politics

`முக்கொம்பு அணை திடீரென உடைந்தது ஏன்?' - முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கம்

மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வருவது போல முக்கொம்பு அணை திடீரென உடைந்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22-ம் தேதி இரவு 8 மணியளவில் திருச்சி முக்கொம்பு பகுதியில் உள்ள கொள்ளிடம் மேலணை அதிக அளவிலான வெள்ளத்தால் 9 மதகுகள் அடுத்தடுத்து அடித்துச் செல்லப்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி வந்தவர் முக்கொம்பு கொள்ளிடம் மேல் அணையை ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், சரோஜா, திருச்சி மாவட்டச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி.குமார்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம், ரத்தினவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் பரமேஸ்வரி, செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிக அளவிலான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைத்துள்ளன. இதைச் சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் நான்கு தினங்களில் இந்தப் பணிகள் முடிவடையும். பொதுவாகக் கொள்ளிடம் மேலணையில் நான்கு நாள்கள் மட்டுமே அதிக அளவு தண்ணீரை தேக்கி வைப்பார்கள். ஆனால், இந்த முறை காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முதல் தடவை எட்டு நாள்களும், இரண்டாவது முறை 12 நாள்களும் அதிக அளவிலான தண்ணீரைத் தேக்கிவைத்திருந்த சூழல் ஏற்பட்டது. அதிக அளவிலான தண்ணீர் தாக்கியதால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக பழைமையான இந்த அணை உடைந்திருக்கிறது. அதிக அளவில் மணல் எடுத்ததால் உடைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இது மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வருவது போல முக்கொம்பு அணை திடீரென உடைந்துள்ளது.
ஆறுகளில் மணல் சட்டத்துக்குட்பட்டு அள்ளப்படுகிறது. ஏதோ அ.தி.மு.க ஆட்சியில் மட்டும்தான் அதிகளவில் மணல் அள்ளப்படுவதாகப் பொய்யான மாயை உருவாக்குவது தவறானது. தமிழக அரசு ஆறுகளில் மணல் அள்ளுவதைப் படிப்படியாக குறைத்து வருகிறது. அது மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், மணல் அள்ளுவதற்குப் பதிலாகக் எம்சாண்ட் மணல் விற்பனையை ஊக்கப்படுத்துகிறது. உண்மை இப்படி இருக்க நாங்கள்தான் மணல் கொள்ளையை ஊக்குவிப்பதாகச் சித்திரிப்பது தவறானது. கடந்த வருடம் கிருஷ்ணகிரி அணையில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறுவது தவறு. இது அப்பகுதியில் அதிக அளவிலான ரசாயனக் கழிவுகள் ஆறுகளில் கலக்கப்படுவதால் அந்த அணையின் ஒரு ஷட்டர் பாதிக்கப்பட்டது. அதை உடனே சரி செய்து விட்டோம். இதேபோல் தமிழகம் முழுக்க இருக்கும் அணைகளையும் தன்மை குறித்து ஆய்வு செய்ய முயற்சி எடுத்து வருகிறோம். உடைந்த  முக்கொம்பு கதவணைகளுக்குப் பதிலாக 410 கோடியில் புதிய கதவணைகளைக் கட்ட உள்ளோம். 325 கோடி ரூபாயில் கொள்ளிடத்திலும், அதன் அருகில் உள்ள அய்யன் வாய்க்காலில் 85 கோடியில் கதவணைகள் கட்டப்படும். இதற்கான ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணிகள் ‌ சுமார் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.
முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்கக் கூடாது என்பதற்காகவே கேரள அரசு தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது. கேரளா முதல்வர் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்காததால்தான் கேரளாவில் பெரும் அழிவைச் சந்தித்தது எனக் கூறுவது உண்மைக்கு மாறானது. முல்லைப்பெரியாறு இருக்கும் ஒரு பகுதியில் மட்டும் பாதிப்பில்லை. அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையினால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு மீது கேரளா தவறான குற்றச்சாட்டை வைக்கிறது. கேரளாவின் 80 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இடுக்கி மாவட்ட வெள்ளத்துக்கு முல்லைப் பெரியாற்றில் அதிக அளவில் தண்ணீர் திறப்பு எனத் தமிழக அரசு மீது கேரளா அரசு தவறான தகவலை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது" என்றார்.