அப்படித்தான் குதிப்பேன் போ' என்று அம்மாவுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு, அப்பாவின் தலையில் ஏறி தலைமுடியை கொத்தாகப் பிடிக்கிறாள். 'ம்... குதிரை ஓடு' என விரட்டுகிறாள். 'அப்பாவுக்கு வலிக்கும்' எனப் பரிந்துவரும் அத்தையை, 'அதெல்லாம் வலிக்காது. நீ போய் நக பாலிஷ் வாங்கிட்டுவா' எனச் செல்லமாக விரட்டுகிறாள். மொத்தத்தில், நிமிடத்துக்கு நிமிடம் சேட்டை சிட்டுக்குருவியாக மாறியிருக்கிறாள் தன்யஶ்ரீ.

தன்யஶ்ரீ மீது விழுந்த சிவா பற்றி விசாரித்தால், ''இங்கேதான் ரெண்டு தெரு தாண்டி அவன் சொந்தக்காரங்க வீடு இருக்கு. அந்த வீட்டு மாடியிலிருந்துதான் குதிச்சான். இப்போ அங்கே இல்லைன்னு போலீஸ் சொல்றாங்க. அப்படியே தேடி அரெஸ்ட் பண்ணாலும், 10 நாள் ரிமாண்ட் வெச்சு, கவுன்சலிங் கொடுத்து அனுப்பிடுவாங்களாம். அவனும் இதை வேணும்னு செய்யலையே. எனக்கு என் பொண்ணு பிழைச்சு வந்துட்டா. அது போதும். அந்த ஆளை மறுபடியும் பார்த்துடக்கூடாதுன்னு கடவுளை வேண்டிட்டிருக்கேன். அதனால், எதுவும் தெரியாது'' என்கிறார் தன்யஶ்ரீ அப்பா ஶ்ரீதர்.

''பாப்பாவுக்கு இன்னும் ரெண்டு மாசத்துக்கு தலையில் எந்த இன்ஃபெக்‌ஷனும் வரக்கூடாதுன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. தலைக்கு அதிகம் தண்ணி ஊத்தறதில்லை. இனிப்பு, காரம் சாப்பாட்டுல அதிகமா சேரக்கூடாதாம். நிறைய பழம் சாப்பிட சொல்லியிருக்காங்க'' என்ற அத்தையை இடைமறித்து, ''அத்தை தலைக்கு ஊத்துவாங்க. அம்மா உடம்புக்கு ஊத்துவாங்க'' என்று அழகாக  விளக்கம் கொடுக்கிறாள் தன்யஶ்ரீ.

சரஸ்வதி பூஜை முதல் மறுபடியும் பள்ளிக்குக் கிளம்பப் போகிறாளாம் தன்யஶ்ரீ. மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பி, மாடியிலிருந்து குதித்த சிவாவின் சொந்தக்காரர் வீடு இருக்கும் ஏரியாவுக்குச் சென்றேன். சிவா என்று ஒருவர் இருந்ததையும், நடந்த சம்பவங்களையும் எதுவுமே தெரியாது என்று சாதித்தார் வீட்டுக்குச் சொந்தக்காரர். இதைப் பார்த்துக்கொண்டிருந்த வாழை மண்டிக்காரர் ஒருவர், 'அவன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்குப் போயிட்டான்ம்மா. பாவம் அந்தக் குழந்தை, எப்படி இருக்குதோ தெரியலை' என்றார்.

''தன்யஶ்ரீ நல்லா இருக்கா பெரியவரே'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.