கல்குவாரியில் கோர விபத்து; உடல் சிதறி உயிரிழந்த 10 கூலித்தொழிலாளிகள் - ஆந்திராவில் சோகம்!

சே. பாலாஜி
விபத்து
விபத்து
விபத்து

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் கசப்பாடு கிராமத்தை அடுத்த மாமிலப்பள்ளே கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கற்கள் வெட்டி எடுக்கும் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த குவாரியில் ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்து வந்து கூலித்தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பொதுவாக, கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்க மிகவும் விலைக் குறைவான வெடி மருந்து பொருளான ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில், மாமிலப்பள்ளே தனியார் குவாரியிலும் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், குவாரிக்கு கடப்பா மாவட்டம் பத்வேலில் இருந்து லாரியில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி பொருட்கள் நேற்று காலை கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஜெலட்டின் குச்சிகள்

கல்குவாரிக்கு வந்தடைந்த ஜெலட்டின் குச்சிகளை குவாரி தொழிலாளர்கள் நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் இறக்கி அடுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக ஜெலட்டின் குச்சிகள் மற்றும் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியிருக்கிறது. கண் இமைக்கும் நொடி நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் குவாரியில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளர்கள் இடர்பாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். சம்பவம் தொடர்பாகத் தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு துறையினர் இடர்பாடுகளில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்பலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காணும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆங்காங்கே சிதறிக் கிடந்த உடற்பாகங்களைச் சேகரித்ததில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கடப்பா காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் மற்றும் அவரது தலைமையிலான போலீசார் விபத்து தொடர்பாக சக ஊழியர்கள் மற்றும் குவாரி உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கல்குவாரியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக விளக்கமளித்த காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன், ``கல்குவாரியில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் காங்காப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரசாந்த்(35), புலிவெந்துலா கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த்(40), சுப்பாரெட்டி(40), பாலகங்கா(35) மற்றும் வெங்கட்ரமணா(25) உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததால் அடையாளம் காணுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் தான் விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இறந்தவர்கள் அனைவரும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து

குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT