`சிறுத்தை கற்றுக் கொடுத்த பாடம் இது!' - அதிர்ச்சி காட்சிகளை வெளியிட்ட வன அதிகாரி #ViralVideo

சத்யா கோபாலன்
Leopard
Leopard
வைரல்

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகில் பெரும்பாலும் செல்போன்கள் இல்லாத கைகளையே பார்க்க முடியாது. நாம் பயன்படுத்தும் செல்போனில் பல நல்ல விஷயங்கள் உள்ளன, அதனால் நிறைய தீங்கும் ஏற்படுகின்றன. குறிப்பாக செல்ஃபியை சொல்லலாம். வித்தியாசமான முறையில் செல்ஃபி எடுக்க முயற்சி செய்து உயிரை விட்டவர்கள் பலர் உள்ளனர். அதிலும் சிலர் விலங்குகளுக்கு மிக அருகில் சென்று புகைப்படம் எடுத்து மாட்டிக்கொள்கின்றனர்.

Leopard

அப்படி ஒரு வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. சாலையின் ஓரத்தில் சிறுத்தை ஒன்று அடிபட்ட நிலையில் உள்ளது. சிறுத்தையைக் கண்ட பொதுமக்கள் அதை அருகில் சென்று பார்க்கின்றனர். கூட்டத்தில் ஒருவர் சிறுத்தைக்கு மிக அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயல்கிறார். இதனால் கடுப்பான அந்தச் சிறுத்தை ஒரே பாய்ச்சலில் அவரை கீழே தள்ளித் தாக்க முயல்கிறது. அதற்குள் அந்த மனிதர் சிறுத்தையின் பிடியிலிருந்து தப்பிவிட்டார்.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ எங்கு எடுக்கப்பட்டது போன்ற எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஷ்வான், இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதனுடன், `சிறுத்தை ஒன்று வாகனம் மோதி காயமடைந்த நிலையில் உள்ளது. ஆனால், ஒரு மனிதர், அந்த சிறுத்தைக்கு மிக அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்கிறார்.

இறுதியில், விலங்குகளின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்று அவருக்குத் தக்க பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டது அந்தச் சிறுத்தை. இந்த மனிதரைப்போல யாரும் இருக்காதீர்கள். காட்டு விலங்குகளுக்குத் தகுந்த இடைவெளி தேவைப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். `அடிபட்ட சிறுத்தை தற்போது நலமாக உள்ளதா’, `அனைத்து உயிர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்’ என்பன போன்ற கருத்துகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Advertising
Advertising
SCROLL FOR NEXT