miscellaneous

மியான்மர் ராணுவத்தின் 18 கணக்குகள் மற்றும் 52 பக்கங்களைத் தூக்கிய ஃபேஸ்புக்..!

மியான்மரில் உள்ள சிறுபான்மை மக்கள் மீது அரசு அச்சுறுத்தலை நிகழ்த்திக்கொண்டிருப்பது வாடிக்கை. அந்த வகையில் கடந்த வருடம் ராக்கின் ரோகிங்யா சிறுபான்மையினர் மீது மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதனால் 25,000 மக்கள் வரை கொல்லப்பட்டதாகவும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வங்கதேசத்துக்குத் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் உண்மை அறியும் குழு கடந்த மார்ச் மாதத்திலிருந்து மியான்மர் ராணுவத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியது. அந்த வகையில் ரோகிங்யா சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு முழுக்க முழுக்க மியான்மர் இராணுவமே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம், தலைமை கமாண்டர் கணக்கு உட்பட 18 கணக்குகளையும் 52 பக்கங்களையும் இப்போது நீக்கியுள்ளது.

நம்ம ஊரில் மட்டுமல்ல; மியான்மரிலும் ஃபேஸ்புக் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தகவல் பரிமாற்றத்துக்கான முக்கிய மீடியம். இதைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பல கடுமையான பதிவுகளும், வெறுப்பைத் தூண்ட கூடிய பதிவுகளும் பகிரப்படுகின்றன என்றும், கூட்டு வன்முறை போன்ற பல மதக் கலவரங்கள் ஃபேஸ்புக் மூலம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

ஐ.நா குழுவின் புலனாய்வுப்படி மியான்மர் ராணுவத்தின் தலைமை கமாண்டர் மின் ஹாங் ஹிலாங் தான் ராக்கினில் நடந்த இனப்படுகொலை, போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற பல குற்றங்களுக்கு முக்கியக் காரணம் என்றும், இவர் பல இன வெறுப்பூட்டும் இச்செயல்களுக்கு ஃபேஸ்புக்கை முதன்மையாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் தொடர்புடைய ஆறு பக்கங்களும் ஆறு கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இவரை மொத்தம் 12 மில்லியன் பேர் பின் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

``எந்தவோர் இன, மத ரீதியான சர்ச்சை பதிவுகளையும் அனுமதிக்காமல் தடுப்பதையே விரும்புகிறோம்" என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். ஒவ்வொரு வெறுப்பு பிரசாரங்களையும் கவனித்துத் தடுத்து வருகிறோம் என உறுதியளித்தது. ஆனால், மியான்மர் ராணுவம் தொடர்பான பக்கங்கள் அனைத்தும் ரோகிங்யா எதிர்ப்பு பிரசாரம் செய்து தவறாக மக்களைத் தூண்டுவதாகக் காட்டப்படுகிறது. இவற்றில் ராணுவத்தின் அதிகாரபூர்வ பக்கங்களுள் ஒன்றான Myawaddy என்ற தொலைக்காட்சியும் அடங்கும்.

மேலும், `பெங்காலி சட்ட விரோத வந்தேறிகள், `பெங்காலி தீவிரவாதிகள்' போன்ற தவறான சித்திரிப்புகள் மூலம் ராக்கின் ரோகிங்யாவினரை பொதுமக்கள் முன்னிலையில் பயங்கரவாதிகளாக காட்ட மியான்மர் ராணுவம் (டாட்மடா) தொடர்ந்து ஃபேஸ்புக்கை பயன்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் கூறுவதாவது, `மக்கள் ஒவ்வொருவரையும் இணைப்பதே எங்கள் நோக்கமாகும். ஆனால், மியான்மர் ராணுவம் அதற்கு நேரெதிராக மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்குடன் இதைப் பயன்படுத்தியதால் அவர்களின் பக்கம் தடை செய்யப்படுகிறது'.

இதைத் தொடர்ந்து மியான்மர் அதிபர் ஆங் சன் சூகி யும் ராக்கின் கலவரத்தில் தவறான மற்றும் வன்முறையைத் தூண்டும் செய்திகளைப் பரப்பினார். ,அவரின் பக்கம் முடக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், ஐ.நா குழுவின் அறிக்கையின் படி `சூகி கலவரத்தில் நேரடியாக ஈடுபடவில்லை, (அவரும்) கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத் தவறிவிட்டார்' என்பதால் அவரின் பக்கம் தப்பித்தது.

ஃபேஸ்புக் தவறுகள் அங்கெங்கு சில நடந்துகொண்டிருக்கும்பொழுது வேலியே பயிரை மேய்வதா என்ற கதையாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா சர்ச்சை உலகம் முழுக்க வெடித்தது.ஃபேஸ்புக் நிறுவனமே தன் பயனாளிகளிடம் திருடுகிறது. இதனால் பாதுகாப்பு இல்லை. இது ஆபத்து. அனைவரும் இதைவிட்டு வெளியேறுங்கள் (*Quit Facebook) என்ற கோரிக்கை உலகம் முழுவதும் பேசப்பட்டது. அப்பொழுது தான் செய்த அனைத்து தவற்றுக்கும் மன்னிப்பு கேட்டு, இனிமேல் இப்படி நடக்காது என்று உறுதியளித்த ஃபேஸ்புக், பின் பல கட்டுப்பாடுகளை உருவாக்கியது. போலி கணக்குகளைக் களையெடுப்பது, சாமானியனானாலும் சர்ச்சையைக் கிளப்பும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பது என்று பயணித்துக் கொண்டுள்ள நிறுவனத்துக்கு அடுத்த கெட்ட பெயரை மியான்மர் ராணுவம் வாங்கித் தந்துள்ளது. அதற்கு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.